தேடுதல்

Talitha Kum அமைப்பினர் (கோப்புப் படம்) Talitha Kum அமைப்பினர் (கோப்புப் படம்) 

மனித வர்த்தகத்திற்கு எதிராக முழங்கும் Talitha Kum அமைப்பு

Talitha Kum அமைப்பு மனிதக் கடத்தல், சுரண்டல் மற்றும் அனைத்து வகையான அடிமைத்தனத்தையும் ஒழிப்பதிலும் அயராது உழைக்கும் அயராது உழைத்து வருகின்றது

செல்வராஜ் சூசைமாணிக்கம்

மனித வர்த்தகத்தை எதிர்த்துப் போராடும் துறவுசபை சகோதரிகளின் உலகளாவிய வலையமைப்பான Talitha Kum, மனித வர்த்தகத்தால் பாதிக்கப்பட்ட யாரையும் விட்டுவிடாமல் அனைவருக்கும் உதவும் விதமாக அனைத்துலகக் கொள்கைப் பரப்புரையில் இணைந்துள்ளதாகக் கூறியுள்ளது.

ஜூலை 30, வரும் ஞாயிறன்று, மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக நாள் கடைபிடிக்கப்படுவதையொட்டி, Talitha Kum அமைப்பினர், இந்த இணையவழி கொள்கைப்பரப்பு முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

"மனித வர்த்தகத்திற்கு ஆளான ஒவ்வொருவரையும் சென்றடையுங்கள் யாரையும் விட்டுவிடாதீர்கள்" என்பது 2023-ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாக தேர்வுசெய்யப்பட்டுள்ள நிலையில், Talitha Kum, அமைப்பினர் மனித வர்த்தகத்தை எதிர்த்துப் போராடும் இளம் பங்கேற்பாளர்களுடன், ஒருவரையொருவர் சந்தித்து சிறந்த நடைமுறைகள் மற்றும் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்வதற்காக, ஜூலை 28, இவ்வெள்ளியன்று, மனித வர்த்தகம் குறித்த இணையதள கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

அண்மையில் 5 மொழிகளில் இவ்வமைப்பின் ஆண்டறிக்கை வெளியிட்ப்பட்டுள்ள வேளை, அதன் ஒருங்கிணைப்பாளரான அருள்சகோதரி Abby Avelino அவர்கள், கோவிட் -19 தொற்றுநோயின் தாக்கம், பல நாடுகளில் நிகழும் மோதல்கள் போன்ற ஒன்றோடொன்று தொடர்புடைய பல நெருக்கடிகள் காரணமாக கடந்த ஆண்டு மிகவும் சவாலான ஒன்றாக அமைந்தது என்று கூறியுள்ளார்.

மேலும் போர்களும் காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளும் மியான்மார், இலங்கை, சிரியா, புர்கினா பாசோ, வெனிசுலா, உக்ரைன் போன்ற நாடுகளில் வாழும் இலட்சக்கணக்கான மக்களுக்குத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Talitha Kum என்பது, அனைத்துலகத் துறவற சபைத் தலைவர்களால் உருவாக்கப்பட்ட (UISG), உரோமையை மையமாகக் கொண்டு செயல்படும் ஓர் அமைப்பாகும். இது மனிதக் கடத்தல், சுரண்டல் மற்றும் அனைத்து வகையான அடிமைத்தனத்தை ஒழிப்பதில் அயராது உழைத்து வருகின்றது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 July 2023, 14:10