தேடுதல்

பொதுக்காலம் 17-ஆம் ஞாயிறு பொதுக்காலம் 17-ஆம் ஞாயிறு 

பொதுக்காலம் 17-ஆம் ஞாயிறு : ஞானத்தால் தேர்ந்துதெளிவோம்!

ஞானம் என்னும் இறைவனை நமது வாழ்வின் மையமாகக் கொள்ளும்போது, பணம், பதவி, புகழ், செல்வாக்கு ஆகிய உலகக் காரியங்கள் ஒன்றுமில்லாமல் மறைந்து போய்விடும்.
பொதுக்காலம் 17-ஆம் ஞாயிறு : ஞானத்தால் தேர்ந்துதெளிவோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்   I. 1 அர 3: 5, 7-12     II.  உரோ 8: 28-30   III.  மத்  13: 44-52)

ஊரின் ஒதுக்குப்புறமாக காட்டை ஒட்டி ஒரு ஆசிரமம் இருந்தது. மக்கள் வசிக்கும் இடத்திலிருந்து சற்றுத் தொலைவிலிருந்த அந்த ஆசிரமத்தில் ஒரே ஒரு குரு மட்டுமே தங்கியிருந்தார். அந்தக் குருவைச் சந்திக்க பகல் நேரத்தில் ஏராளமான மக்கள் வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவரும் தன்னிடம் வரும் மக்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைப்பார். ஒரு நாள் குருவைக் காண்பதற்காக அவரது முன்னாள் சீடர் ஒருவர் வந்தார். அன்று முழுவதும் அவர் குருவின் அருகிலேயே இருந்து, அவரதுப் படிப்பினைகளைக் கேட்டார். இதனால் இருவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை. மாலை நேரம் முடிந்து இருள் சூழத் தொடங்கிவிட்டது. சீடர் அங்கிருந்து புறப்படத் தயாரானார். குரு அவரைத் தடுத்து, “இரவு நேரமாகி விட்டது. நீ இங்கேயே தங்கிவிட்டு, நாளைக் காலையில் புறப்பட்டுச் செல்’ என்றார். ஆனால் சீடரோ  மறுத்து, "இல்லை குருவே! எனக்கு ஒரு முக்கியமான பணி இருக்கிறது. அதனால் நான் இன்று இரவே இங்கிருந்து போயாக வேண்டும்" என்றார். அதற்கு மேல் அவரைத் தடுத்து நிறுத்த விரும்பாத குரு, "நல்லது, பத்திரமாகப் போய் வா’" என்று விடை கொடுத்தார். ஆசிரமத்தின் வாசல் வரை வந்த சீடர் தயங்கியபடி நின்றார். வெளியே இருள் பரவிக் கிடந்தது. ஆசிரமத்தின் வெளிச்சத்தைத் தவிர, வேறு எங்கும் ஒரு துளி கூட வெளிச்சம் இல்லை. அப்போது சீடர் தடுமாறுவதைக் கவனித்த குரு, உள்ளே போய் ஒரு விளக்கை கொண்டு வந்து சீடரின் கையில் கொடுத்து, "புறப்படு" என்றார். தன்னுடைய மனநிலையை சரியாகக் கணித்துவிட்ட குருவைக் கண்டு பெருமிதம் கொண்ட சீடர், அவருக்கு நன்றி கூறிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றார்.

அவர்  சிறிது தூரம் சென்றதுமே, "நில்!" என்றார் குரு. சீடர் நின்றதும், அவரருகே வந்த குரு, அவர் கையில் இருந்த விளக்கின் தீபத்தை வாயால் ஊதி அணைத்துவிட்டு, “இப்போது புறப்படு” என்றார். சீடர் திகைத்துப் போய் குருவைப் பார்த்தார். அவரதுப் பார்வையில் இருந்த கேள்வியைப் புரிந்து கொண்ட குரு அவரிடம், “எப்போதும் இரவல் வெளிச்சம் உனக்கு நெடுந்தூரம் துணைக்கு வராது. உன் விளக்கு உனக்குள்ளேயே இருக்கிறது. அது எரியாதவரை, இந்த விளக்கால் எந்தப் பயனும் இல்லை” என்று விளக்கினார். அதாவது, உன் உள்ளத்திலுள்ள கடவுள் என்னும் ஒளியை நீ உணரும்போது உனக்கு வெளியே வெளிச்சம் தேவைப்படாது. உன் கையில் விளக்குத் தேவை என்றால், உன்னில் உறைந்துள்ள கடவுளை நீ அறியவில்லை என்று பொருள். வாழ்க்கை முழுதும் இதே இருள், இதே பாதை இருக்கத்தான் செய்யும். ஆனால் உன்னிலுள்ள கடவுள் என்னும் ஓளியின் துணைகொண்டு மட்டுமே உன் பயணத்தைத் தொடர முடியும்" என்றார். சீடர் இப்போது மன உறுதியுடன் அங்கிருந்து நடக்கத் தொடங்கினார். கடவுளைத் துணையாகக் கொண்டவர்கள் எப்போதும் எந்த விளக்கையும் எதிர்பார்ப்பதில்லை. விளக்குடன் முன்னேறியவர்களை விட, உள்ளத்தில் கடவுள் என்ற ஒளியின் துணைகொண்டு முன்னேறியவர்கள்தாம் அதிகமான அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள். ஒவ்வொருவருக்குள்ளும் இறைவனே என்றுமுள்ள ஒளியாக இருக்கின்றார். இறைவன் உறைந்துள்ள அந்த அகமே நமது விளக்கு. அதுதான் நமக்கு இறுதிவரை ஒளி தந்து வழி காட்டும் என்பதை நாம் எப்போதும் மறந்துவிடக் கூடாது.

பொதுக்காலத்தின் பதினேழாம் ஞாயிறை இன்று நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். இன்றைய வாசகங்கள் ஞானமாக விளங்கும் இறைவனை மட்டுமே நாம் தேர்ந்தகொள்ளவேண்டும் என நமக்கு அழைப்பிவிடுக்கின்றன. ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்; தூயவராகிய அவரைப்பற்றிய உணர்வே மெய்யுணர்வு (காண்க நீமொ 9:10) என்று நம் வேதநூல் விளக்குகிறது. நம்மிடையே இறையச்சம் இருக்குமேயானால் இறைஞானம் ஊற்றெடுக்கும். அப்போது எது இறைவனுக்கு உகந்ததோ, எது இறைவனுக்குப் பெயரும் புகழும் மகிமையும் சேர்க்குமோ அதனை மற்றும் தெளிந்து தேர்ந்துகொள்ள முன்வருவோம். ஞானத்திற்குப் பேர்போனவர் சாலமோன் அரசர். இன்றைய முதல் வாசகம் அதனை உறுதிப்படுத்துகிறது. அந்நாள்களில் கிபயோனில் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். “உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!” என்று கூறியபோது, "இதோ! உமக்கென நீர் தெரிந்து கொண்ட திரளான மக்களிடையே அடியேன் இருக்கிறேன். அவர்கள் எண்ணிக் கணிக்க முடியாத மாபெரும் தொகையினர். எனவே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும்" என்று வேண்டுகிறார் சாலமோன். இதனால் கடவுள் அவர்மீது மிகுந்த பேரன்புகொண்டவராக, “நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். "இதோ! நான் இப்பொழுது நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதுமில்லை. அந்த அளவுக்கு ஞானமும் பகுத்தறிவும் நிறைந்த உள்ளத்தை உனக்கு வழங்குகிறேன். இன்னும் நீ கேளாத செல்வத்தையும் புகழையும் உனக்குத் தருவேன். ஆகையால், உன் வாழ்நாள் முழுவதிலும் உனக்கு இணையான அரசன் எவனும் இரான்." என்று சாலமோனைக் குறித்து புளங்காகிதம் அடைகின்றார் கடவுள்.

அறிவும் ஞானமும்

'அவரு பெரிய ஆளுங்க... அவருக்கு எல்லாம் தெரியும்... அவர் எல்லாவற்றையும் கற்றறிந்தவர். அவரு பெரிய ஞானிங்க...' என்று கூறி பெருமையடைவர் பலர். ஆனால், இது முற்றலும் தவறு. காரணம் அறிவாளிகள் அனைவரையும் நாம் ஞானிகள் என்று கூறிவிட முடியாது. அறிவுக்கும் ஞானத்திற்கும் அதிக வேறுபாடுகள் இருக்கின்றன. ஞானத்திலிருந்து அறிவு பிறக்கிறது. ஆனால், அறிவிலிருந்து ஞானம் பிறப்பதில்லை. படிப்பறிவு இல்லாத எத்தனையோ பேர் ஞானிகளாக வாழ்ந்ததுண்டு. அதேவேளையில் படித்த எத்தனையோ பேர் அறிவற்ற செயல்களை செய்ததுண்டு. இதனை எத்தனையோ உலகியல் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. அதனால்தான், ‘நீ ஒரு படித்த முட்டாள்’ என்றும், ‘நீ ஒரு படிக்காத மேதை’ (ஞானி) என்றும் பெரியவர்கள் கூறுவார்கள். சுருக்கமாகக் கூறவேண்டுமெனில், ‘எனக்கு எல்லாமே கடவுள்தான் என்று வாழ்வது ஞானத்திலிருந்து பிறக்கிறது’ எனக்குக்  கடவுளே தேவையில்லை. ஏனென்றால் எனக்கு அறிவு இருக்கிறது என்று வாழ்வது அறிவிலிருந்து பிறக்கிறது. ஞானம் கடவுளை மட்டுமே நம்புகிறது. அறிவு தன்னை மட்டுமே நம்புகிறது. ஞானத்தை அதாவது, கடவுளை மட்டுமே நம்பும்போது ஆவிக்குரிய செயல்கள் பிறக்கின்றன. அறிவை மட்டுமே நம்பும்போது ஊனியல்புக்குரிய செயல்கள் அதாவது தீய ஆவிக்குரிய செயல்கள் பிறக்கின்றன. ஞானத்தை மட்டுமே நம்பும்போது அது புரிதலைக் கொண்டுவருகிறது. அறிவை  மட்டுமே நம்பும்போது அது விமர்சனங்களை மட்டுமே கொண்டு வருகிறது, அறிவு பலவேளைகளில் அவசரப்படுத்தும், ஆத்திரமூட்டும்,  பகைமையை உண்டாக்கும். ஆனால், ஞானம் அன்பையும், அமைதியையும், சகோதரத்துவத்தையும், ஒன்றுபடுத்தலையும் கொண்டுவரும். அறிவு இவ்வுலகக் காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தூண்டும். ஞானம் கடவுளுக்குரிய காரியங்களில் மட்டுமே மனதைச் செலுத்தத் தூண்டும். ஆகவே, இந்த வேறுபாடுகளை நன்கு உணர்ந்துகொண்டவர்கள் மட்டுமே ஞானமாகிய கடவுளைப் பற்றிக்கொள்கின்றனர். இதனை சாலமோன் நன்கு உணர்ந்திருப்படியால்தான் தனக்கு ஞானம் மட்டுமே போதும் என்றெண்ணி அதைக்கொடுக்குமாறு இறைவனிடம் மன்றாடினார்.

நான் மன்றாடினேன்; ஞானம் எனக்குக் கொடுக்கப்பட்டது. நான் இறைவனை வேண்டினேன்; ஞானத்தின் ஆவி என்மீது பொழியப்பட்டது. செங்கோலுக்கும் அரியணைக்கும் மேலாக அதை விரும்பித் தேர்ந்தேன்; அதனோடு ஒப்பிடும்போது, செல்வம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன். விலையுயர்ந்த  மாணிக்கக்கல்லும் அதற்கு ஈடில்லை; அதனோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்; அதற்குமுன் வெள்ளியும் களிமண்ணாகவே கருதப்படும். உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக அதன்மீது அன்புகொண்டேன்; ஒளிக்கு மாற்றாக அதைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் அதன் சுடரொளி என்றும் மங்காது. ஞானத்தோடு எல்லா நலன்களும் என்னிடம் வந்து சேர்ந்தன. அளவற்ற செல்வத்தை அது ஏந்தி வந்தது. (காண்க சாஞா 7:7-11) என்று ஞானத்தின் சிறப்பைப் போற்றுகிறது சாலமோனின் ஞான நூல். இன்றைய நற்செய்தியில் புதையல், முத்து, வலை ஆகிய தலைப்புகளின்கீழ் மூன்று உவமைகளைக் கூறுகின்றார் இயேசு. இதற்கு முந்தய பிரிவுகளில், விதைப்பவர் உவமை, வயலில் தோன்றிய களைகள், கடுகு விதை, புளிப்பு மாவு என உவமைகள் வழியாகவே பேசிய இயேசு தற்போது இந்த மூன்று உவமைகளையும் கூறி இவ்வுவமைப் பொழிவு பகுதியை நிறைவு செய்கின்றார்.  

01. புதையல் உவமை

முதலாவதாக, “ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்” என்கின்றார் இயேசு. இன்றும் மனிதர் வாழ்வில் புதையல் என்பது வியப்புக்குரியதாகவும் விலைமதிக்க முடியாததாகவும் இருப்பதை அறிகின்றோம். புதையல் குறித்து எத்தனையோ வியப்பூட்டும் கதைகள் காணக்கிடக்கின்றன. தொல்பொருள் ஆராய்ச்சிகளின்போதெல்லாம் புதையல் குறித்து அறியவருகிறோம். எனவேதான், விண்ணரசை இந்தப் புதையலுக்கு ஒப்புமைப்படுத்துகின்றார் இயேசு. அப்படியென்றால், யார் ஒருவர் இந்தப் புதையலின் அருமையை அறிந்திருக்கிறாரோ அவர் மட்டுமே இதனை தனதாக்கிக்கொள்ள முற்படுவர் என்கின்றார் இயேசு. இதன்காரணமாகவே, “உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்” (காண்க பிலி 3:8) என்று கூறுகின்றார் புனித பவுலடியார்.

புதையல் உவமை
புதையல் உவமை

02. முத்து உவமை

இரண்டாவதாக, “வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்” என்கின்றார் இயேசு. இங்கே புதையலைக் கண்டுபிடிக்கச் சொல்லும் இயேசு, நல்முத்தை தேடச் சொல்கிறார்.  முத்துக்குளித்தல் பற்றி  அண்மையில் காணொளிக்காட்சி ஒன்றை இணையத்தில் பார்த்தேன். அது முத்துகுளிக்கும்போது எடுக்கப்பட்ட தத்ரூபக் காட்சி.. இதனை நான் முழுமையாகப் பார்த்து முடித்தபோது, நல்முத்தின் மேன்மையையும் அதேவேளையில், அதைத் தேடிச் சேர்ப்பதிலுள்ள சவால்களையும் பேராபத்துகளையும் காண முடிந்தது. அதனால்தான் விண்ணரசை நல்முத்துக்கு ஒப்பிடுகிறார் இயேசு.

03. வலை உவமை

மூன்றாவதாக, “விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்” என்கின்றார் இயேசு. நாம் கடற்கரைக்குப் போனோமேயானால் இக்காட்சியைக் கண்கூடாகக்  காணமுடியும். மேற்கண்ட மூன்று உவமைகளையும் விண்ணரசுக்கு ஒப்பிடும் இயேசு, இறுதியாகக் கூறும் வலை உவமையில் உலக முடிவில் நிகழும் கடவுளின் தீர்ப்பைப் பற்றியும் எடுத்துரைக்கின்றார். இதுகுறித்து இதே நற்செய்தியில் பிற்பகுதியில் 'மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு' என்ற தலைப்பில் இன்னும் விரிவாக எடுத்துரைக்கின்றார் இயேசு (காண்க மத் 25:31-46).  

ஆகவே, இந்த மூன்று உவமைகள் வழியாக, விண்ணரசு அல்லது இறையாட்சி என்பது விலைமதிக்க முடியாத, உயர்வானப் புதையலுக்கு ஒப்பானது என்பதை எடுத்துரைக்கும் இயேசு, இவற்றைத் தெளிந்துதேர்வு செய்வதற்கு ஞானம் வேண்டும் என்பதை விளக்குகின்றார். ஆக, சாலமோன் அரசர் மற்றும் புனித பவுலடியாரைப் போன்று ஞானம் என்னும் இறைவனை நமது வாழ்வின் மையமாகக் கொள்ளும்போது, பணம், பதவி, புகழ், செல்வாக்கு ஆகிய இவ்வுலகக் காரியங்கள் அனைத்தும் ஒன்றுமில்லாமல் மறைந்து போய்விடும் என்பதை உணர்வோம். எனவே, நன்மை தீமை பகுத்தறியத் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை நமக்குத் தந்தருளுமாறு இறைவனிடம் இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 July 2023, 13:16