தேடுதல்

விதைப்பவர் உவமை விதைப்பவர் உவமை  

பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு : பன்மடங்கு பயன்தரும் விதைகளாவோம்!

கிறிஸ்துவின் வழியில் நல்ல நிலத்தில் விழுந்த விதைகளாக விருட்சமாகி நூறு மடங்காகவும், அறுபது மடங்காகவும், முப்பது மடங்காகவும் பலனளிப்போம்.
பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு : பன்மடங்கு பலன்தரும் விதைகளாவோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்    I. எசா 55: 10-11   II.  உரோ 8: 18-23   III.  மத்  13: 1-23)

Ottoman என்று அழைக்கப்பட்ட துருக்கிய பேரரசால் 1480-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி கொல்லப்பட்ட 800-க்கும் அதிகமான இத்தாலியர்களை, 2013-ஆம் ஆண்டு, மே மாதம் 12-ஆம் தேதி, ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதர்களாக உயர்த்தினார். 1480-ஆம் ஆண்டு, இத்தாலியின் தென் கோடியில் அமைந்துள்ள Otranto என்ற ஊரை, Ottomon படையினர் முற்றுகையிட்டனர். இருவாரங்கள் நீடித்த இந்த முற்றுகையின்போது, அவ்வூரில் இருந்த அனைவரும் இஸ்லாமிய மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தப்பட்டனர். உயிருக்குப் பயந்து, கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிய ஒரு குரு அவர்களுக்கு அறிவுரை கூறியும், அவ்வூர் மக்கள் மதம் மாற மறுத்தனர். எனவே, அவ்வூரில் இருந்த 15 வயதுக்கு மேற்பட்ட 800 ஆண்களை ஊருக்கருகே அமைந்திருந்த ஒரு சிறு குன்றுக்குக் கொண்டு சென்றனர், படைவீரர்கள். மலையுச்சியில் அவர்களிடம் மதம் மாற இறுதி வாய்ப்பளிப்பதாகக் கூறிய படைவீரர்களிடம், Otranto நகரில் தையல் வேலை செய்துவந்த Antonio Primaldo என்பவர், "நாங்கள் இயேசு கிறிஸ்துவை நம்புகிறோம். அவருக்காக, இறக்கவும் தயாராக இருக்கிறோம்" என்று துணிவுடன் சொன்னார். அவர் காட்டிய துணிவு அங்கு நின்ற அனைவரிடமும் பரவியது. எனவே அவர்கள் அனைவரும் துணிவுடன் மரணத்தை எதிர் கொண்டனர். அன்று, அந்தக் குன்றின் மீது நிகழ்ந்ததாய்ச் சொல்லப்படும் ஒரு மரபுவழி கதையும் உண்டு. அதாவது, அங்கிருந்தோர் அனைவரிலும், Antonio Primaldo அவர்களின் தலையே முதலில் வெட்டப்பட்டது. ஆனால், அவரது உடல் நிலத்தில் சாயாமல் நின்றது. வீரர்கள் அவ்வுடலைத் தள்ளியபோதும், அது அசையாமல் நின்றது. அங்கிருந்த அனைத்து கிறிஸ்தவர்களும் வெட்டி வீழ்த்தப்பட்ட பின்னர், இறுதியில் Antonio அவர்களின் உடல் தரையில் வீழ்ந்ததென்பது மரபுவழிக் கதை.

பொதுக்காலத்தின் 15-ஆம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் இந்நானித்தில் நாயகர் இயேசுவின் நல்விதைகளாய் முளைத்து செழித்து வளர்ந்து நற்பயன் நல்கிடவேண்டுமென நமக்கு அழைப்புவிடுகின்றன. சிறப்பாக, இன்றைய முதல் வாசகமும் மூன்றாம் வாசகமும் ஒன்றாகப் பொருந்திப் போவதைப் பார்க்கின்றோம். இப்போது முதல் வாசகத்திற்கு செவிமடுத்து நமது தியானச் சிந்தனைகளை விரிவுபடுத்துவோம். "மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை." ஆக, இறைவனின் வார்த்தை அதன் நோக்கத்தை நிறைவேற்றுவதுபோல் நமது வார்த்தைகளும் அவ்வாறு இருக்கவேண்டுமென இறைவன் விரும்புகின்றார். இதேகருத்தை நற்செய்தியில் 'விதைப்பவர் உவமை'  என்ற தலைப்பில் அருமையானதொரு உவமை வழியாக நமக்கு எடுத்துரைக்கின்றார் இயேசு. அதாவது, நாம் ஒவ்வொருவரும் இம்மண்ணில் கடவுளால் விதைக்கப்பட்ட நல்விதைகள் என்பதே இதன் பொருள். பொதுவாக, மண்ணில் விதைக்கப்படும் விதைகள் எல்லாமே விருட்சமாகி பலன்தருவதில்லை. மாறாக, அவ்விதைகளில் எவையெல்லாம் இந்த இயற்கைதரும் போராட்டங்களிலிருந்து வெற்றிபெற்று மண்ணில் நிலைத்து நீடித்து வாழ்கிறதோ அவைகள் மட்டுமே பன்மடங்குப் பலன்கொடுக்கும்  என்பது திண்ணம்.

சீடர்கள் இயேசுவிடம் வந்து, “ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?” என்று கேட்டபோது, “விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான், நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன்" என்று விளக்கமளிக்கின்றார் இயேசு. இங்கே 'அவர்கள்' என்பது யாரைக் குறிக்கின்றது என்றால், பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள், தலைமைக்குருக்கள் ஆகியோரைக் குறிப்பிடுவதாக நாம் உணர்ந்துகொள்ளலாம். ஏனென்றால், அவர்கள்தாம், இயேசுவின் போதனைகள் குறித்தும், அவர்தான் உண்மையான மெசியா என்பது குறித்தும் அறிந்துணரவில்லை. அதுமட்டுமன்றி, தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவப் போக்கிலும் அகந்தையிலும் ஊறித்திளைத்திருந்தனர். அருள்தரும் ஆண்டவரின் வார்த்தைகளைக்  கேட்காத வண்ணம் தங்களின் செவிகளை மூடிக்கொண்டனர். ஆனால், இயேசுவின் சீடர்களும், அவரைப் பின்பற்றிய சாதாரண மக்களும் அவரது வார்த்தைகளைக் கேட்டு அவர்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டனர்.

இதன் காரணமாகவே, "உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில், அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன. நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால், அவர்கள் கேட்கவில்லை" என்று தனது சீடர்களைப் பாராட்டுவதுடன், தனது வார்த்தைகளைக் கேட்க மறுத்தவர்களை மறைமுகமாகவும் சாடுகின்றார் இயேசு. இதற்கு ஆதாரமாக, "இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகிவிட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே, கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்" (காண்க. எசா 6:9-10) என்ற இறைத்தந்தையின் வார்த்தைகளை எடுத்துக்கூறி விளக்குகின்றார் இயேசு. இதனைத் தொடர்ந்து விதைப்பவர் உவமைக்கு விளக்கமளிக்கும் இயேசு அதில் நான்கு விதமான மனிதர்களைச் சுட்டிக்காட்டுகின்றார். இப்போது, இவை ஒவ்வொன்றைக் குறித்தும் விரிவாகச் சிந்திப்போம்.

வழியோரம் விதைக்கப்பட்ட விதைகள்

முதலாவதாக, "வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்லுவான்" என்கின்றார். ஒரு புரட்சியாளன் மாபெரும் கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். அவரது உரைக்குப் பின்பு அவரது ஆதரவாளர்கள் அவரிடம், ‘தலைவரே எவ்வளவு பெரிய கூட்டம் பார்த்திறீர்களா? நமது இலட்சியம் நிச்சயம் நிறைவேறப் போகிறது’ என்று பெருமிதத்துடன் கூறினார். அதற்கு அப்புரட்சியாளன், ‘இங்கு வந்தவர்கள் எல்லாருமே நான் சொன்னதையெல்லாம் புரிந்துகொண்டனர் என்று கூறிவிட முடியாது. அப்படியிருந்திருந்தால், இந்நேரம் இங்கே அளப்பரிய மாற்றங்கள் நிகழ்ந்திருந்திருக்க வேண்டும்’ என்று கூறினாராம். ஒருவேளை, இறையாட்சிக் குறித்து இயேசு கூறியதையெல்லாம் அனைவரும் புரிந்திருந்திருந்தால் எவ்வளவோ நலமாய் இருந்திருந்திருக்கும். ஆனால், அது நிகழவில்லை. அதனால்தான், "நான் சொல்வதற்குச் செவி சாய்க்க உங்களால் இயலவில்லை. எனவேதான் நான் சொல்வதை நீங்கள் கண்டுணர்வதில்லை. சாத்தானே உங்களுக்குத் தந்தை. உங்கள் தந்தையின் ஆசைப்படி நடப்பதே உங்கள் விருப்பம்" (காண்க யோவா 8:43-44) என்று யூதர்களைக் கடுமைமாகச் சாடுகின்றார் இயேசு. இன்று நம்மில் எத்தனைபேர் இறைவனின் வார்த்தைகளைக் கேட்டதும் புரிந்துகொள்கிறோம்? என்பதை ஆழமாக எண்ணிப்  பார்க்கவேண்டும்.

பாறைகளில் விழுந்த விதைகள்

இரண்டாவதாக, “பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே, அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள்"  என்கிறார் இயேசு. இங்கே 'வேரற்றவர்கள்' என்ற வார்த்தையை இயேசு பயன்படுத்துகின்றார். ஒரு மரம் எவ்வளதான் பலம் பொருந்தியதாக இருந்தாலும், அதனுடைய வேர் மண்ணில் ஆழமாக ஊன்றியிருக்கவில்லை என்றால் அம்மரம் பலன் தரவும் முடியாது, மண்ணில் நிலைத்து நிற்கவும் முடியாது. அதிலும் குறிப்பாக, பாறைமீது விழும் விதைகள் விருட்சமாகி செழித்து வளரவே முடியாது. அவ்வாறே இறைவார்த்தையைக் கேட்டதும் சில கிறிஸ்தவர்கள் புல்லரித்துப் போவார்கள். நான் கிறிஸ்துவுக்காக அதைச் சாதித்துக்காட்டுவேன், இதைச் சாதித்துக்காட்டுவேன் என்றெல்லாம் உணர்ச்சிவசப்படுவார்கள், புளங்காகிதம் அடைவார்கள். ஆனால், அவர்கள் தன்னிலேயே வேரற்றவர்கள். அதாவது, கிறிஸ்துவில் ஆழமான நம்பிக்கை கொண்டிராதவர்கள். துயரங்களும், வேதனைகளும் சூழும் வேளைகளில் நம் நாட்டு அரசியல்வாதிகளைப் போல இவர்கள் கட்சி மாறக்கூடியவர்கள். இதன் காரணமாகவே, "என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்" (காண்க மத் 7:21) என்று எச்சரிக்கின்றார் இயேசு.

முட்செடிகளுக்கிடையே விழுந்த விதை

மூன்றாவதாக, "முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்க மாட்டார்கள்" என்கின்றார் இயேசு. துன்ப துயரங்களும், வேதனை சோதனைகளும் இல்லாத கிறிஸ்தவ வாழ்வு என்பது இருக்கவே முடியாது. கிறிஸ்துவை நாம் உண்மையில் அன்புகூர வேண்டுமெனில் இவைகளை நாம் கடந்து செல்லத்தான் வேண்டும். இது எப்படி என்றால், இலட்சியத் தெளிவுடன் பயணிக்கும் ஒரு மனிதர், அதன் வெற்றியை சுவைக்கப்போகும் இறுதிநேரத்தில் இவ்வுலகம் தரும் இன்பமாயைகளில் சிக்கிக்கொண்டு வெற்றிக்கனியை இழந்தால் எப்படியிருக்குமோ அதுபோலத்தான் இதுவும் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். அதனால்தான் இறுதிக்காலம் குறித்து எச்சரிக்கும் இயேசு, "பல போலி இறைவாக்கினர் தோன்றிப் பலரை நெறிதவறி அலையச் செய்வர். நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்துபோகும். ஆனால், இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்" (காண்க மத் 14: 11-13) என்று கூறுகின்றார்

04. நல்ல நிலத்தில் விழுந்த விதை

நான்காவதாக, "நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும் சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்” என்கின்றார் இயேசு. எவரொருவர் தான்கொண்ட இலட்சியத்தில் இறுதிவரை உறுதியாக நின்று வெற்றிபெறுகின்றாரோ அவரே நல்ல நிலத்தில் விழுந்த விதையாக நற்கனிகளைக் கொடுக்கக் கூடியவராக இருப்பர். ஆனால், இத்தகையதொரு நிலையை எட்டவேண்டுமெனில் அதற்காகப் பெரியதொரு விலையை நாம் கொடுக்க வேண்டியிருக்கும். நமதாண்டவர் இயேசுவின் வாழ்வு தொடங்கி இன்றுவரை திருஅவையில் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டிருக்கும் அனைவரின் வாழ்வும் நல்ல நிலத்தில் விழுந்த விதைகளுக்குச் சான்று பகர்கின்றன. நமது இந்தியாவின் ஒடிசாவிலும், தற்போது மணிப்பூரிலும் கிறிஸ்துவின்மீது கொண்ட நம்பிக்கைக்காகக் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்கள் அனைவரும் நல்ல நிலத்தில் விழுந்த விதைகளே என்பதை மனதில் கொள்வோம்.  

நாம் எந்நிலத்தில் விழுந்த விதைகள்?

இறுதியாக, இயேசு கூறும் இந்த உவமை நாம் எந்த நிலத்தில் விழுந்த விதைகள் என்பதை எண்ணிப்பார்க்க அழைப்புவிடுகின்றன. ஒரு விதை விழும் இடத்தைப் பொறுத்துதான் அது தரப்போகும் பலனைக்  கணிக்கமுடியும். அவ்வாறே, ஒரு கிறிஸ்தவர் எப்படிப்பட்ட மனநிலையில் இறைவார்த்தையைக் கேட்கிறார் என்பதைப்  பொறுத்தே அவர் கிறிஸ்துவுக்காகக் கொடுக்கப்போகும் பலனையும் சான்று வாழ்வையும் நாம் கணிக்க முடியும். ஆகவே, கிறிஸ்தவ வாழ்வில் ஆயிரம் சோதனைகள் அடுக்கடுக்காய்த் தொடர்ந்திட்டாலும், கிறிஸ்துவின் வழியில் நல்ல நிலத்தில் விழுந்த விதைகளாக விருட்சமாகி நூறு மடங்காகவும், அறுபது மடங்காகவும், முப்பது மடங்காகவும் பயனளிப்போம். அதற்கான அருள்வரங்களுக்காக இறைவனிடம் இந்நாளில் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 July 2023, 11:25