தேடுதல்

நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன் என்கிறார் இயேசு நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன் என்கிறார் இயேசு  (Copyright © 2013 LDS CHURCH)

பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு : கனிவும் மனத்தாழ்மையும் கொள்வோம்

ஊனியல்புக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு தூய ஆவிக்குரிய செயல்களை அணிந்துகொள்வோம்.
பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்    I. செக்  9: 9-10   II.  உரோ 8: 9,11-13   III.  மத்  11: 25-30)

அமைதிக்கான நோபல் பரிசு என்பது சுவீடனின் வேதியியல் ஆராய்ச்சியாளரும் தொழிலதிபருமான ஆல்ஃபிரட் நோபெல் (Alfred Nobel) அவர்களால் நிறுவப்பட்ட ஐந்து நோபெல் பரிசுகளில் ஒன்றாகும். "யாரொருவர் நாடுகளிடையே சகோதரத்துவத்தை வளர்க்க சிறந்த முயற்சி எடுத்தவரோ, இராணு நடவடிக்கைளை நீக்கவோ அல்லது குறைக்கவோ முயற்சி எடுத்தவரோ, அமைதி மாநாடுகள் நிகழக் காரணமாக இருந்தவரோ அவருக்கு இந்த அமைதிக்கான பரிசுக் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆல்ஃபிரட் நோபெல் அவர்கள் தனது உயிலில் குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில், உலக அரங்கில் பலர் இந்த நோபெல் பரிசுகளைப் பெற்றுள்ளனர். ICAN (International Campaign to Abolish Nuclear Weapons) எனப்படும் அனைத்துலக அணு ஆயுத ஒழிப்பு பிரசார அமைப்பு, அணு ஆயுதங்கள்மீதான தடை ஒப்பந்தத்தை முழுமையாகப் கடைப்பிடிக்கவும், அதனை முழுமையாகச் செயல்படுத்தவும் இயங்கி வருகிறது. இவ்வமைப்பு 2007-ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்டது. இவ்வமைப்பின் தலைமையகம் ஜெனிவாவில் உள்ளது. நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்களின் கூட்டாளியான இவ்வமைப்பு, 2017-ஆம் ஆண்டிலிருந்து 101 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அணுஆயுத ஒழிப்புக்காகப் போராடி வரும் இந்த அமைப்புக்கு 2017-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள் மீதான, ஒப்பந்த தடையை உருவாக்க சிறப்பான களப்பணி ஆற்றியமைக்காக இந்த விருது இவ்வமைப்புக்கு வழங்கப்பட்டது.

இவ்வமைப்புத் தொடங்கப்பட்டதிலிருந்து அணுஆயுத போரினால் ஏற்படும் விளைவுகளையும், துயரங்களையும் தொடர் பரப்புரை வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஆணுஆயுத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும், அணு ஆயுத சோதனை நடத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறது. மேலும் அமெரிக்கா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகள் தங்களின் அணு ஆயுத உற்பத்தியை குறைத்ததில் இந்த அமைப்பின் பங்கு குறிப்பிடத்தக்கது. 2017-ஆம் ஆண்டு சூலை மாதம், ICAN அமைப்பு அளித்த அழுத்தத்தின் காரணமாக, 122 நாடுகள், படிப்படியாக அணு ஆயுதங்களைக் குறைத்து, அதனைத் தடை செய்யும் ஐ.நா.வின் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டன. ஆனால் அதேவேளையில், அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக அறியப்படும், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 9 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

பொதுக்காலத்தின் பதினான்காம் ஞாயிறை இன்றும் நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் ஆயுதங்களைக் களைந்துவிட்டு அமைதியான வாழ்வை அணிந்துகொள்ள வேண்டுமென நமக்கு அழைப்புவிடுக்கின்றன. மீட்பின் வரலாற்றில் சாலமோனின் ஆட்சிக்குப் பிறகு இஸ்ரயேல் நாடு வடக்கு தெற்கு என இரண்டாகப் பிரிந்துபோனது. அந்நேரத்தில் பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் எருசலேமின் மீது படையெடுத்து வந்து அதனை முற்றுகையிட்டுத் தீக்கிரையாக்கி அதன் மக்களையும் தன் நாட்டிற்கு அடிமைகளாகச் கொண்டு சென்றான். இவ்வாறு அடிமைத்தனத்தில் உழன்ற அம்மக்களுக்கு நம்பிக்கைதரும் செய்தியாக இன்றைய முதல் வாசகம் அமைகிறது. இப்போது அமைந்த மனதுடன் அப்பகுதியை வாசிப்போம். மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றிவேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர். அவர் எப்ராயிமில் தேர்ப்படை இல்லாமற் போகச்செய்வார்; எருசலேமில் குதிரைப்படையை அறவே ஒழித்து விடுவார்; போர்க் கருவியான வில்லும் ஒடிந்து போகும். வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்; அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல் வரை, பேராறுமுதல் நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும்.

இன்றைய உலகை நாம் உற்றுநோக்குவோமேயானால் இதனை நாம் நன்கு உணர்ந்துகொள்ளலாம். போர்களும், வன்முறைகளும், கலவரங்களும், அடக்குமுறைகளும், தீவீரவாதங்களும், பயங்கரவாதங்களும் நாம் வாழும் இன்றைய உலகை ஆட்டிப்படைக்கின்றன. இதனால், உள்ளத்திலும் அமைதியில்லை உலகிலும் அமைதியில்லை. தற்போது உக்ரைனில் இரஷ்யா நிகழ்த்திக்கொண்டிருக்குக்கும் போரை இதற்கு நாம் எடுத்துக்காட்டாகக் கூறலாம். இப்போரில் இதுவரை 40,000-க்கும் மேற்பட்ட மக்களும்,  இருநாடுகளையும் சேர்ந்த  இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான இராணுவர் வீரர்களும் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இலட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். ஆகவே, இக்கொடியச் சூழலில், உக்ரைன் நாட்டில் ஆயுதங்களற்ற அமைதியான வாழ்வு ஏற்படவேண்டுமென திருத்தந்தை அடிக்கடி அதிகம் வலியுறுத்தி வருகின்றார். அதேவேளையில், இருநாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த திருப்பீடம் பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. அதுமட்டுமன்றி, அமைதிக்கு எதிராகப் போர்கள் நிகழ்ந்து வரும் கேமரூன், மொசாம்பிக், மத்திய ஆபிரிக்க குடியரசு, காங்கோ ஜனநாயகக் குடியரசு, தென் சூடான், கொலம்பியா மற்றும் ஹைட்டி ஆகிய நாடுகளிலும் அமைதி ஏற்படுத்தும் செயல்முறைகளில் ஒத்துழைத்து வருகிறது திருப்பீடம். இன்றைய முதல் வாசகத்தில், போர்களின் அச்சத்தினாலும், அடிமைத்தனத்தாலும் வேதனையின் விளிம்பில் வாடிய மக்களுக்கு ஆயுதங்களற்ற மோதல்களற்ற அமைதியான வாழ்வுக்கு உறுதியளிக்கும் இறைத்தந்தையைப்போல நமது திருத்தந்தையும் அமைதியான வாழ்வு உலகெங்கினும் அமையவேண்டுமென பேராவல் கொண்டு அதைச் செயல்படுத்த முயன்று வருகிறார்.

ஆவிக்குரிய வாழ்வைக் கொண்டிருப்போம்

"கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல" என்றும், "ஆகையால், சகோதர சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை; அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை. நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள்" என்றும் கூறுகின்றார் புனித பவுலடியார். அப்படியென்றால், ஊனியல்புக்குரிய செயல்கள் யாவும் சாத்தானுக்குரியது. அதாவது, பகைமையுணர்வுகளையும், போர்களையும், வன்முறைகளையும் உருவாக்கக்கூடியது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமெனில், ஊனியல்புக்குரிய சாத்தானின் செயல்கள் கடவுளின் சாயலிலும் உருவிலும் படைக்கப்பட்ட மக்களிடத்தில் பிரிவினைகளையும், பிணக்குகளையும், வேறுபாடுகளையும் மாறுபாடுகளையும் உருவாக்கக்கூடியது. இதனால், இவற்றினின்று பல்வேறு கொடிய தீமைகள் உருவாகும் பேராபத்தும் உள்ளது. ஆனால், ஆவிக்குரிய செயல்களோ அமைதியையும், சகோதரத்துவத்தையும், ஒன்றிப்பையும் உருவாக்கக்கூடியது. இதன் காரணமாகவே, பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் ஆகியவற்றை ஊனியல்பின் செயல்களாகவும், அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகியவற்றை தூய ஆவிக்குரிய செயல்களாகவும் எடுத்துரைக்கின்றார் புனித பவுலடியார் (காண்க கலா 5: 19--22).

இன்றைய உலகில் சுயநலம் படைத்த மனிதர் கூட்டம் ஏழை எளியோரின் துயரத்தில் தங்களின் வாழ்வைக் கட்டமைத்துக்கொள்கின்றது. யார் வாழ்ந்தால் எனக்கென்ன, யார் வீழ்ந்தால் எனக்கென்ன, எனக்குத் தேவையெல்லாம் நான் எனது தொழிலில் சிறக்க வேண்டும், எனது வருமானம் உயரவேண்டும், எனது பதவியையும் செல்வாக்கையும் நான் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த இரயில் விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் இறந்துபோயினர். அப்போது விமானக் கட்டணத்தை அனைத்துக் கம்பெனிகளும் கடுமையாக உயர்த்திவிட்டதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. இதனைத்தான், 'எரியுற வீட்ல பிடுங்கினது வரை ஆதாயம்' என்று நம் முன்னோர்கள் கூறினர். “ஊனியல்புக்கேற்ப வாழ்வோரின் நாட்டமெல்லாம் அந்த இயல்புக்கு உரியவற்றின்மீதே இருக்கும்; ஆனால், ஆவிக்குரிய இயல்புக்கேற்ப வாழ்வோரின் நாட்டம் ஆவிக்கு உரியவற்றின் மீதே இருக்கும். ஊனியல்பு மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது சாவே; ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது வாழ்வும் அமைதியும் ஆகும்” என்று புனித பவுலடியாரும் எடுத்துரைக்கின்றார் (காண்க உரோ 8:5-6).

இவ்வாண்டு ஜனவரி மதம் கர்நாடகாவில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்தது. சிக்கமகளூரு மாவட்டம் கடூர் நகர எல்.ஐ.சி. அலுவலகம் அருகே டீக்கடை வைத்து நடத்தி வருபவர் மஞ்சுநாத். இவரது தந்தை கடந்த 2019-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் அவதி அடைந்தார். அப்போது அவரை தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தினர். ஆனால், அவருக்குப் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் அரசு அவசர மருத்துவ ஊர்தியில் (Ambulance) தனது தந்தையை மங்களூருவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதிக்க உதவி செய்ய வேண்டும் என்று மருத்துவர்களிடம் கோரிக்கை விடுத்தார் மஞ்சுநாத். ஆனாலும், அவருக்கு மருத்துவ அவசர ஊர்தி கிடைக்கவில்லை. இதையடுத்து மிகவும் சிரமப்பட்டு தனது தந்தையை மங்களூருவுக்குக் கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்தார் மஞ்சுநாத். பின்னர், அவரை அங்கிருந்து மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக சிவமொக்கா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்குத் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மஞ்சுநாத்தின் தந்தை பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், தனது தந்தைக்கு உரிய நேரத்தில் சரியான சிகிச்சை கிடைக்காமல் இறந்ததுபோல் வேறு யாருக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்று எண்ணிய மஞ்சுநாத், தனது சொந்த செலவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இலவசமாக மருத்துவ அவசர ஊர்தி ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். அதுமட்டுமன்றி அந்த வாகனத்திற்குத் தனது சொந்த செலவிலேயே ஓட்டுநர் ஒருவரையும் பணிக்கு அமர்த்தி இருக்கிறார். இப்போது அப்பகுதி மக்களால் மஞ்சுநாத் கனிவிரக்கம் கொண்டவராகவும் சான்றோராகவும் போற்றப்படுகிறார். இன்றைய நற்செய்தியில், “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்” என்று கூறும் இயேசு, “ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்கின்றார்.

யாரெல்லாம் ஆவிக்குரிய செயல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அவர்களிடத்தில்தான் மனிதம் சார்ந்த பிறரன்பு செயல்கள் வெளிப்படும். நமதாண்டவர் இயேசு கூறுவதுபோல் அவர்கள்தாம் எந்நிலையிலும் பிறரின் துன்ப துயரங்களைச் சுமந்துகொள்ள முன்வருவர். ஆகவே, ஆவிக்குரிய செயல்களை அணிந்துகொண்டு, எப்படி கனிவும் மனத்தாழ்மையும் கொண்டவர்களாக, அமைதியான வாழ்க்கை வாழவேண்டும் என்று கற்றுத்தரும் இயேசுவின் படிப்பினைகளை உள்ளத்தில் இருத்துவோம். தீய ஆவிக்குரிய அதாவது, ஊனியல்புக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு தூய ஆவிக்குரிய செயல்களை அணிந்துகொள்ள இந்நாளில் இறைவனிடம் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

ஒரு சிறிய செபத்துடன் இம்மறையுரைச்  சிந்தனைகளை நிறைவு செய்வோம். ஆண்டவரே! இதோ இந்த நாளிலே, எங்கள் ஒவ்வொருவரையும் நீர் ஆசீர்வதியும். இந்த உலகம் தரமுடியாத அமைதியை எங்களுக்குத் தருகிறேன் என்று சொன்னவரே, உம் அன்புச் சீடர்களுக்கு அமைதியை விட்டுச் சென்றவரே! இதோ எங்கள் உள்ளங்களிலும், நாட்டிலும், உலகமனைத்திலும் அமைதியற்றச் சூழல் நிலவுவதைப் பார்க்கின்றோம். ஆகவே, எங்கள் அனைவருக்கும் அமைதியைத் தந்து நாங்கள் நிறைந்த உள்ளமுடன் வாழச் செய்தருளும். நாங்கள் என்றும் உம் அன்பு மக்களாக உமக்குப் பணிபுரிய இந்த நாளிலே எங்களை ஆசீர்வதித்தருளும். ஆமென்.

 

கனிவும் மனத்தாழ்மையும் கொள்வோம் என்ற தலைப்பில் இன்றைய ஞாயிறு சிந்தனையை உங்களுக்கு வழங்கியது வத்திக்கான் வானொலி

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 July 2023, 11:25