திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் நிறைமகிழ்ச்சியை அளிக்கிறது
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மங்கோலியாவிற்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணமானது, அன்னை மரியா எலிசபெத்தை சந்தித்தபோது அவரிடத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியையும் மனநிறைவையும் எனக்களிக்கிறது என்று கூறியுள்ளார் அந்நாட்டில் மறைபணியாற்றும் இந்திய அருள்சோகோதரி Agnes Gangmei
வரும் ஆகஸ்ட் மாதம் 31 முதல் செப்டம்பர் மாதம் 4 வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மங்கோலியாவிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் வேளை, ஆசிய செய்தி நிறுவனத்திற்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார் அருள்சோகோதரி Agnes.
மங்கோலியாவில் உள்ள கத்தோலிக்கச் சமூகத்தை ‘மிக இளம் வயதினர்’ மற்றும் ‘மிகச் சிறியவர்கள்’ என்று விவரித்துள்ள அருள்சோகோதரி Agnes அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை எங்கள் சமூகத்திற்கு வரவேற்பதைப் பெரும்பேறாகவும், மதிப்பிற்குரியதாகவும், ஆசீர்வாதமாகவும் உணர்கிறேன் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மங்கோலியாவின் தலைநகர் Ulaanbaatar-வில் மறைப்பணியாற்றி வரும் அருள்சோகோதரி Agnes அவர்கள், எங்களிடம் ஏறத்தாழ 1,500 திருமுழுக்குப் பெற்ற கத்தோலிக்கர்கள் மட்டுமே உள்ளனர் என்றும், முப்பது ஆண்டுகள் மட்டுமே தலத்திருஅவை இயங்கிவரும் இந்நாட்டில் தான் ஆற்றிவரும் புதிய பணிகளில் இதுவும் ஒன்று என்றும் கூறியுள்ளார்.
இங்கு அனுப்பப்படும் மறைப்பணியாளர்களுக்கு இந்நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்குவதில் முன்னேற்றம் காண திருத்தந்தையின் இந்தத் திருத்தூதுப் பயணம் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும், அண்மைய ஆண்டுகளில் நாங்கள் சந்தித்த மிகப்பெரிய பிரச்சனைகளில் இதுவும் ஒன்று என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் அருள்சோகோதரி Agnes
கிறிஸ்தவர்களின் சகாய அன்னையின் புதல்வியர் சபையைச் சார்ந்த அருள்சோகோதரி Agnes Gangmei அவர்கள் மங்கோலியாவில் 2012-ஆம் முதல் மறைப்பணியாற்றி வருகின்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்