தேடுதல்

பண்ணிசைத்து ஆண்டவரில் அகமகிழும் தாவீது அரசர் பண்ணிசைத்து ஆண்டவரில் அகமகிழும் தாவீது அரசர்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 40-5 : ஆண்டவரில் மகிழ்வோம்!

ஆண்டவரைத் தேடுவதில் எப்போதும் மகிழ்ந்திருக்கவும், எளியநிலையில் மிகுந்த மனத்தாழ்மையுடன் அவருக்குப் பணியாற்றவும் முயல்வோம்..
விவிலியத் தேடல்: திருப்பாடல் 40-5 : ஆண்டவரில் மகிழ்வோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'துன்பவேளை தூயவரைத் தேடுவோம்!' என்ற தலைப்பில் 40-ஆவது திருப்பாடலில் 12 முதல் 15 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்து நாம் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 16, 17 ஆகிய இரண்டு இறைவசனங்கள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவுக்குக் கொணர்வோம். இப்போது இறைஒளியில் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். “உம்மைத் தேடுவோர் அனைவரும் உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்! நீர் அருளும் மீட்பில் நாட்டங்கொள்வோர், ‛ஆண்டவர் எத்துணைப் பெரியவர்!’ என்று எப்போதும் சொல்லட்டும்! நானோ ஏழை; எளியவன்; என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்; நீரே என் துணைவர், என் மீட்பர்! என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்” (வசனம் 16,17).

ஆண்டவரின் செயல்களுக்காகத் தான் எப்போதும் பொறுமையாகக் காத்திருப்பேன் என்றும், அவரே பேரழிவிலிருந்து தன்னைக் காப்பாற்றினார் என்றும் அவருடைய திருவுளத்தை நிறைவேற்றி, நீதியும் பேரன்பும் கொண்ட அவரை மாபெரும் சபைதனில் அறிவிப்பேன் என்றெல்லாம் உரைத்த தாவீது அரசர் இத்திருப்பாடலின் நிறைவில் எளியவனான தனக்குக் கடவுளே என்றென்றும் துணை என்று கூறி இதனை நிறைவு செய்கின்றார்.

நாம் தியானிக்கும் இந்த இறைவார்த்தைகளில் இரண்டு காரியங்களை முன்னிலைப்படுத்துகின்றார் தாவீது அரசர். முதலாவதாக, “உம்மைத் தேடுவோர் அனைவரும் உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்! நீர் அருளும் மீட்பில் நாட்டங்கொள்வோர், ‛ஆண்டவர் எத்துணைப் பெரியவர்!’ என்று எப்போதும் சொல்லட்டும்!" என்கின்றார். இன்றைய உலகம் எதைக் தேடிக்கொண்டிருக்கின்றது என்பதை முதலில் சிந்திப்போம். இவ்வுலகில் வாழும் மனிதர்களில் 70 விழுக்காட்டினர் இவ்வுலகக் காரியங்களுக்கு உரியவற்றில் தங்கள் மனதை செலுத்துகின்றனர். அதாவது, பொன், பொருள், புகழ், பதவி, அதிகாரம் ஆகியவற்றைத் தேடுவதில் தங்கள் வாழ்வை முழுதுமாக செலவழிக்கின்றனர். இதன் காரணமாகப் போட்டி, பொறாமை, தன்னலம், பேராசை, பழிவாங்குதல், பொருள்களைத் தங்களுக்கென்று சுருட்டிக்கொள்ளுதல் ஆகியவை இவர்களிடத்தில் மேலோங்கியிருக்கும். அதேவேளையில், மீதமுள்ள 30 விழுக்காட்டினர் கடவுளுக்குரியவற்றைத் தேடுகின்றனர். இவர்களிடத்தில் இறையச்சம், இறையன்பு, பிறரன்பு, நீதி, உண்மை, நேர்மை, அமைதி ஆகிய விழுமியங்கள் நிறைந்திருக்கும். இதன் காரணமாக, பகிர்வு, பிறர்நலம், பொதுவுடைமை போன்ற உயர்குணங்கள் இவர்களிடத்தில் சிறந்து விளங்கும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், இவர்கள் இவ்வுலகின்மீதுள்ள பற்றை விடுத்து கடவுளை மட்டுமே தங்களின் உண்மைச் செல்வமாகப் பற்றிக்கொள்வர். தாவீது கூறுவதுபோன்று இவர்கள் கடவுள் அருளும் மீட்பில் நாட்டங்கொள்வர். கடவுள் மட்டுமே எல்லாவற்றிலும் பெரியவரென்று எப்போதும் கூறித் தங்களைத் தாழ்த்திக்கொள்வர். இவர்களிடத்தில் இறைஞானம் குடிகொண்டிருக்கும்.

அது ஒரு அழகிய ஆறு. அதன் கரையோரம் இறைஞானம் பெற்ற குரு ஒருவர் தியானம் செய்துகொண்டிருந்தார். அவருடைய சீடர்களும் அவருடன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தனர். அப்போது பெரும்செல்வந்தர் ஒருவர் அவர்முன்னே வந்து நின்றார். தன்முன்னே ஓர் உருவம் நிழலாடுவதை கண்ட ஞானகுரு கண்களை திறந்தார். எதிரில் பட்டுவேட்டி அணிந்து உடல் முழுவதும் சந்தனம் பூசிய நிலையில் அச்செல்வந்தர் அவரை வணங்கி நின்றார். கைகளில் தங்கத்தால் ஆன தட்டும் அதில் வைரம் வைடூரியம் என விலைமதிக்க முடியாத பொருட்களும் நிறைந்து வழிந்தன. பணக்கார தோரணை கொண்ட அந்த மனிதர் ஞானகுருவை பார்த்து, ”உலக மக்களை உயர்நிலைக்கு அழைத்து செல்லும் குருவே, உங்களிடம் எத்தனையோ முறை இறைஞானத்தை அடைவதற்கான வழியைக் கேட்டேன். ஆனால், நீங்கள் மனம் இளகவில்லை. இப்போது என்னிடம் இருக்கும் விலைமதிக்க முடியாத செல்வத்தை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன். தயவுசெய்து எனக்கு இறைஞானத்தை அடைவதற்கான வழியைக் கற்பியுங்கள்” என்று வேண்டினார். ஞானகுரு மெல்ல எழுந்து தனது காவித்துணியில் அனைத்து செல்வங்களையும் போடச் சொன்னார். அவரின் காவித்துணியில் அனைத்தும் போடப்பட்டதும் அதை மூட்டையாகக் கட்டி, தலைக்கு மேல் உயர்த்தி யாரும் எதிர்பாராத வண்ணம் அந்த ஆற்றில் எறிந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத அச்செல்வந்தர் உடனே அந்த ஆற்றில் குதித்து அந்த மூட்டையை பிடிக்க நீந்தினார். ஆற்றின் வேகத்திற்கு மூட்டையும் அவரும் அடித்துச்செல்லப்பட்டார்கள். அதுவரை கண்களை மூடித் தியானத்தில் அமர்ந்த்திருந்த அவருடைய சீடர்கள் நீரில் செல்வந்தர் குதித்த சப்தம் கேட்டு கண்களை திறந்து பார்த்தனர். குழப்பம் கொண்ட அச்சீடர்கள்  குருவிடம் ”குருவே என்ன நடக்கிறது? அவர் ஆற்றில் குதித்து எதைத் தேடிக்கொண்டிருக்கிறார்..?” என்று ஒருமித்தக் குரலில் கேட்டனர். தனது ஆசனத்தில் அமர்ந்த ஞானகுரு புன்புறுவலுடன் சீடர்களைப் பார்த்து, "அவர் இறைஞானத்தைத் தேடிக்கொண்டிருக்கின்றார்" என்றார்.

இரண்டாவதாக, “நானோ ஏழை; எளியவன்; என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்; நீரே என் துணைவர், என் மீட்பர்! என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்” என்கின்றார் தாவீது. அவர் ஒரு மாபெரும் அரசர், இஸ்ரயேல் மக்களின் தலைவர், பல போர்களில் வெற்றிகளைக் கண்டவர். அப்படியிருந்தும் கூட கடவுள் முன்னிலையில் எப்படியெல்லாம் தன்னைத் தாழ்த்திக்கொள்கின்றார் பாருங்கள். இன்றைய நம் உலகில் அது அரசியலாக இருந்தாலும் சரி அல்லது துறவு வாழ்வாக இருந்தாலும் சரி, பதவியும் அதிகாரமும் மனிதரைப் பாடாய்ப்படுத்துகின்றன. ‘நான் அந்தப் பொறுப்பில் இருக்கின்றேன், நான் இந்தப் பொறுப்பில் இருக்கின்றேன், நான்தான் இந்த நிறுவனங்களுக்கெல்லாம் அதிபதி, என்னுடைய அனுமதி இல்லாமல் இங்கே எதுவும் நடக்கக் கூடாது’ என்றெல்லாம் கூறிக்கொண்டு மக்களிடமும் தன்னிடம் பணியாற்றுவோரிடமும் நடந்துகொள்ளும் விதம் இருக்கின்றதே... அப்பப்பா.... பலநேரங்களில் பொறுத்துக்கொள்ளவே முடியாது. அரசியல் வாழ்வுதான் அப்படி இருக்கின்றது என்றால், துறவு வாழ்வு அதைவிட வருத்தமளிப்பதாக உள்ளது. இன்றையத் துறவிகளில் பலர் பதவி இல்லாமல் இருக்க விரும்புவதில்லை. அது இல்லையென்றால் வாழ்க்கையில் எதையோ இழந்துவிட்டதாகவே கருதுகின்றனர். பதவியையும் அதிகாரத்தையும் துறவு வாழ்வின் அடையாளமாகவும் இலக்கணமாகவும் கொண்டுள்ளனர் என்பதை நினைக்கும்போது உண்மையிலேயே மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கின்றது. ஒரு மிகப்பெரிய துறவு சபையில் துறவி ஒருவர் பல ஆண்டுகளாக அச்சபை நடத்தும் பள்ளிகளில் தலைமைப்பொறுப்பில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் பணிஓய்வு பெற்றதும் மாநிலத் தலைவர் அவரை அம்மறைமாநிலத்தின் கடைகோடியிலுள்ள ஒரு எளிமையான வசதிவாய்ப்புகளற்ற ஒரு குழுமத்திற்கு மாற்றவிரும்புவதாக  அவரிடம் கூறினார். அப்போது கோபத்தின் உச்சிக்கே சென்ற அவர், மாநிலத் தலைவரின் ஆலோசகர்களில் ஒருவரை அழைத்து, “அவர் என்னை யார் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்?  நான் பல ஆண்டுகளாகத் தலைமைப்பொறுப்பில் இருந்து பணியாற்றியவன். எனக்குப்போய் இப்படியொரு சாதாரண இடத்திற்கு மாற்றுதல் கொடுக்க நினைக்கிறாரே, அந்த இடத்திற்குப் போகும் அளவிற்கு நான் தரம் தாழ்ந்துவிட்டேனா” என்றெல்லாம் கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தனக்கு ஆதரவாகத் தனது நண்பர்களையும் அம்மாநிலத் தலைவரிடம் பேசும்படி செய்தார். இறுதியாக ஒரு பெரிய பள்ளிக் குழுமத்திற்குத்  தலைவராகச் சென்றுவிட்டார். இன்றுவரை அவர் தலைமைப் பொறுப்பில்தான் இருக்கின்றார். இம்மாதிரியான செயல்கள் துறவு சபைகளில் மட்டுமல்ல மறைமாவட்டங்களிலும் நடைபெறுகின்றது என்பது மிகவும் வருந்தத்தக்கது. இதன்காரணமாகவே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தான் திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு நிறைவேற்றிய பெரியவியாழன் திருப்பலி மறையுரையில், “அருள்பணியாளர்களே, உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரம்  என்பது பணியாற்றுவதற்கே தவிர மக்களை அடக்கியாள்வதற்கு அல்ல” என்று கூறினார். பொதுவாக அரசியல் வாழ்விலும் சரி துறவு வாழ்விலும் சரி, தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணிகளில் யாரெல்லாம் மனத்தாழ்மையுடனும், எளிமையுடனும், இறையச்சம் கொண்டும், மனசாட்சிக்குக் கட்டுப்பட்டும், நம்பகத்தன்மையுனும் மக்களுக்காகப் பணியாற்றினார்களோ அவர்கள் மட்டும்தான் இன்றுவரை வரலாற்றில் மக்களால் நினைவுகூரப்படுகின்றனர் என்பது திண்ணம். தாவீது அரசரது வாழ்வும் அப்படித்தான் அமைந்துள்ளது. அரசர் என்ற முறையில் தனக்கு எல்லா அதிகாரங்களும் கொடுக்கப்பட்டிருந்தும் கூட இறையச்சம் கொண்டவராகக் கடவுளை மட்டுமே தன் ஒப்பற்றத் தலைவராகக் கொண்டு வாழ்ந்தார். தான் ஒரு அரசர் என்பதைக் காட்டிலும், கடவுளின் மக்களுக்காகப் பணியாற்ற அவரால் நியமிக்கப்பட்ட ஒரு சாதாரண பணியாள் என்றெண்ணி தன்னை முழுதும் தாழ்த்திக்கொண்டு ஒரு எளியவனாகப் பணியாற்றினார். அதனால்தான், “நானோ ஏழை; எளியவன்; என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்; நீரே என் துணைவர், என் மீட்பர்! என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்” என்கின்றார்.

ஆகவே, ஆண்டவரைத் தேடுவதில் எப்போதும் மகிழ்ந்திருக்கவும், எளியநிலையில் மிகுந்த மனத்தாழ்மையுடன் அவருக்குப் பணியாற்றுவதில் நிறைந்திருக்கவும் முயல்வோம். நன்றாக விளைந்த நெற்கதிர்களே தலைசாய்த்து அறுவடைக்குத் தயாராகின்றன. மற்றவையெல்லாம் இடையிலேயே அழிந்துபோகின்றன என்பதை மனதில் நிறுத்துவோம். செல்வத்தின்மீதான மிதமிஞ்சிய பற்றும், அதிகார வெறியும், பதவிமோகமும், தாழ்ச்சியற்ற மனநிலையும் கடவுளுக்குரிய வழிகள் அல்ல அவைகள் அலகைக்குரிய வழிகள் என்பதை உணர்வோம். இத்தகைய மனநிலையில் வாழ்வதற்கான அருள்வரங்களுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 July 2023, 12:12