தேடுதல்

தாவீது அரசர் தாவீது அரசர்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 40-3 : இறைநீதியை அறிவிப்போம்!

கடவுள் நமக்கு அருளும் நீதியையும், பேரன்பையும், உண்மையையும் மாபெரும் சபைகளில் அறிவிக்கும் மனம் பெறுவோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 40-3 : இறைநீதியை அறிவிப்போம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'இறைத்திருவுளம் நிறைவேற்ற!' என்ற தலைப்பில் 40-வது திருப்பாடலில் 05 முதல் 08 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்து நாம் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 08 முதல் 11 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம். இப்போது இறையமைதியில் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். “என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். உமது நீதியை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைக்கவில்லை; உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும் நீர் அருளும் மீட்பைப் பற்றியும் கூறியிருக்கின்றேன்; உம் பேரன்பையும் உண்மையையும் மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை. ஆண்டவரே, உமது பேரிரக்கத்தை எனக்குக் காட்ட மறுக்காதேயும்; உமது பேரன்பும் உண்மையும் தொடர்ந்து என்னைப் பாதுகாப்பனவாக!” (வசனம் 9-11). நாம் தியானிக்கும் மேற்கண்ட இறைவார்த்தைகளில், கடவுளின் நீதியையும், வாக்குப்பிறழாமையையும், பேரன்பையும் உண்மையையும் மாபெரும் சபையில் அறிவித்தாகக் கூறி புளங்காகிதம் அடைகின்றார் தாவீது அரசர். இவைகளைக் குறித்து இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

நீதியின் நற்செய்தியை அறிவித்தல்

முதலாவதாக, "என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். உமது நீதியை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைக்கவில்லை" என்றுரைக்கின்றார் தாவீது. இங்கே நீதி என்பது இறைவன் தாவீதுக்கு வழங்கிய நீதியானத் தீர்ப்புகளை மட்டும் குறிப்பிடவில்லை, மாறாக, அவர் தனக்குக் காட்டிய இறைவனின் இரக்கப்பெருக்கத்தையும், அளவற்ற என்றுமுள்ள அன்பையும், பாதுகாப்பையும், கரிசனையையும், நன்மைத்தனங்களையும் குறிப்பிடுவதாக நாம் உணர்ந்துகொள்ளலாம். கடவுளிடம் விளங்கும் இத்தகைய பண்புகள் அனைத்தையும் நற்செய்தி என்று அழைப்பதுடன், அதனைத் தனது உள்ளத்தின் ஆழத்தில்  மறைத்து வைக்காமல், பொதுவெளியில் பகிரங்கமாக அறிவித்ததாகப் பெருமையுடன் கூறுகின்றார் தாவீது அரசர். இதன் காரணமாகவே, வான்வெளி அவரது நீதியை எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுள்தாமே நீதிபதியாய் வருகின்றார்! (திபா 50:6) என்றும், கடவுளே! நீதித் தீர்ப்பளிக்க நீர் எழுந்தபோது, மண்ணுலகில் ஒடுக்கப்பட்டோரைக் காக்க விழைந்தபோது, வானின்று தீர்ப்பு முழங்கச் செய்தீர்; பூவுலகு அச்சமுற்று அடங்கியது (திபா 76:8-9) என்றும், கடவுளின் அரும்பெரும் செயல்களையெல்லாம் அவரது நீதிக்கான செயல்களாகவே அறிக்கையிடுகின்றார் தாவீது அரசர்.

கடவுளின் வாக்குப்பிறழாமையை அறிவித்தல்

இரண்டாவதாக, "உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும் நீர் அருளும் மீட்பைப் பற்றியும் கூறியிருக்கின்றேன்" என்கின்றார் தாவீது அரசர். இங்கே வாக்குப்பிறழாமை என்பது வாக்குத்தவறாமை, ‘வாக்குச் சுத்தம், சொன்னசொல்ல மாறாமை, சொன்னதை நிறைவேற்றிக்காட்டுவது, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது’ என்று பல்வேறு வகைகளில்  நாம் பொருள் கொள்ளலாம். 'அவன் ஒரு மானஸ்தன்யா... சொன்னத செஞ்சுக் காட்டிடுவான்' என்று நாம் அடிக்டிக் கூறாக கேள்விப்பட்டிருப்போம். கடவுள் இத்தகையதொரு மனநிலையைக் கொண்டவர் என்பதை தாவீது நமக்குச் சுட்டிக்காட்டுகிறார். அதேவேளையில், தான் இப்படிப்பட்டவர்தான் என்பதைக் கடவுளே நமக்கு எடுத்துக்காட்டுவதையும் பார்க்கின்றோம். “மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என்  விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக  நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை” (எசா 55:10-11). ஆகவே, இத்தகைய கடவுளின் வாக்குப்பிறழாமைப் பற்றியும் அவர் அருளும் மீட்புப் பற்றியும் ஒளிக்காமல் அவற்றை மாபெரும் சபைதனில் கம்பீரமாக எடுத்துரைத்தாகக் கூறுகின்றார் தாவீது. மேலும், “ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு; விண்ணுலகைப்போல் அது நிலைத்துள்ளது. தலைமுறை தலைமுறையாய் உள்ளது உமது வாக்குப் பிறழாமை”(திபா 119:89-90) என்று கூறுகின்றார் தாவீது.

கடவுளின் பேரன்பையும் உண்மையையும் அறிவித்தல்

மூன்றாவதாக, "உம் பேரன்பையும் உண்மையையும் மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை" என்றுரைக்கின்றார் தாவீது அரசர். பேரன்பும் உண்மையும் என்றென்றும் ஆண்டவருக்கே உரியன. ஆண்டவரின் பேரன்பே இந்த உலகம்  உருவாகவும், அவரின் உருவிலும் சாயலிலும் மனிதர் படைக்கப்படவும் காரணமாயிற்று. அதுமட்டுமன்றி, நம் ஆதிப்பெற்றோர் தொடங்கி அனைவரின் பாவங்களும் மன்னிக்கப்படவும் அதற்குக் கழுவாயாகத் தன் ஒரே திருமகனையே இவ்வுலகிற்கு அளிக்கவும் காரணமாயிற்று. இப்படிப்பட்ட கடவுளின் என்றுமுள்ள பேரன்பைத்தான் தாவீது மாபெரும் சபைதனில் எடுத்துரைப்பதாகக் கூறுகின்றார். மேலும் “ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப்போல் உறுதியானது” (திபா 89:1-2) என்று கடவுளின் என்றுமுள்ள பேரன்பைப் போற்றிப்பாடுகிறார் தாவீது.

‘ஒரே நீதிமன்றத்தில் மகள் நீதிபதி, தந்தை டீ விற்பவர்!’ என்ற தலைப்பில் இணையத்தில் ஒரு நெகிழ்வான செய்தியொன்று வெளியாகியிருந்தது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நீதிமன்றத்தில் 24 வயதான இளம்பெண் ஸ்ருதி என்பவர் நீதிபதியாக இருக்கிறார். அவரிடம் செய்தியாளர்கள் மேற்கொண்ட நேர்காணல். “இவ்வளவு இளம் வயதில் எப்படி மேடம், இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தீர்கள்? உங்கள் குடும்பம் மிகப் பெரிய செல்வாக்குப் படைத்த குடும்பமா..?” ஸ்ருதி சற்று நேரம் மௌனமாக இருந்தார். எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து,  “இல்லை .. என் குடும்பம் மிக மிக எளிமையான குடும்பம் .. ஒரு சாதாரண கிராமத்து பெண் நான் ..!” என்று அமைதியாகப் பதில் சொன்னார். “மேடம் ..உங்கள் குடும்பம்.... அம்மா அப்பா பற்றி சொல்லுங்களேன்..?” என்று நிருபர்கள் அடுத்த கேள்வியை வீசினார்கள். ஸ்ருதியிடம் மீண்டும் மௌனம். நிருபர்களுக்கு ஒன்றும் புரியவில்லை ஒருவேளை தாங்கள் கேட்டது நீதிபதி ஸ்ருதிக்குப் புரியவில்லையோ..? என்று நினைத்து, “மேடம். நாங்கள் கேட்டதற்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லவில்லையே..." என்று கேட்க, “சாரி ..என்ன கேட்டீர்கள் ..?” என்று ஸ்ருதி கேட்க, “உங்கள் அப்பா அம்மா பற்றிக் கேட்டோம்" என்று நிருபர்கள் கூற, ஸ்ருதி நிருபர்களை உற்று நோக்கினார். “தயவுசெய்து, ஒரு நிமிடம் என்னோடு வெளியே வர முடியுமா..? என்று அழைக்க, “எங்கே மேடம்..? எங்களை எங்கே வரச் சொல்கிறீர்கள்?” என்று நிருபர்கள் பதில் கேள்வி கேட்டனர். ஸ்ருதி நடந்தபடியே, “என் அப்பாவை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன்” என்று அவர்களைப் பார்த்துச் சொன்னார். "சரிங்க மேடம்" என்று கூறியவாறு நிருபர்கள் கேமராவை தயார் செய்தபடி ஸ்ருதியை பின் தொடர்ந்தனர். ஸ்ருதி வேகமாக நடந்தபடியே, “என் அப்பா இந்த நீதிமன்றத்திற்குள்தான் இருக்கிறார் !” என்று கூறினார்.

நிருபர்களுக்குப் பெரும் ஆச்சரியம்!  அப்போது நிருபர்களில் ஒருவர், “ஓ ... உங்கள் அப்பாவும் நீதிபதியா மேடம்?” என்று கேட்டனர்.  “இல்லை..” என்றார் ஸ்ருதி. "அவரு சீனியர் வக்கீலா மேடம்?" என்று இன்னொரு நிருபர் கேட்டார். அதற்கும் “இல்லை..” என்றார் ஸ்ருதி. அப்போது வெகு வேகமாக நடந்து சென்ற ஸ்ருதி, நீதிமன்ற வளாகத்தின் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்றார். பின்னர் நிருபர்களைப் பார்த்து “நாம் ஆளுக்கு ஒரு கப் டீ சாப்பிடலாமா?" என்று கேட்டார். நிருபர்களும் மரத்தடியில் ஒதுங்க ... சற்று தள்ளி நின்ற தேநீர் விற்பவர் நிருபர்களை நோக்கி வந்தார். அவர் ஒவ்வொரு கப்பாக டீயை ஊற்றிக் கொடுக்க... ஸ்ருதி தன் கையாலேயே அதை வாங்கி எல்லா நிருபர்களுக்கும் கொடுத்தார். தேநீரைக் குடித்து முடித்த நிருபர்கள் “மேடம் .. நாம் போகலாமா..?” என்று கேட்க உடனே ஸ்ருதி நிருபர்களைப்  பார்த்து. "எங்கே" என்று கேட்டார். நிருபர்கள் சற்றே குழம்பியவாறு, “என்ன மேடம் ..உங்கள் அப்பாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதாகக் கூறிதானே எங்களை வெளியே அழைத்து வந்தீர்கள்?" என்று கூற ஸ்ருதி புன்னகைத்தார். “ஓ...ஆமாம் ..அவரை உங்களுக்கு இன்னும் நான் அறிமுகப்படுத்தவில்லை அல்லவா..?... ஓகே... புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள்”..என்று கூறிய ஸ்ருதி புன்னகையோடு, சற்றுமுன் அவர்களுக்கு தேநீர் கொடுத்த அந்த நபரை நோக்கி, “அப்பா ..இங்கே கொஞ்சம் வாங்க!” என்று வாஞ்சையோடு அழைத்தார். அப்போது திகைத்துப் போனார்கள் அத்தனை நிருபர்களும்! ஸ்ருதி அந்தத் தேநீர் விற்பவரின் அருகில் நின்று கொண்டு, “இவர்தான் என் அப்பா... பல ஆண்டுகளாகத் தேநீர்கடை நடத்தி வருகிறார். இதோ.. இந்த நீதிமன்றத்திற்கு எதிரேதான் எங்கள் தேநீர்கடை இருக்கிறது. நீதிமன்றத்தின் உள்ளே வருபவர்களுக்கும் என் அப்பாதான் தேநீர் விற்பனை செய்கிறார். இவரது கடும் உழைப்பினால்தான் கடினப்பட்டு படித்து, இன்று இதே நீதிமன்றத்திற்குள் நீதிபதியாக இருக்கிறேன்...! என் அப்பாதான் எனக்குக் கடவுள்” என்று நிருபர்களை நோக்கிப் பெருமையாகக் கூறினார் ஸ்ருதி. நிருபர்கள் இன்னும் திகைப்பு மாறாமல் நின்றார்கள். “ஓகே... என் அப்பா மற்றவர்களுக்குத் தேநீர் வழங்க வேண்டும்... நானும் சிலருக்குத்  தீர்ப்பு வழங்க வேண்டும்... நான் வரட்டுமா..?” என்று அவர்களைப் பார்த்து புன்னகையோடு கூறிவிட்டு நீதிபதி ஸ்ருதி கம்பீரமாக நீதிமன்றத்திற்குள் நடந்து சென்றார். அவரை ஆனந்தக் கண்ணீரோடுப் பார்த்து நின்றார் அவரது தந்தை.   

இப்படித்தான், நாமும் நமது வாழ்வில் எல்லா நிலைகளிலும் உயர்வதற்குக் கடவுள் தனது பேரன்பையும், வாக்குப்பிறழாமையையும், நன்மைத்தனங்களையும், இரக்கப்பெருக்கத்தையும், பாதுகாப்பினையும் வழங்குகின்றார் என்பதை உணர்வோம். ஆகவே, கடவுள் நமக்கு அருளும் நீதியையும், பேரன்பையும், உண்மையையும் மாபெரும் சபைகளில் அறிவிக்கும் மனம் பெறுவோம். அதற்கான இறையருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 July 2023, 12:00