தேடுதல்

கானடா பூர்வ இனமக்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் கானடா பூர்வ இனமக்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்  

கானடாவில் பூர்வீக இனமக்களுடன் மேம்படுத்தப்பட்ட ஒப்புரவுப்பணிகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கானடா நாட்டுத் திருப்பயணத்திற்குப்பின் அந்நாட்டில் பூர்வீகக்குடிமக்களுடன் ஒப்புரவுப் பணிகள் மேம்பாடு கண்டுள்ளன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கானடா நாட்டில் திருப்பயணம் மேற்கொண்டு ஓராண்டு நிறைவுற்றுள்ள நிலையில் அந்நாட்டில் பூர்வீக இனமக்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ள ஒப்புரவுப்பணிகள் குறித்து எடுத்துரைத்துள்ளார் கானடா ஆயர் பேரவைத் தலைவர்.

19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் பூர்வீகக்குடிமக்களுக்கான தங்கி படிக்கும் விடுதிகளில் கத்தோலிக்க அருள்பணியாளர்களால் சிறார்கள் மீது உரிமை மீறல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதையொட்டி கடந்த ஆண்டு அந்நாட்டில் 6 நாள் பாவமன்னிப்பு திருப்பயணம் ஒன்றை மேற்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திருத்தூதுப் பயணத்திற்குப்பின் கடந்த ஓராண்டு காலத்தில் தலத் திருஅவைக்கும் பூர்வீகக்குடிமக்களுக்கும் இடையேயான உறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும், ஒப்புரவுப்பணிகளில் மேம்பாடும் காணப்பட்டுள்ளதாக அறிவித்தார் கானடா ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Raymond Poisson.

தங்கும் விடுதிகளில் பூர்வீகக்குடிமக்களின் சிறார் தவறாக நடத்தப்பட்டது நினைவிலிருந்து மறைந்துபோகாது எனினும், கானடா வரலாற்றில் புதியதொரு அத்தியாயம் திறக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது என்றார் ஆயர்.

2022ஆம் ஆண்டு மார்ச் 28 முதல் ஏப்ரல் முதல் தேதி வரை வத்திக்கானில் கானடா பூர்வீக இன மக்களின் பிரதிநிதிகளை திருத்தந்தை சந்தித்த நாளிலிருந்து உண்மையான ஒப்புரவுப் பணிகள் கானடா தலத்திருஅவைக்கும் அந்நாட்டு பூர்வீக இன மக்களுக்கும் இடையே துவங்கி விட்டது என உரைத்த ஆயர் Poisson அவர்கள், தொடர்ந்து இடம்பெற்றுவரும் ஒப்புரவு முயற்சிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

நல்லுறவுகளை வளர்ப்பதன் ஒரு பகுதியே ஒப்புரவு முயற்சிகள் என்பதை மனதில் கொண்டதாய் பூர்வீகக்குடிமக்களுடன் ஆன பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதையும் எடுத்துரைத்தார் ஆயர் Poisson.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 July 2023, 14:57