தேடுதல்

சேதமடைந்த ஜெனீன் சிறை சேதமடைந்த ஜெனீன் சிறை 

வன்முறை வேண்டாம், நிலையான அமைதியே வேண்டும்

அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு நியாயமான மற்றும் முழுமையான அமைதி கட்டாயம் தேவை

மெரினா ராஜ் – வத்திக்கான்

துன்பப்படுபவர்களையும், மாண்பிற்காகப் போராடும் மக்களையும் எருசலேமில் காண்கின்றேன் என்றும், வன்முறை வேண்டாம் மாறாக நீடித்த நிலையான அமைதியே வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் முதுபெரும்தந்தை Pierbattista Pizzaballa.

கடந்த வாரம் பாலஸ்தீன் நாட்டின் ஜெனின் புலம்பெயர்ந்தோர் சிறை தாக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரடியாகச் சென்று சிறை அதிகாரிகளிடம் பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார் எருசலேமின் இலத்தீன் முதுபெரும்தந்தை Pierbattista Pizzaballa.

தலத்திருஅவையினராகிய எங்களிடம் இராணுவம் இல்லை, ஆயுதங்கள் இல்லை, வன்முறையில் நம்பிக்கை இல்லை, நாங்கள் அனைத்து வகையான வன்முறைகளுக்கும் எதிரானவர்கள் என்று கூறியுள்ள பேராயர் Pizzaballa அவர்கள், பாலஸ்தீனியர்களின் மாண்பு மற்றும் சுதந்திரத்திற்கான ஒற்றுமையை வெளிப்படுத்த எருசலேம் வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

​​பன்னிரண்டு பேர் கொல்லப்பட்டும், பலர் காயமடைந்தும், 500 குடும்பங்கள் இடம்பெயர்ந்தும், ஒரு சதுர கிலோமீட்டருக்கும் குறைவான அளவில் 14,000 மக்கள் வசிக்கும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தும் உள்ளதாகத் தெரிவித்துள்ள பேராயர் Pizzaballa அவர்கள், ஜெனின் சிறை அதிகாரிகளைச் சந்தித்து, குடும்பங்களின் மாண்புள்ள வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய பொதுவான திட்டங்களைச் செயல்படுத்த, இணைந்து பணியாற்ற, விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்பின் விளைவுகளால் துன்புறும் மக்களையும், நாட்டை விட்டு வெளியேறாது மாண்புடன் சொந்த ஊரில் வாழ வேண்டும் என்ற விருப்பத்துடன் இருக்கும் மக்களையும் கண்டதாக எடுத்துரைத்த பேராயர் Pizzaballa அவர்கள், "அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு நியாயமான மற்றும் முழுமையான அமைதி" கட்டாயம் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு நியாயமான மற்றும் விரிவான அமைதியைத் தேடுவது போலவே மக்களின் நம்பிக்கையும் உள்ளது என்று  அதிகாரிகளிடம் கூறிய பேராயர்  Pizzaballa அவர்கள், இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டார்.

இதற்கிடையே, தாக்குதலினால் மருத்துவமனையும் சேதமடைந்த நிலையில் மருத்துவ ஊழியர்களை அதிகரிக்கவும், வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் ஜெனின் மருத்துவமனைக்கு ஆதரவு தேவை என்று மருத்துவமனையின் இயக்குனர் மருத்துவர் விஸ்ஸாம் பக்கர் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 July 2023, 11:34