திருத்தந்தையின் வருகைக்காக காத்திருக்கிறோம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஏறக்குறைய 1,500 திருமுழுக்கு பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவர்களைக் கொண்ட ஒரு நாட்டிற்கு வரவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகையை மங்கோலிய மக்கள் அனுபவத்தின் கொடையாக கருதுகின்றார்கள் என்றும் அவரது வருகைக்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றார்கள் என்றும் கூறியுள்ளார் கர்தினால் Giorgio Marengo.
ஜுலை 7 வெள்ளிக்கிழமை திருத்தந்தையின் மங்கோலியா நாட்டிற்கான திருத்தூதுப் பயணத்தின் இலச்சினை மற்றும் விருதுவாக்கு வெளியிடப்பட்ட நிலையில் அப்பயணம் பற்றி செய்தியாளர்களுக்கு பதிலளித்தபோது இவ்வாறு கூறியுள்ளார் மங்கோலியாவின் Ulan Bator அப்போஸ்தலிக்க நிர்வாகி கர்தினால் Giorgio Marengo.
2003ஆம் ஆண்டு திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் மங்கோலியாவிற்கு வருவதாக திட்டமிடப்பட்டு உடல்நிலை காரணமாக இரத்து செய்யப்பட்டதை நினைவுகூர்ந்த கர்தினால் மரேங்கோ அவர்கள், மிகச்சிறிய எண்ணிக்கையில் கிறிஸ்தவர்களைக் கொண்ட நாட்டிற்கு வரவிருக்கும் முதல் திருத்தந்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே என்றும் கூறினார்.
மங்கோலியாவில் மகத்தான மறைப்பணிக்கான பலன்களை அறுவடை செய்வதாக எடுத்துரைத்த கர்தினால் மரேங்கோ அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்த வருகையை, வரலாற்று நிகழ்வாகக் கொண்டாட மங்கோலியா மக்கள் அனைவரும் தயாராகி வருவதாகவும் எடுத்துரைத்தார்.
ஒன்றிணைந்து நம்பிக்கை கொள்ளுதல் என்ற விருதுவாக்குடன் இடம்பெற உள்ள இத்திருத்தூப் பயணத்தில் கத்தோலிக்கத் தலைவர்கள் மற்றும் பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களையும் திருத்தந்தை சந்திப்பார் என்றும் கூறினார் கர்தினால் மரேங்கோ.
மேலும், வீடற்றவர்கள், மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் உடனடித் தேவைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட மருத்துவ மனையுடன் கூடிய இல்லமான காசா தெல்லா மிசெரிகோர்தியாவை ஆசீர்வதித்து திறந்து வைக்க உள்ளார் எனவும் எடுத்துரைத்தார் கர்தினால் மரேங்கோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்