தேடுதல்

மெல்கித் திருஅவையின் முதுபெரும் தந்தை Youssef Absi மெல்கித் திருஅவையின் முதுபெரும் தந்தை Youssef Absi  

மெல்கி கிரேக்கக் கத்தோலிக்கத் திருஅவையின் 300-ஆம் ஆண்டு நிறைவு

1724 ஆம் ஆண்டில், அந்தியோக்கியாவின் முதுபெரும் தந்தை ஆறாம் சிரில் அவர்கள், கிறிஸ்தவத்தின் முதல் ஆயிரமாம் ஆண்டில் இருந்த உரோமைத் திருஅவையுடன் மெல்கித் திருஅவையின் ஒன்றிப்பை உறுதிப்படுத்தினார்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மெல்கிக் கிரேக்கத் கத்தோலிக்கத் திருஅவை 1724 -ஆம் ஆண்டில் உரோமைக் கத்தோலிக்கத் திருஅவையுடன் முழு ஒன்றிப்பை ஏற்படுத்தியதன் 300-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 2024 ஆம் ஆண்டில், ஒரு சிறப்பு யூபிலி ஆண்டைக் கொண்டாட உள்ளதாகத் தெரிவித்தார் அத்திருஅவையின் முதுபெரும் தந்தை Youssef Absi  

ஜூலை 11, இச்செவ்வாயன்று, லெபனானில் உள்ள அந்தியோக்கியாவின் தலைமையகமான Raboué-வில்  நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ​​இந்த யூபிலி ஆண்டுக் கொண்டாட்டம் குறித்து அறிவித்தார் மெல்கித் திருஅவையின் முதுபெரும் தந்தை Absi

எங்கள் திருஅவையின் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால பாதை மற்றும் பணி ஆகியவற்றைப் பற்றி சிந்திக்காமல் இந்த யூபிலி ஆண்டுவிழா கடந்து செல்வதை எங்கள் ஆயர் மாமன்றம் விரும்பவில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்தார் முதுபெரும் தந்தை Absi

மத்திய கிழக்கில், 17 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கி, மேற்கத்திய கத்தோலிக்க மறைப்பணியாளர்கள் வேறுபாடுகளை அகற்றிதுடன், அந்தியோக்கியாவின் முதுபெரும்தந்தையர் மற்றும் உரோமைத் திருஅவைக்கும் இடையே விரும்பிய ஒன்றிப்பை அடையவும் முயன்றனர் என்றும் விவரித்தார் முதுபெரும் தந்தை Absi

1724-ஆம் ஆண்டில், அந்தியோக்கியாவின் முதுபெரும் தந்தை ஆறாம் சிரில் அவர்கள், கிறிஸ்தவத்தின் முதல் ஆயிரமாம் ஆண்டில் இருந்த உரோமைத் திருஅவையுடன் மெல்கித் திருஅவையின் ஒன்றிப்பை உறுதிப்படுத்தினார் என்று விளக்கினார் முதுபெரும் தந்தை Absi.

இன்று, எங்கள் திருஅவைக்கும்  சகோதரத் திருஅவைகளுக்கும் இடையிலான உறவுகள், ஒருவருக்கொருவர்மீதான மரியாதை, சகோதர அன்பு மற்றும் ஒரே நற்செய்தியின் பணியில் ஒத்துழைப்பதில் ஒன்றாகத் தொடர்கிறது என்று சுட்டிக்காட்டிய முதுபெரும் தந்தை Absi அவர்கள், இதற்காக எல்லா வல்லமையும் கொண்ட இறைவனுக்கும் இதனை செயல்படுத்தியவர்களுக்கும் நன்றி என்று கூறினார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 July 2023, 13:45