நிகராகுவாவில் துறவுசபையினர் வெளியேற்றம், ஏழைகள் துயரம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
பிரேசில் நாட்டைச் சேர்ந்த இயேசுகிறிஸ்துவின் ஏழைகள் என்ற துறவுசபையின் அருள்சகோதரிகள் நிகரகுவா நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதிலிருந்து, தங்குமிடமின்றி தெருவில் வாழும் எண்ணற்ற ஏழைகள் உண்ண உணவின்றி வாடிவருவதாக அந்நாட்டு செய்தி இதழ் La Prensa கவலையை வெளியிட்டுள்ளது.
ஜூலை மாதம் 3ஆம் தேதி நிகரகுவாவிலிருந்து அருள்கன்னியர்கள் வெளியேற்றப்பட்டதிலிருந்து, உணவின்றி வாடிவரும் எண்ணற்ற ஏழைகள், அவர்கள் வெளியேற்றப்பட்டதற்கான காரணம் தெரியாமல் வாடிவருவதாகவும் தெரிவிக்கிறது இவ்விதழ்.
இக்கத்தோலிக்க துறவுசபையின் உதவியால் தினமும் சூடான உணவைப் பெற்றுவந்த ஏழைகள் தற்போது பசியால் வாடிவருவதாகவும் கூறும் கத்தோலிக்க நடவடிக்கையாளர், வழக்குரைஞர் Martha Molina அவர்கள், சுய விருப்பப்பணியாளர் அமைப்புக்கள் வழங்கிவரும் உதவிகள் அருள்கன்னியர்களின் பணிகளுக்கு ஈடாகவில்லை எனவும் தெரிவிக்கின்றார்.
ஜூலை மாதம் 2ஆம் தேதி இரவு நிகரகுவாவில் இயேசு கிறிஸ்துவின் ஏழைகள் என்ற துறவுசபையின் அருள்சகோதரிகள் 3 பேர் தங்கியிருந்த இல்லத்திற்கு வந்த அந்நாட்டு குடியேற்றத்துறை அதிகாரிகள், இரவோடு இரவாக அவர்களை Managua நகருக்கு அழைத்துச் சென்று, அடுத்த நாளே அவர்களை Honduras நகர் எல்லையில் விட்டுள்ளனர். அங்கிருந்து எல் சல்வதோர் நாட்டிற்கு பேருந்தில் பயணம் செய்த அருள்கன்னியர்கள் அங்குள்ள அவர்களின் துறவுசபை இல்லத்தில் தங்கியுள்ளனர்.
தங்கும் அனுமதி இருந்தும் இந்த இரு பிரசிலிய நாட்டு கன்னியர்களும், பரகுவாய் நாட்டு கன்னியர் ஒருவரும் நாட்டை விட்டு திடீரென வெளியேற்றப்பட்டது, அவர்களைச் சார்ந்திருந்த ஏழை மக்களை பெருமளவில் பாதித்துள்ளதாக சமூகத்தொடர்பு அமைப்புக்கள் கவலையை வெளியிட்டுள்ளன.
கத்தோலிக்கத் திருஅவைக்கு எதிரான போரை நடத்திவரும் நிகரகுவா அரசு, அனைத்து வெளிநாட்டு மறைபோதகர்களையும் நாட்டைவிட்டு வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றது. கிறிஸ்தவர்கள் நடத்திவரும் 3000க்கும் மேற்பட்ட சமூக அமைப்புக்கள் அரசால் மூடப்பட்டுள்ளன.( La Prensa )
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்