தேடுதல்

இறைவார்த்தையை இணைந்து வாசிக்கும் மனிதர்கள் இறைவார்த்தையை இணைந்து வாசிக்கும் மனிதர்கள்   (©khanchit - stock.adobe.com)

நேர்காணல் – ஆற்றல்மிகு இறைவார்த்தை, ஆறுதல் தரும் இறைவார்த்தை

அருள்பணி அருள். கப்புச்சீன் சபையைச் சார்ந்த அருள்தந்தை அருள் அவர்கள், இறையியலை திருச்சி சமயபுரத்தில் உள்ள பிரான்செஸ்கோ கப்புச்சின் இறையியல் கல்லூரியிலும், தத்துவ இயலை கோத்தகிரி புனித யோசேப்பு தத்துவக் கல்லூரியிலும், பயின்றவர். தற்போது கப்புச்சின் சபையின் மாநில கியூரியாவின் தகவல் தொடர்பு இயக்குனராகவும், மாநில வளர்ச்சி அலுவலகத்தின் உதவியாளராகவும், உதவி இறையழைத்தல் ஊக்குநராகவும் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்.
நேர்காணல் - ஆறுதல் தரும் இறைவார்த்தை - அருள்பணி அருள் OFM

மெரினா ராஜ் – வத்திக்கான்

இறைவனின் வார்த்தை ஆற்றல் மிக்கது இருபக்கமும் கூர்மையான கருக்கு நிறைந்த வாள் போன்றது. வாழ்வு தருவது இறைவார்த்தை, இயேசுவின் வாழ்வில் வாழ்வாகிய இந்த இறைவார்த்தை நமது வாழ்விலும் அது முழுமையானதாக மாற வேண்டும். நமது வாழ்வின் பிரச்சனைகளுக்கு தீர்வாக இறைவார்த்தை இருக்க வேண்டும். நமது வாழ்வை சீர்படுத்துவதாகவும், நெறிப்படுத்துவதாகவும் இருப்பது இறைவார்த்தை. இத்தகைய இறைவார்த்தையின் வல்லமை பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி அருள். கப்புச்சீன் சபையைச் சார்ந்த  அருள்தந்தை அருள் அவர்கள், இறையியலை திருச்சி சமயபுரத்தில் உள்ள பிரான்செஸ்கோ கப்புச்சின் இறையியல் கல்லூரியிலும், தத்துவ இயலை கோத்தகிரி புனித யோசேப்பு தத்துவக் கல்லூரியிலும், பயின்றவர். தற்போது கப்புச்சின் சபையின் மாநில கியூரியாவின் தகவல் தொடர்பு இயக்குனராகவும், மாநில வளர்ச்சி அலுவலகத்தின் உதவியாளராகவும், உதவி இறையழைத்தல் ஊக்குநராகவும் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார். சிறந்த சிந்தனை வளமும் குரல் வளமும் கொண்டு அன்றாட இறைவார்த்தையின் கருப்பொருளை எளிய நடையில் தெளிவாக மக்களுக்கு வழங்கி அரும்பெரும் பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கின்றார்.

தந்தை அவர்களை  ஆற்றல்மிகு இறைவார்த்தை என்ற தலைப்பில் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

ஒன்றுமில்லாமை மற்றும் ஒழுங்கின்மையில் இருந்து நிறைவைக் கொண்டு வரக்கூடிய ஆற்றல் கடவுளுடைய வார்த்தைகளுக்கு உண்டு. இந்த உலகத்தை படைத்தது இறைவனுடைய வார்த்தைகளே. படைப்பைக் குறித்து வேதத்தில் படிக்கிறபோது ‘‘கடவுள், ‘ஒளி தோன்றுக!’ என்றார்; ஒளி தோன்றிற்று’’ என்கிறது தொடக்க நூல் 1:3. அண்ட சராசரங்கள் அனைத்தின் மீதும் கடவுளுடைய வார்த்தைகளுக்கு அதிகாரம் உண்டு. மனிதன் இவ்வுலகில் தன் விருப்பம் போல வாழ்ந்து இதை பாவம் நிறைந்த உலகாக மாற்றி விட்டான். மனிதன் தூய வாழ்வு வாழ அவன் மறுபடியும் பிறக்க வேண்டியுள்ளது. அது, தாயின் வயிற்றில் இரண்டாம் முறையாக நுழைந்து பிறப்பதல்ல. வார்த்தையால் பிறப்பது. ‘நீங்கள் அழியக்கூடிய வித்தினால் அல்ல; மாறாக, உயிருள்ளதும், நிலைத்திருப்பதுமான, அழியாவித்தாகிய கடவுளின் வார்த்தையால் புதுப்பிறப்பு அடைந்துள்ளீர்கள்’ (1 பேதுரு 1:23) என்கிறது இறைவார்த்தை. கடவுளுக்கு விருப்பமான வாழ்வு வாழ, கடவுளின் சித்தத்தை நிறைவேற்றுகிற வாழ்வு வாழ, மனிதன் மறுபடியும் பிறக்க வேண்டியுள்ளது. கடவுளுடைய வார்த்தைக்கு இந்த ஆற்றல் இருக்கிறது. யோவான் எழுதிய நற்செய்தியில் மூன்றாம் அதிகாரத்தில் நிக்கோதேமு எனும் பரிசேய உயர் அதிகாரி ஆண்டவரை சந்திக்க இரவில் வருகிறார். மறுபடியும் பிறக்கும் அனுபவம் பற்றி ஆண்டவர் அவருக்குக் கற்றுத் தருகிறார். யோவான் இவரைப் பற்றி குறிப்பிடும் இடங்களில் எல்லாம் ‘இரவில் ஆண்டவரிடம் வந்த நிக்கோதேமு’ என்றே குறிப்பிடுகிறார். அவர் பரிசேயனாக இருந்தும் இருளுக்குள் தான் வாழ்ந்திருந்தார். மெய்யான ஒளியாகிய ஆண்டவரிடம் வந்து மறுபடியும் பிறக்கிற வாழ்வின் அனுபவத்தை கற்றுக் கொண்டார்.

கடவுளுடைய வார்த்தை மனிதனை மறுபடியும் பிறக்கிற வாழ்வுக்கு ஆற்றல் அளிக்கிறது. கடவுளில் வளர்தல் மறுபடியும் பிறப்பது மட்டுமல்ல, அந்த வாழ்வை தூய வாழ்வாக வாழவும், கடவுளுக்குள் வளருகிற வாழ்வாக வாழவும், துணைபுரிவது கடவுளுடைய வார்த்தைகளே. ஒரு நல்ல விதை செழிப்பான செடியாக வளருவதற்கு தடையாக அமைந்து விடுகின்ற முட்செடிகள், களைகள் போல மனித வாழ்விலும் துர்குணம், கபடம், வஞ்சகம், பொறாமை, புறங்கூறுதல் போன்ற வி‌ஷயங்கள் இருக்கின்றன. இவற்றை ஒழித்துவிட்டு தூய வாழ்வில் வளர கடவுளுடைய வார்த்தைகள் நமக்கு ஆற்றல் அளிக்கின்றன.   படுக்கைக்குச் செல்லும் முன் செபிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தான் சிறுவன் ஒருவன். ஒரு நாள் அருகில் இருந்த தன் தாயிடம், ‘அம்மா, இன்று நான் தனியே செபிக்க வேண்டும், நீங்கள் சென்று விடுங்கள்’ என்றான். அம்மா அவனிடம் காரணம் கேட்டாள். அவனோ, ‘இன்று நான் அதிக தவறுகள் செய்திருக்கிறேன். எனவே செபத்தில் அவற்றை கடவுளிடம் சொல்ல வேண்டும், நீங்கள் இருந்தால் கேட்பீர்கள், கேட்டால் திட்டுவீர்கள். கடவுளிடம் மட்டுமே சொன்னால் அவர் மன்னித்து, மறந்து விடுவார்’ என்றான். இந்த சிறுவன் ‘ஆண்டவரை அறிந்தவன் மட்டுமல்ல, ஆண்டவருக்குள் வளரத்தொடங்கி விட்டான்’ என்று பொருள். எனவே கடவுளுடைய வார்த்தைக்கு மறுபடியும் பிறப்பிக்கிற ஆற்றல் மட்டுமல்ல, அவருக்குள் வளருவதற்குத் தேவையான ஆற்றலும் உள்ளது. தூய வாழ்வு வாழ்தல் மறுபடியும் பிறக்கிற, கடவுளுக்குள் வளருகிற வாழ்வு மட்டுமல்ல, தூய்மையான வாழ்வைக் காத்துக் கொள்ளவும் கடவுளுடைய வார்த்தைகள் துணை புரிகின்றன. கடவுளுக்குள் வளர்ந்து வருகிற போது இவ்வுலகம், இவ்வுலகின் தன்மைகள் நம்முடைய வாழ்வை திசை திருப்புகின்றன. ஆனால் கடவுளுடைய வார்த்தைகள், போதனைகள் நம்மை சுத்தமாக்குகின்றன. ‘நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கனவே தூய்மையாய் இருக்கிறீர்கள்’ என்கிறது யோவான் 15:3. ஆண்டவரிடம், ‘உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் கூடும்’ என்று கேட்டவருக்கு ‘எனக்குச் சித்தமுண்டு நீ சுத்தமாகு’ என பதிலளித்தார் இயேசு. ஆண்டவரின் வார்த்தை நம்மை சுத்தமாக்குகிற ஆற்றல் உள்ளது. கடவுளுடைய வார்த்தைகள், ஒருவரை மறுபடியும் பிறக்கச் செய்கிற ஆற்றல் உள்ளது. மறுபடியும் பிறந்தவரை ஆண்டவருக்குள் வளரச் செய்கிற ஆற்றல் உள்ளது. அதை விட மேலாக சுத்தமான வாழ்க்கை வாழ காத்துக் கொள்ளுகிற ஆற்றல் உள்ளது கடவுளுடைய வார்த்தை. (இணையதள உதவி)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 July 2023, 10:10