பழங்குடியின பெண்கள் மீதான வன்முறை வெட்கக்கேடானது - பேராயர் கூடோ
மெரினா ராஜ் – வத்திக்கான்
மணிப்பூர் பழங்குடியின பெண்கள் மீதான வன்முறை வெட்கக்கேடான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்தி என்றும், இந்தியா மட்டுமல்லாது முழு உலகமும் இந்த செயலைக் கண்டிக்கின்றது என்றும் கூறியுள்ளார் பேராயர் அனில் ஜோசப் தாமஸ் கூடோ.
ஜூலை 20 வியாழன் அன்று தேசிய தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மதங்களுக்கு இடையிலான செபவழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்றபோது இவ்வாறு கூறியுள்ள டெல்லி மறைமாவட்ட பேராயர் அனில் ஜோசப் தாமஸ் கூடோ அவர்கள், மணிப்பூரில் நடந்து வரும் வன்முறையினால் குக்கி இன மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவது, பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவது வருந்தத்தக்கது என்றும் கூறியுள்ளார்
துன்புறும் உடன் சகோதரர்களுடனான நமது ஒற்றுமையை வெளிப்படுத்தவே ஒன்று கூடியிருப்பதாக எடுத்துரைத்த பேராயர் கூடோ அவர்கள், மணிப்பூர் மாநிலத்தில் விரைவில் அமைதி நிலவ அனைவரும் ஒன்றிணைந்து செபிப்போம் என்றும், மக்கள் துன்பப்படும்போது, அமைதியாக இருக்காது நாட்டிலுள்ள ஏனைய மறைமாவட்டங்கள் போன்று நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளைச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்மத உரையாடலுக்கான டெல்லி மறைமாவட்ட ஆயர் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செபவழிபாட்டில் ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் மணிப்பூரைச் சார்ந்தவர்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வடகிழக்கு இந்தியாவின் கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பு (UCFNEI) "இந்த கொடூரமான குற்றத்திற்கு உடனடி மற்றும் முழுமையான விசாரணை அரசால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகள் யார் என்று அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அதன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
பழங்குடியின மக்களுக்கான அரசு வேலைகள், கல்வி மற்றும் பிற உறுதியான திட்டங்களில் முன்னுரிமை பெற உதவும் சிறப்பு பழங்குடி அந்தஸ்தினை மெய்தி மக்களுக்கு வழங்குவதற்கான நீதிமன்ற முன்மொழிவை எதிர்த்து குக்கி இனத்தவர்கள் போராடுகின்றனர்.
மதவெறி வன்முறையினால் நூற்றிற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள், இடம்பெயர்தல்கள், உடைமைகள், வீடுகள், ஆலயங்கள் தீவைத்து சேதப்படுத்தப்படுதல் ஆகியவை நிகழ்ந்துள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்