தேடுதல்

மணிப்பூரில் அமைதி வேண்டும் கிறிஸ்தவர்கள் மணிப்பூரில் அமைதி வேண்டும் கிறிஸ்தவர்கள்   (AFP or licensors)

இந்தியக் கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகள்

கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இந்திய உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் பெரும் தோல்வியைச் சந்தித்து வருகின்றன : கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பு

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 23 மாநிலங்களில் இருந்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான 274 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக புதுடெல்லியை தளமாகக் கொண்ட கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பு (UCF) தெரிவித்துள்ளது.

ஜூலை 11, இச்செவ்வாயன்று, வெளியிட்ட அறிக்கையொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள அவ்வமைப்பு, இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசம், இந்த ஆண்டு இதுவரை 155 வழக்குகளுடன் அதிக எண்ணிக்கையைக் கொண்டதாக முதலிடத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில், மத்திய இந்திய மாநிலமான சத்தீஸ்கரில் உள்ள பஸ்தர் 31 வன்முறை சம்பவங்களுடன் முதல் இடத்தில் உள்ளது  எனத் தெரிவிக்கும் அவ்வமைப்பு, "வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக வன்முறை நிகழ்ந்து வரும் வேளை, அங்கு மேலும் நூற்றுக்கணக்கான வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்பட்டுள்ளதுடன் பல விலைமதிப்பற்ற உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன என்றும் கூறுகிறது.

உத்தரப் பிரதேசம் மற்றும் மணிப்பூரைத் தவிர, சத்தீஸ்கர் 84 சம்பவங்களையும், ஜார்க்கண்ட் 35, ஹரியானா 32, மத்தியப் பிரதேசம் 21, பஞ்சாப் 12, கர்நாடகா 10, பீகார் ஒன்பது, ஜம்மு & காஷ்மீர் 8, மற்றும் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 7 சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் அவ்வறிக்கை சுட்டுகின்றது.

உத்தரகாண்ட், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, டெல்லி, ஆந்திரப் பிரதேசம், அசாம், சண்டிகர் மற்றும் கோவாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஐந்துக்கும் குறைவான விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் கூறுகின்றது அவ்வமைப்பின் அறிக்கை

2014-ஆம் ஆண்டு முதல் மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையின் ஆபத்து அதிகரித்துள்ளது என்றும், 2014-ஆம் ஆண்டில் 147 சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் எடுத்துக் காட்டும் அவ்வமைப்பு, பெரும்பாலான வேளைகளில், மோடியின் அரசியல் அமைப்பான பாரதிய ஜனதா கட்சியின் முக்கியக் குற்றவாளிகளுக்கு எதிராகக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யத் தவறிவிடுகின்றனர் என்றும் தெரிவிக்கிறது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 July 2023, 13:51