தேடுதல்

மக்கள் முன்னிலையில் உரையாற்றும் அரசர் சாலமோன் மக்கள் முன்னிலையில் உரையாற்றும் அரசர் சாலமோன்  

தடம் தந்தை தகைமை – மக்களுக்கு அரசர் சாலமோனின் உரை

ஆண்டவர் தாம் உரைத்த வாக்கை இப்போது நிறைவேற்றியுள்ளார். ஆண்டவர் சொன்னடியே நான் என் தந்தை தாவீதின் இடத்திற்கு உயர்ந்து, இஸ்ரயேலின் அரியணையில் அமர்ந்துள்ளேன். மேலும், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கு இந்தக் கோவிலையும் கட்டியுள்ளேன்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

சாலமோன் அரசர் மக்கள் பக்கம் திரும்பி, இஸ்ரயேல் சபையார் அனைவருக்கும் ஆசி வழங்கினார். அப்பொழுது இஸ்ரயேல் சபையார் அனைவரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர் மக்களுக்கு உரைத்தது: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! அவர் என் தந்தை தாவீதுக்கு வாயால் உரைத்ததைக் கையால் செய்து முடித்தார். ‘என் மக்களாகிய இஸ்ரயேலை எகிப்திலிருந்து அழைத்து வந்த நாள் முதல் இன்றுவரை, என் பெயர் விளங்கும்படி ஒரு கோவிலைப் கட்டுவதற்காக, இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களுக்குச் சொந்தமான எந்த நகரையும் நான் தேர்ந்து கொள்ளவில்லை. ஆனால், தாவீதாகிய உன்னை என் மக்களாகிய இஸ்ரயேலை ஆளும்படி தேர்ந்து கொண்டேன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்குக் கோவில் கட்டவேண்டும் என்ற எண்ணம் என் தந்தை தாவீதின் உள்ளத்தில் இருந்தது. ஆயினும் ஆண்டவர் என் தந்தை தாவீதை நோக்கி, ‘என் பெயருக்குக் கோவில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உன் உள்ளத்தில் இருக்கிறது. அது நல்லதுதான், ஆயினும், நீ அக்கோவிலைக் கட்டபோவதில்லை. உனக்குப் பிறக்கும் உன் மகனே என் பெயருக்கு அக்கோவிலைக் கட்டுவான்’ என்றார். இவ்வாறு, ஆண்டவர் தாம் உரைத்த வாக்கை இப்போது நிறைவேற்றியுள்ளார். ஆண்டவர் சொன்னடியே நான் என் தந்தை தாவீதின் இடத்திற்கு உயர்ந்து, இஸ்ரயேலின் அரியணையில் அமர்ந்துள்ளேன். மேலும், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கு இந்தக் கோவிலையும் கட்டியுள்ளேன். இதனுள் ஆண்டவர் நம் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த போது அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை வைக்க, ஒரு தனி இடத்தையும் ஏற்பாடு செய்துள்ளேன் என்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 July 2023, 16:03