தேடுதல்

மொர்தக்காய் தன் பணியில் மொர்தக்காய் தன் பணியில் 

தடம் தந்த தகைமை - யூதர் தம் எதிரிகளை அழித்தல்

யூதர் அனைவரும் தமக்குத் துன்பம் விளைவிக்க எண்ணியோர்க்கு எதிராய்த் தம் கைகளை நீட்ட அவரவர் தம் இடங்களில் ஒன்று திரண்டனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மன்னரின் வாக்கும் நியமும் நிறைவேற்றப்படவேண்டிய அதார் என்ற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாள் வந்தது. எதிரிகள் யூதரை மேற்கொள்ளலாம் என்று நம்பியிருந்த அந்த நாள், யூதர் தம் பகைவரை மேற்கொள்ளும் நாளாக மாறியது. அகஸ்வேர் மன்னரின் மாநிலங்களில் இருந்த யூதர் அனைவரும் தமக்குத் துன்பம் விளைவிக்க எண்ணியோர்க்கு எதிராய்த் தம் கைகளை நீட்ட அவரவர் தம் இடங்களில் ஒன்று திரண்டனர். வேற்றினத்தாரை அச்சம் ஆட்கொள்ள, அவர்களுள் எவராலும் யூதரை எதிர்த்து நிற்க இயலவில்லை. மொர்தக்காயைப் பற்றிய அச்சம் மன்னரின் அலுவல்களில் உதவி செய்கின்ற மாநிலத் தலைவர்கள், குறுநில மன்னர்கள், ஆளுநர்கள் அரச ஊழியம் செய்வோர் அனைவரையும் ஆட்கொள்ள அவர்களும் யூதருக்கு உதவி செய்யலாயினர். மொர்தக்காய் அரச மாளிகையில் வல்லவரானார். அவரது புகழ் அனைத்து மாநிலங்களிலும் பரவியது. அவரது ஆற்றல் மென்மேலும் வளர்ந்தது. எனவே, யூதர் தம் பகைவருக்கு எதிராய்த் தாம் விரும்பியபடி செய்தனர். அவர்களை வாளால் தாக்கி வெட்டி வீழ்த்தினர்.

சூசான் அரண்மனையில் ஐந்நூறு பேரை யூதர் கொன்றொழித்தனர். பர்சந்தத்தா, தல்போன், அஸ்பாத்தா, போராத்தா, அதலியா, அரிதாத்தா, பர்மஸ்தா, அரிசாய், அரிதாய், வய்சாத்தா ஆகிய யூதரின் எதிரியும் அம்மதாத்தின் மகனுமான ஆமானின் புதல்வர் பதின்மரையும் அவர்கள் கொன்றனர்; ஆயினும், அவர்களின் உடைமைகளைக் கொள்ளையடிக்கவில்லை.

மன்னரின் பிற மாநிலங்களில் வாழ்ந்த யூதர் ஒன்று திரண்டு தம்மைப் பாதுகாத்துக்கொன்டனர். தம் பகைவரிடமிருந்து விடுதலை பெறுமாறு அவர்கள் எழுபத்தைந்து ஆயிரம் பேரைக் கொன்றனர். ஆயினும் அவர்கள் உடைமைகளைக் கொள்ளையடிக்கவில்லை. அதார் மாதம் பதின்மூன்றாம் நாளையடுத்த பதினான்காம் நாளன்று அவர்கள் ஓய்வெடுத்தனர். அந்நாளை விருந்துண்டு மகிழும் விழாவாக ஆக்கினர். சூசான் வாழ் யூதரோ அதார் மாதம் பதின்மூன்றாம், பதினான்காம் நாள்களில் ஒன்றுகூடி அடுத்துவந்த பதினைந்தாம் நாளை ஒய்வெடுத்து, விருந்துண்டு மகிழும் விழாவாக ஆக்கினர். அரணற்ற நகர்ப்புறச் சிற்றூர்களில் வாழ்ந்த யூதர், அதார் மாதம் பதினான்காம் நாளை விருந்துண்டு மகிழ்ந்து, ஒருவருக்கொருவர் அன்பளிப்பு கொடுத்துக் கொள்ளும் விழாவாக ஆக்கினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 July 2023, 14:26