தடம் தந்த தகைமை - அரசனின் கனவும் தானியேலின் விளக்கமும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
நெபுகத்னேசர் தனது இரண்டாம் ஆட்சியாண்டில் கனவுகள் சில கண்டு, உள்ளம் கலங்கி, உறக்கமின்றித் தவித்தார். அப்பொழுது அரசர் தன் கனவுகளைத் தனக்கு விளக்கும்படி மந்திரவாதிகளையும் மாயவித்தைக்காரர்களையும் சூனியக்காரர்களையும் கல்தேயர்களையும் அழைத்துவரக் கட்டளையிட்டார். அவர்களும் வந்து அரசர் முன்னிலையில் நின்றார்கள். அரசர் அவர்களை நோக்கி, “நான் ஒரு கனவு கண்டேன்; அதனால் என்னுள்ளம் கலக்கமுற்றிருக்கிறது; நான் கண்டது இன்னதென்று அறிய விரும்புகிறேன்” என்றார். அப்பொழுது கல்தேயர் அரசரை நோக்கி, “அரசரே! நீர் நீடுழி வாழ்க! நீர் கண்ட கனவை உம் பணியாளர்களுக்குச் சொல்லும். நாங்களும் அதன் பொருளை உமக்கு விளக்கிக் கூறுவோம்” என்று கூறினார்கள். அரசன் கல்தேயருக்கு மறுமொழியாக, “நான் கண்ட கனவு என்ன என்பதையும் அதன் உட்பொருளையும் எனக்கு நீங்கள் விளக்கிக் கூறாவிடில், உங்களைக் கண்டந்துண்டமாய் வெட்டிவிடுவேன்; உங்கள் வீடுகளும் தரைமட்டமாக்கப்படும்; இது என் திண்ணமான முடிவு” என்று கூறினார்.
கல்தேயர் மறுபடியும் அரசரை நோக்கி, “அரசரே! உமது விருப்பத்தை நிறைவேற்றக்கூடியவன் இவ்வுலகில் ஒருவனுமில்லை. ஏனெனில், நீர் கேட்கும் காரியம் செயற்கரிய ஒன்று; தெய்வங்களாலன்றி வேறெவராலும் அரசருக்கு அதனைத் தெரிவிக்க முடியாது; ஆனால், மானிடர் நடுவில் தெய்வங்கள் இருத்தலில்லையே!” என்று மறுமொழி கூறினார்கள்.
அரசர் இதைக் கேட்டுக் கடுஞ்சினமுற்றுச் சீறி எழுந்து பாபிலோனில் இருந்த எல்லா ஞானிகளையும் அழித்து விடும்படி ஆணையிட்டார். ஞானிகள் கொலை செய்யப்படவேண்டும் என்ற ஆணையின்படி தானியேலையும் அவருடைய தோழர்களையும் கொலை செய்யத் தேடினார்கள்.
உடனே தானியேல் அரசரிடம் போய், கனவின் உட்பொருளை அவருக்கு விளக்கிக்கூறத் தமக்குச் சில நாள் கெடு தருமாறு கேட்டுக்கொண்டார். அன்றிரவு கண்டகாட்சி ஒன்றில், தானியேலுக்கு அம்மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது.
தானியேல் அரசரை அணுகி, அரசரே! மறைபொருள்களை வெளிப்படுத்தும் விண்ணகக் கடவுள் பிற்காலத்தில் நிகழப் போவதை நெபுகத்னேசர் என்னும் உமக்கு இந்த கனவின் வழி தெரிவித்துள்ளார்; அரசரே! நீர் பெரிய சிலை ஒன்றைக் கண்டீர். உம் கண் எதிரே நின்ற அம் மாபெரும் சிலை பளபளக்கும் ஒளிமிக்கதாயும் அச்சுறுத்தும் தோற்றமுடையதாயும் இருந்தது. பொன்னாலாகிய சிலையின் தலை உம்மையே குறிக்கின்றது. உமக்குப்பின் உமது அரசைவிட ஆற்றல் குறைந்த வேறோர் அரசு தோன்றும்; அடுத்து வெண்கலம் போன்ற மூன்றாம் அரசு எழும்பும்; அது உலகெல்லாம் ஆளும். பின்னர், அனைத்தையும் நொறுக்கும் இரும்பைப் போல் வலிமை வாய்ந்த நான்காம் அரசு தோன்றும்; அந்த அரசும் இரும்பு நொறுக்குவது போல் அனைத்தையும் தகர்த்துத் தவிடுபொடியாக்கும். மேலும், நீர் அச்சிலையின் அடிகளையும் கால் விரல்களையும், ஒரு பகுதி குயவனின் களி மண்ணாகவும், மறு பகுதி இரும்பாகவும் கண்டதற்கிணங்க, அந்த அரசு பிளவுபட்ட அரசாய் இருக்கும். அந்த அரசர்களின் காலத்தில் விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்; அது என்றுமே அழியாது; அதன் ஆட்சியுரிமை வேறெந்த மக்களினத்திற்கும் தரப்படாது. அது மற்ற அரசுகளை எல்லாம் நொறுக்கி அவற்றிற்கு முடிவுகட்டும்; அதுவோ என்றென்றும் நிலைத்திருக்கும். மனிதக்கை படாது பெயர்ந்து மலையிலிருந்து உருண்டு வந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கியதாக நீர் கண்ட அந்தக் கல் இந்த அரசையே குறிக்கிறது. இவ்வாறு எதிர்காலத்தில் நிகழப்போவதை மாபெரும் கடவுள் அரசருக்குத் தெரிவித்திருக்கிறார். கனவும் உண்மையானது; அதன் உட்பொருள் நிறைவேறுவதும் உறுதி, என்றார்.
இதைக் கேட்ட அரசர் நெபுகத்னேசர் தானியேலின் அடிகளில் வீழ்ந்து வணங்கினார்; அவருக்குக் காணிக்கைப் பொருள்களைப் படைத்துத் தூபமிடுமாறு ஆணையிட்டார். பின்பு அரசர் தானியேலை உயர்ந்த முறையில் சிறப்பித்து அவருக்குப் பரிசில் பல தந்து, பாபிலோன் நாடு முழுவதற்கும் அவரை ஆளுநராக ஏற்படுத்தினார்; பாபிலோனிய ஞானிகள் அனைவர்க்கும் தலைவராகவும் நியமித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்