தேடுதல்

மணிப்பூர் மக்களுக்காக போராடும் பெங்களூரு மக்கள் மணிப்பூர் மக்களுக்காக போராடும் பெங்களூரு மக்கள்  (ANSA)

மணிப்பூர் வன்முறை மனித உரிமை மீறலின் அடையாளம்

தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி, அப்பாவிகளின் உயிர்களைப் பலி கொடுத்து அரசியல் ஆதாயம் தேட முடியாது - ஆயர் பிரின்ஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

கடவுளைப் போல மதிக்கப்படவேண்டிய பெண்கள், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு துன்புறுத்தப்படுவது மனித உரிமை மீறல் என்றும், இனங்களுக்கிடையேயான மோதல் என்று அரசு இதுவரை அமைதி காத்தது கண்டிக்கத்தக்க செயல் என்றும் கூறியுள்ளார் ஆயர் பிரின்ஸ் அந்தோணி.

கடந்த மேமாதம் முதல் நடந்து வரும் மணிப்பூர் வன்முறையினால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் அதுபற்றிய தனது கண்டனத்தை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார் ஆந்திரா மாநிலத்தின் அதிலாபாத் மறைமாவட்ட ஆயர் பிரின்ஸ் அந்தோணி.

குற்றவாளிகளின் கூச்சலும் ஏளனச்சிரிப்பும் இந்தியாவின் புனிதமான அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிப்பதாக உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள ஆயர் பிரின்ஸ் அவர்கள், நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் இது மீண்டும் நிகழாத வகையில், இந்தியாவின் அனைத்து பொறுப்புள்ள குடிமக்களாலும் கண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய, மாநில அரசுகள் மற்றும் காவல் துறையின் உடனடி நடவடிக்கைகள் எதுவும் இல்லாததால் அது மணிப்பூர் வன்முறைக்கு மேலும் வலுசேர்த்துள்ளது என்று கூறியுள்ள ஆயர் பிரின்ஸ் அவர்கள், கிறிஸ்தவர்கள், அவர்களின் ஆலயங்கள் அழிக்கப்பட்டதன் எண்ணிக்கையானது இவ்வன்முறை கிறிஸ்தவர்கள் மீது குறிவைத்து நடத்தப்படுகின்றன என்பதற்கான தெளிவான சான்றுகள் என்றும் கூறியுள்ளார்.

இன மோதல்கள் என்ற பெயரில் வன்முறையை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், சட்டத்தை மீறுபவர்களின் வன்முறைச் செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் சாதி, இனம் அல்லது மதத்தின் பெயரால் வன்முறையை நியாயப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார் ஆயர் பிரின்ஸ்.

மணிப்பூரில் உள்ள கிறிஸ்தவர்களின் அவலநிலை, கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த நாட்டிற்கும் கவலையளிக்கிறது என்று கூறிய ஆயர் அவர்கள், மதத்தின் பெயரால் செய்யப்படும் வன்முறைச் செயல்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மீறுவதாகும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதை வலியுறுத்திய ஆயர் பிரின்ஸ் அவர்கள், அப்பாவிகளின் உயிர்களைப் பலி கொடுத்து அரசியல் ஆதாயம் தேட முடியாது என்றும், ஒரு உண்மையுள்ள கிறிஸ்தவராகவும், பெருமைமிக்க இந்தியக் குடிமகனாகவும், மணிப்பூரில் மனித உரிமை மீறல் மற்றும் கிறிஸ்தவ துன்புறுத்தல்களை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 July 2023, 11:29