உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் இந்தியர்கள் பங்கேற்பு
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஆகஸ்ட் மாதம் லிஸ்பனில் நடைபெற உள்ள உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க இந்தியாவிலிருந்து ஏறக்குறைய 1000 பேர் கலந்து கொள்ள உள்ளதாக இந்திய கத்தோலிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் மாதம் 1 முதல் 6 வரை லிஸ்பனில் நடைபெறும் உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் உலகம் முழுதும் இருந்து 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்ள உள்ள நிலையில் இந்திய இளையோர் ஏறக்குறைய 1000பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் இளையோர் அமைப்பின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட இந்திய பிரதிநிதிகள் குழுவில் 241 அதிகாரிகள், ஏறக்குறைய 900 இளைஞர்கள் மற்றும் அவர்களை வழிநடத்துபவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இயேசுவின் இளையோர் மற்றும் பிற துறவற சபை இளையோர் ஏற்கனவே லிஸ்பன் நோக்கிய தங்களது பயணத்தைத் துவக்கிவிட்டனர் என்றும், மற்றும் சிலர் தங்களது பயணத்தைத் தொடங்க உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார் CBCI இளைஞர் அமைப்பின் செயலாளர் அருள்பணி சேத்தன் மச்சாடோ.
ஜூலை 18அன்று இளையோர் அமைப்பின் மண்டலச் செயலர் தலைமையில் தமிழகத்தைச் சார்ந்த 24 இளையோர் லிஸ்பன் நோக்கி புறப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் சில நாட்கள் தங்களது நேரத்தை செலவழித்து அதன்பின் லிஸ்பன் உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார் பாண்டிச்சேரி இளையோர் அமைப்பின் முன்னாள் செயலர் அருள்பணி அற்புதராஜ்.
2022ஆம் ஆண்டு கோடைகாலத்தில் ஆகஸ்ட் 2முதல் 7வரை நடத்த திட்டமிடப்பட்ட இந்த உலக இளையோர் தினக் கொண்டாட்டமானது 2019 ஆம் ஆண்டு பனாமாவில் சிறப்பிக்கப்பட்ட உலக இளையோர் தின நிறைவு திருப்பலியின் போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அறிவிக்கப்பட்டது.
அதன்பின் ஏற்பட்ட கோவிட் பெருந்தொற்று பாதிப்பினால் 2023ஆம் ஆண்டிற்கு மாற்றி வைக்கப்பட்ட இக்கொண்டாட்டம் லிஸ்பனில் நடைபெறுவது இதுவே முதன் முறையாகும். இவ்வாண்டிற்கான உலக இளையோர் தினக் கொண்டாட்டத்திற்கான கருப்பொருள் மரியா எழுந்து விரைந்து சென்றார் என்பதாகும். இதன் வழியாக இன்றைய இளையோர் அன்னை மரியா போல நற்செய்தி அறிவிப்பு மற்றும் பிறரன்புப் பணிகள் செய்ய சுறுசுறுப்பு மற்றும் துணிவுடன் கூடிய மறைப்பணி ஆர்வத்துடன் செயல்பட அழைப்புவிடுக்கின்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்