தேடுதல்

துணிவுடன் போதிக்கும் இயேசு துணிவுடன் போதிக்கும் இயேசு  

பொதுக்காலம் 12-ஆம் ஞாயிறு : பணி வாழ்வில் துணிவுகொள்வோம்!

நமது இலட்சியப் பாதையில் ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்ல கடவுள் ஒருவருக்கே அஞ்சி நமது பயணத்தைத் தொடர்வோம்.
பொதுக்காலம் 12-ஆம் ஞாயிறு : பணி வாழ்வில் துணிவுகொள்வோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்    I.   எரே 20: 10-13    II.  உரோ 5: 12-15    III.  மத்  10: 26-33)

பொதுக் காலத்தின் பன்னிரெண்டாம் ஞாயிறை இன்று சிறப்பிக்கின்றோம். கடந்த வாரஞாயிறு வாசகங்கள் ஆயரில்லா ஆடுகளைப் போல் அலைக்கழிக்கப்படும் மக்கள்மீது பரிவிரக்கம் கொள்ளவும், அதற்கான இறைவனின் அழைப்பை ஏற்கவும் அழைப்பு விடுத்தன என்பதை இக்கணம் நினைவுகூர்வோம். இவ்வார வாசகங்கள், அவ்வாறு இறைவனின் அழைத்தலை ஏற்று மக்கள் பணிபுரியும் வேளை, தீயவர்களினால் வரும் துயரங்களையும் அதன் விளைவாக ஏற்படும் இலட்சிய மரணத்தையும் வீரமுடன் ஏற்க அழைப்பு விடுகின்றன. "ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்" என்ற இயேசுவின் வார்த்தைகள்தாம் இன்றைய நற்செய்திக்கு மட்டுமல்ல, மூன்று வாசகர்களுக்கும் மையக்கருத்தாக அமைந்துள்ளது. இயேசு ஆண்டவர் கூறும் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், சில ஆண்டுகளுக்கு முன்பு நான் நூல் ஒன்றில் வாசித்த நிகழ்வொன்று என் நினைவுக்கு வருகிறது. அதுமட்டுமன்றி, அந்நிகழ்வு இயேசு கூறும் இந்த வார்த்தைகளுக்கு மிகவும் கனக்கச்சிதமாகப் பொருந்தி நிற்கிறது.

'அறியப்படாத வீரனுக்காக' (The Unknown Soldier) என்ற புத்தகத்தில் அஞ்சா நெஞ்சம் கொண்ட ஒரு விடுதலை வீரனின் வீர மரணம் குறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடுத்தலை வீரனிடம் தனது மாண்பும் மேன்மையும் தோற்றுப்போனதாக அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் பதிவுசெய்துள்ளார். அந்த நிகழ்வு இதுதான். வியட்நாம் விடுதலை வீரன் ஒருவன் அமெரிக்க இராணுவத்திடம் பிடிபட்டுக்கொள்கிறான். உளவுப்பிரிவில் இயங்கிய முக்கியமான வீரன் என்பதுடன், எல்லா உண்மைகளையும் இரகசியங்களையும் அறிந்து வைத்திருந்தான் அவ்வீரன். அப்போது அவனிடத்தில் நயமாகப் பேசி அவனைத் தங்கள் வயப்படுத்த முயற்சிக்கின்றனர் அமெரிக்க இராணுவ அதிகாரிகள். இன்பவாழ்க்கை என விரும்பும் எதையும், அது எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும் அவனுக்குத் தருவதாக அவர்கள் வாக்குக்கொடுக்கின்றனர். ஆனால், அவ்வீரனோ அற்ப சுகத்திற்காக விடுதலையை விற்க மறுக்கிறான். அப்போது அவர்கள் தங்கள் கரங்களிலிருந்த துப்பாக்கியால் அவனை அடித்துத் துவைக்கின்றனர். பற்கள் உடைந்து உதடுகள் கிழிந்து இரத்தம் கொட்டுகிறது. "டேய் உன் விடுதலை இப்போது எப்படி இருக்கிறது" என்று கேட்டு அவனை எள்ளிநகையாடி ஏளனப்படுத்துகின்றனர். அப்போது, "எனக்கு வலிக்கிறது... உண்மைதான். ஆனால் நீங்கள் என்னை வெல்லவில்லை, வெல்லவும் முடியாது" என்று பதில் தருகின்றான் அவ்வீரன்.

உடனே கோபம் தலைக்கேறியவர்களாய் அமெரிக்கப் படை வீரர்கள் அவனின் கைகளிலும் கால்களிலும் உள்ள நகங்களை இரும்புக் குறடு கொண்டு பிடுங்கி எறிகிறார்கள். “இப்போது எப்படி இருக்கிறது உனது விடுதலையும் இலட்சியமும்” என்று கேட்டு அவனைப் பரிகாசம் செய்கிறார்கள் அவர்கள். அவன் அப்போதும், "என்னால வலிதாங்க முடியவில்லைதான்... ஆனால், இப்போதும் நீங்கள் என்னை வெல்லவில்லை... வெல்லவும் முடியாது” என்று கூறுகின்றான் அவ்வீரன். அப்போது அவர்களுக்கு ஆத்திரம் இன்னும் அதிகமாகத் தலைக்கேறுகிறது. உடனே கோபவெறிகொண்டவர்களாக அவனது கால்களை உடைத்தும் கைகளைத் திருகியும் அவனை வேதனைப்படுத்துகிறார்கள். அவனது முகத்தில் காரி உமிழ்கிறார்கள். துப்பாக்கியை அவன் தலையில் வைத்தவனாய், "நாயே, சாகப்போகிறாய்! இப்போது கூட உன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள உனக்கு விருப்பம் இல்லையா?” என்று வெறிகொண்டு கத்துகிறார் அந்த அமெரிக்கப் படை தளபதி. அப்போது உயிர்போகும் அந்தக் கொடிய வலிகளின் துயரத்திலும், “ஐயா, உங்களைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருக்கின்றது. மரணம் எனக்கு மிக அருகில் இருப்பது என் கண்களுக்குத் தெரிகிறது. ஆனாலும், வெற்றிபெற்றவனாகவே நான் சாகப் போகிறேன். நீங்கள் என்னை வெல்ல முடியாது... வெல்லவும் விடமாட்டேன். என் உயிர் பிரியும் அந்தக் கணப்பொழுதில் உங்களின் தோல்வி நிரூபணமாகும்” என்று துணிவுடன் கூறும் அவ்வீரன் நொடிப்பொழுதில் சுட்டு வீழ்த்தப்படுகிறான். அந்த வியட்நாம் விடுதலை வீரனின் துணிவையும் எதற்காகவும் தனது விடுதலையை விற்கத்துணியாத அவனின் மனவுறுதியையும் கண்டு மிரண்டுபோகிறார் அந்த அமெரிக்க இராணுவ அதிகாரி. இந்தச் சம்பவத்தை அவரே பதிவு செய்திருக்கின்றார் என்பதுதான் முக்கியம்.  

உண்மைக்காக, இலட்சியத்திற்காக, உயர்ந்த நோக்கத்திற்காக உழைக்கும் எந்தவொரு மனிதரும் இப்படிப்பட்ட கொடிய மரணத்தைச் சந்தித்துதான் ஆகவேண்டும், இயேசுவின் துணிச்சல்மிகு செயல்பாடுகள், நடவடிக்கைகள் யாவும் அவர் கூறிய ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்"  என்ற வார்த்தைகளுக்குச் சான்று பகர்கின்றன. இதற்கு மூன்று காரியங்களை எடுத்துக்காட்டுகளாக நான் முன்னிறுத்த விழைகின்றேன், முதலாவதாக, எருசலேம் ஆலயத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்வு. கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்; கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடுமாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், “இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்” (காண்க. யோவா 2:14-16) என்று கூறினார். இரண்டாவதாக, இயேசு, எருசலேமுக்காகப் புலம்பும் நிகழ்வில் இதனைக் காண்கின்றோம். அந்நேரத்தில் பரிசேயர் சிலர் இயேசுவிடம் வந்து, “இங்கிருந்து போய்விடும்; ஏனெனில், ஏரோது உம்மைக் கொல்லவேண்டும் என்றிருக்கிறான்” என்று கூறினார். அதற்கு அவர் கூறியது: “இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன்; பிணிகளைப் போக்குவேன்; மூன்றாம் நாளில் என்பணி நிறைவுபெறும் என நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள். இன்றும் நாளையும் அதற்கடுத்த நாளும் நான் தொடர்ந்து சென்றாக வேண்டும்” (காண்க. லூக் 13:31-33) என்கின்றார். மூன்றாவதாக, இயேசு தனது இலட்சிய மரணத்தை ஏற்கும் விதமாக மூன்று முறை சாவை அறிவிக்கின்றார். “மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்” என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார் (காண்க மாற் 8:31). ஆக, நாம் நினைவுகூர்ந்துள்ள இந்த மூன்று நிகழ்வுகளும், யாருக்கு அஞ்சவேண்டும் யாருக்கு அஞ்சக்கூடாது என்பதையும் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

எருசலேம் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் இயேசு
எருசலேம் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் இயேசு

இன்றைய முதல் வாசகத்தில் இயேசுவின் வழியில் எல்லா நிலைகளிலும் துயரங்களையும் சாவினையும் ஏற்ற இறைவாக்கினரான எரேமியாவின் இலட்சிய வாழ்வு நமக்குச் சுட்டிக்காட்டப்படுகிறது. இறைத்தந்தையின் இறைவாக்குப் பணிகளை அவர் ஏற்றுக்கொண்டபோது அவர் அனுபவித்த துயரங்களையும் கொடிய வேதனைகளையும் எடுத்துக்காட்டுகின்றார் எரேமியா. முதலாவதாக, “சுற்றிலும் ஒரே திகில்!’ என்று பலரும் பேசிக் கொள்கின்றார்கள்; ‘பழிசுமத்துங்கள்; வாருங்கள், அவன்மேல் பழி சுமத்துவோம்’ என்கிறார்கள். என் நண்பர்கள்கூட என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்; ‘ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்; நாம் அவன்மேல் வெற்றி கொண்டு அவனைப் பழி தீர்த்துக் கொள்ளலாம்’ என்கிறார்கள்” என்று அவர் கூறும் வார்த்தைகளில் உடலை மட்டுமே கொல்லக்கூடிய மனிதர்களின் செயல்பாடுகளை எடுத்துரைக்கின்றார். இரண்டாவதாக, “ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார். எனவே, என்னைத் துன்புறுத்துவோர் இடறி விழுவர். அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள். அவர்கள் விவேகத்தோடு செயல்படவில்லை; அவர்களின் அவமானம் என்றும் நிலைத்திருக்கும்; அது மறக்கப்படாது” என்ற வார்த்தைகளில் ஆன்மாவைக் கொல்ல முடியாதவர்களாய் உடலை மட்டுமே கொல்லும் அம்மனிதர் மடிந்துவிடுவர் என்றும், நிலைவாழ்வுக்குத் தன் ஆன்மாவைக் காப்பாற்றும் இறைவன் உடனிருக்கின்றார் என்றும் எடுத்துரைக்கின்றார். எரேமியாவும் இயேசுவும் இறைத்தந்தைக்கு அதாவது ஆன்மாவைக் கொல்லும் வல்லமைபடைத்தவருக்கே தங்களை முற்றிலுமாகக் கையளித்தனர் என்பதையும் நாம் அறிய முடிகிறது.

‘சகோதரர்கள் எழுவரின் சான்று’ என்ற தலைப்பில் இரண்டாம் மக்கபேயர் நூலில் அருமையான நிகழ்வொன்று வருகின்றது. சகோதரர்கள் எழுவரும் அவர்களுடைய தாயும் கைதுசெய்யப்பட்டு சாட்டைகளாலும் வார்களாலும் அடிக்கப்பட்டுச் சட்டத்துக்கு முரணாகப் பன்றி இறைச்சியை உண்ணும்படி மன்னனால் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ஆனால், அவர்கள் எழுவரும் சிறிதும் அசைந்துகொடுக்கவில்லை. கடவுளுக்கு எதிரான இந்தக் கேடுகெட்ட செயலை ஒருபோதும் செய்யமாட்டோம் என்று உறுதியாக நிற்கின்றனர். எனவே, கோபவெறிகொள்ளும் அந்த அரசன் அந்தத் தாயின் கண்முன்பாகவே அவருடைய பிள்ளைகள் எழுவரையும் கொடூரமாகத் துடிக்கத் துடிக்க வதைத்துக் கொல்கிறான். இதில் நாம் முக்கியமாகக் கவனிக்கவேண்டிய ஒரு காரியம் என்னெவென்றால் அந்தத்தாயின் உறுதிகொண்ட மனமும் கடவுள்மீது வைத்திருக்கும் அவரின் அசைக்க முடியாத நம்பிக்கையும்தான். இப்போது அந்த இறைவார்த்தைகளை வாசிப்போம். எல்லாருக்கும் மேலாக, அவர்களுடைய தாய் மிகவும் போற்றுதற்குரியவர், பெரும் புகழுக்குரியவர். ஒரே நாளில் தம் ஏழு மைந்தர்களும் கொல்லப்பட்டதை அவர் கண்டபோதிலும், ஆண்டவர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால் அவை அனைத்தையும் மிகத் துணிவோடு தாங்கிக் கொண்டார்; அவர்கள் ஒவ்வொருவருக்கும் தாய்மொழியில் அறிவுரை கூறினார்; பெருந்தன்மை நிறைந்தவராய்ப் பெண்ணுக்குரிய பண்பையும் ஆணுக்குரிய துணிவையும் இணைத்து அவர்களிடம், “நீங்கள் என் வயிற்றில் எவ்வாறு உருவானீர்கள் என நான் அறியேன்; உங்களுக்கு உயிரும் மூச்சும் அளித்ததும் நான் அல்ல; உங்களுடைய உள்ளுறுப்புகளை ஒன்றுசேர்த்ததும் நான் அல்ல. உலகைப் படைத்தவரே மனித இனத்தை உருவாக்கியவர்; எல்லா பொருள்களையும் உண்டாக்கியவர்; அவரே தம் இரக்கத்தினால் உங்களுக்கு உயிரையும் மூச்சையும் மீண்டும் கொடுப்பார்; ஏனெனில் அவருடைய சட்டங்களை முன்னிட்டு நீங்கள் இப்போது உங்களையே பொருட்படுத்துவதில்லை” என்றார். (காண்க. 2 மக் 7:20-23). இங்கே, “ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்” என்ற இயேசுவின் வார்த்தைகளுக்குச் சான்றாகி நிற்கின்றனர் அத்தாயும் அவரின் ஏழு மைந்தர்களும். இயேசுவின் இந்த வார்த்தைகளின் உண்மை பொருளை அவருடைய சீடர்கள் உயிர்ப்புக்கு முன்புவரை புரிந்துகொள்ளவில்லை. ஆனால், உயிர்ப்புக்குப் பின்புதான் அதன்பொருளை நன்கு உணர்ந்துகொண்டனர். எனவேதான், "என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது" (திப 4:20) என்றார் புனித பேதுரு. மேலும், "நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை; துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை; வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை. இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்குச் சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம். இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள் உடலில் வெளிப்படுமாறு உயிரோடிருக்கும்போதே நாங்கள் அவரை முன்னிட்டு எந்நேரமும் சாவின் வாயிலில் நின்று கொண்டிருக்கிறோம்" (காண்க 2 கொரி 4:8-11) என்ற புனித பவுலடியாரின் வார்த்தைகளும் இயேசுவின் வார்த்தைகளுக்குச் சான்றாக அமைகின்றன.

“ஒருவனின் காலடியில் வாழ்வதைவிட, எழுந்துநின்று உயிரைவிடுவது எவ்வளவோ மேலானது” என்பார் புரட்சியாளர் சேகுவேரா. ‘பணிந்தவனுக்குப் பஞ்சுமெத்தை, துணித்தவனுக்குத் தூக்குமேடை’ என்பார்கள், உயர்ந்த இலட்சியத்துடன் வாழ்ந்தவர்களும், வாழ்ந்துகொண்டு இருப்பவர்களும் நமக்குச் சொல்வது, 'உங்கள் உயிர்கள் பறிக்கப்படலாம், ஆனால், உங்களின் இலட்சியத்தை ஒருபோதும் சிதைக்க முடியாது' என்பதுதான். ஆகவே, இலட்சியத்தை சுமந்து செல்லும் பாதையில்  உடலை மட்டுமே கொல்பவர்களுக்கு அஞ்சாமல், ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்ல கடவுள் ஒருவருக்கே அஞ்சி நமது பயணத்தைக் துணிவுடன் தொடர்வோம். அதற்கான அருள்வரங்களுக்காக ஆண்டவரிடம் இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 June 2023, 13:17