தேடுதல்

திருச்சிலுவை திருச்சிலுவை  

உலக அளவில் மத சுதந்திரம் என்பது மிகவும் சீர்கேடடைந்து வருகிறது

Aid to the Church in Need கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு - மத உரிமைகளை மதிக்கத் தவறி குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தண்டனையின்றிச் செல்வது இவ்வுலகில் அதிகரித்துள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உலக அளவில் மத சுதந்திரம் என்பது மிகவும் சீர்கேடடைந்து வருவதாகவும், அதிலும் குறிப்பாக ஆசியாவில் இது மேலும் மோசமடைந்து வருவதாகவும் கத்தோலிக்க உதவி அமைப்பான Aid to the Church in Need தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

Aid to the Church in Need என்ற இந்த கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு 196 நாடுகளில் நடத்திய ஆய்வில், 61 நாடுகளில் மத சுதந்திரம் மிகத் தீவிரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தன் அறிக்கையில் தெரிவிக்கிறது.

1999ஆம் ஆண்டு முதல் ஈராண்டிற்கு ஒருமுறை உலகில் மத சுதந்திரம் குறித்த ஆய்வை நடத்தி அறிக்கையை வெளியிடும் இந்த கத்தோலிக்க அமைப்பு, 2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் உலகில் மக்கள் தங்கள் மத நம்பிக்கைகளுக்காக துன்புறுத்தப்படுவதும், மத உரிமைகளை மதிக்கத் தவறி குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தண்டனையின்றிச் செல்வதும் அதிகரித்துள்ளன என தெரிவிக்கிறது.

உலக அளவில் மத உரிமைகளை மீறுவதில் ஆசியா மிக மோசமான நிலையில் இருப்பதாகக் கூறும் இவ்வறிக்கை, சீனா, பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், வட கொரியா, வியட்நாம், மியான்மார், மலேசியா, இந்தோனேசியா, ஈராக், ஈரான் ஆகிய ஆசிய நாடுகளில் நடப்பவைகளை இதற்கு உதாரணமாகக் காட்டியுள்ளது.

இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி, சிறுபான்மை மதத்தவர், குறிப்பாக கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியரை பலிகடாக்களாக்குவதும், அச்சுறுத்துவதும் தொடர்வதாக Aid to the Church in Need அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

சிறுபான்மை மதத்தவரின் மத சுதந்திரம் இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தியாவைப் பார்த்து நேபாளமும் இதனை பின்பற்றுவதாகவும் கவலையை வெளியிடுகிறது இந்த கத்தோலிக்க அமைப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 June 2023, 14:11