தேடுதல்

ஆழ்ந்த தியானச் சிந்தனையில் ஆழ்ந்த தியானச் சிந்தனையில்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 40-1 : ஊனியல்பைக் களைவோம்!

ஊனியல்புக்குரியவற்றில் நம் மனங்களை எப்போதும் செலுத்தாதவர்களாகவும் பொய்யானவற்றைச் சாராதவர்களாகவும் வாழ்வோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 40-1 : ஊனியல்பைக் களைவோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘பாவம் நம்மை அந்நியராக்குகின்றது!' என்ற தலைப்பில் 39-வது திருப்பாடலில் 12, 13 ஆகிய இரண்டு இறைவசனங்கள் குறித்துத் தியானித்து அதனை நிறைவுக்குக் கொணர்ந்தோம். இவ்வாரம் 40-ஆவது திருப்பாடல் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். 'புகழ்ச்சிப் பாடல்' என்ற முதன்மைத் தலைப்பையும் 'உதவிக்காக மன்றாடல்' என்ற துணைத்தலைப்பையும் கொண்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் 17 இறைவசனங்களைக் கொண்டுள்ளது. இறைவன் தன்னை பாதுகாத்தது குறித்தும், இறைநம்பிக்கைக் குறித்தும், தனது எதிரிகளின் மனநிலைக் குறித்தும் எடுத்துரைக்கும் தாவீது அரசர் உதவிக்காக இறைவேண்டல் செய்து இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார். இப்போது 01 முதல் 04 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்து நாம் தியானிப்போம். இறைபிரசன்னதில் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம்.

நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார். புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர்; ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறு பெற்றவர்; அத்தகையோர் சிலைகளை நோக்காதவர்; பொய்யானவற்றைச் சாராதவர் (வசனம் 1-4)

புத்தரின் சீடர்களில் முக்கியமானவர் பூர்ணா. அவர் தர்மப் பிரசாரம் செய்யப் புறப்படுவதற்கு முன்னால் புத்தரின் அனுமதியைக் கோரினார். உடனே புத்தர் “பூர்ணா, எங்கே போய் தர்மப் பிரசாரம் செய்யப் போகிறாய்? என்று வினவினார். அதற்கு பூர்ணா, "குருவே, சூனப்ராந்தம் என்ற இடத்தில்" என்று பதிலளித்தார். "அந்த இடத்திற்கா செல்கிறாய்? அங்குள்ள்வர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாயிற்றே; உன் அறிவுரைகளை ஏற்காமல் உன்னை இகழ்ந்து பேசினால் நீ என்ன செய்வாய்?" என்று எதிர்கேள்வி கேட்டார் புத்தர். "அதனால் என்ன? கையால் அடிக்காமல் விட்டார்களே என்று மகிழ்ச்சியுடன் தொடர்ந்து பிரசாரம் செய்வேன்" என்றார் பூர்ணா. "சரி, அவர்கள் உன்னை கைகளால் தாக்கினால் நீ என்ன செய்வாய்?" என்று கேட்டார் புத்தர். "அதனால் என்ன, ஆயுதங்களைக் கொண்டு தாக்கவில்லையே என்று எண்ணி மகிழ்ந்து என் தர்மப் பிரசாரத்தைத் தொடர்வேன்" என்று சளைக்காமல் பதில் தந்தார் பூர்ணா. "ஒருவேளை அவர்கள் ஆயுதங்களைக் கொண்டு உன்னை தாக்கினால் அப்போது நீ என்ன செய்வாயாம்?" என்று விடாமல் கேட்டார் புத்தர். "அதனால் என்ன, ஆளைக் கொல்லவில்லையே, அந்த அளவுக்கு இவர்கள் நல்லவர்கள்தான் என்றெண்ணி என் பணியைத் தொடர்வேன்; என் கடன் பணி செய்துகிடப்பதுவே!” என்று பதில் தந்தார் பூர்ணா. “சரி, போகட்டும்.. எல்லோரும் சேர்ந்து உன்னைக் கொன்றுபோட்டுவிட்டால்……?” என்று புத்தர் கேட்டபோது, "அட இவ்வளவு சீக்கிரம் நான் நிர்வாண நிலையை (முக்தி) அடைய எனக்கு உதவிவிட்டார்களே இவர்கள்! என்று அகம் மகிழ்ந்து உளம் குளிர்ந்து, மகிழ்வுடன் இறப்பேன்" என்று பூர்ணா பதிலிறுத்தார். அப்போது உளம்பூரித்த புத்தர் “பூர்ணா, உன் விருப்பப்படியே செய், காரணம், நீ பரிபூரண பக்குவம் பெற்றுவிட்டாய்” என்று சொல்லி பொறுமையின் அடையாளமாய்த் திகழ்ந்த தனது சீடர் பூர்ணாவுக்கு அருளாசீர் வழங்கி அனுப்பிவைத்தார்.

நாம் தியானிக்கும் மேற்கண்ட நான்கு இறைவசனங்களிலும் இரண்டு கருத்துக்களை முன்வைக்கின்றார் தாவீது அரசர். முதலாவதாக, “நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்” என்கின்றார். அப்படிப் பொறுமையுடன் ஆண்டவருக்காகக் காத்திருக்கும்போது, அவரது மன்றாட்டைக் கேட்டதாகவும், அழிவின் குழியிலிருந்து வெளிக்கொணர்ந்தாகவும், சேரும் சகதியும் நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்ததாகவும், தன்னைக் கற்பாறையின்மேல் நிலைநிறுத்தியதாகவும், புதியதொரு பாடல் வழியாக கடவுளைப் பாடச் செய்ததாகவும் கூறுகின்றார் தாவீது அரசர். அதாவது, கடவுளுக்காகப் பொறுமையுடன் காத்திருப்போர் பெற்றுக்கொள்ளும் பலன்களாகவே இதனை எடுத்துக்காட்டுகிறார் தாவீது. இதன் காரணமாகவே, நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு (திபா 27:14) என்றும், ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது (திபா 130:5-6) என்றும் எடுத்துரைக்கின்றார் தாவீது அரசர்.

சிலைகளை நோக்காதவர்

இரண்டாவதாக, தான் ஆண்டவருக்காகப் பொறுமையாகக் காத்திருந்து பெற்றுக்கொண்ட அருள்கொடைகளை அல்லது நன்மைகளைக் கண்ணுற்ற யாவரும் அச்சங்கொண்டு ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்வர் என்கின்றார் தாவீது அரசர். "நல்லா பாரு அவன் ரொம்ப பொறுமையா இருந்ததுனால கடவுள் அவனுக்கு எவ்வளவு நன்மை செய்திருக்காரு. நாமும் அப்படி அவருமேல நம்பிக்கை வச்சு பொறுமையா காத்திருந்தோமுன்னா நமக்கும் கடவுள் அதேமாதிரி செய்வார்" என்று நாம் பலமுறை பிறர் கூறக் கேள்விப்பட்டிருக்கின்றோம். மேலும் அப்படி நம்பிக்கை கொள்ளும் மனிதர் பேறுபெற்றவர் என்றும், அத்தகையோர் சிலைகளை நோக்காதவர்; பொய்யானவற்றைச் சாராதவர் என்றும் சுட்டிக்காட்டுகின்றார் தாவீது. அப்படியென்றால் என்ன அர்த்தம்? முதலில் யார் யார் சிலைகளை நோக்காதவர் என்று சிந்திப்போம்? "என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது. மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில், உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்” என்று கூறும் ஆண்டவராகிய கடவுள், "என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்" (காண்க விப 20:3-5) என்றும் உரைக்கின்றார். சிலைகளை நோக்கத்தவர் என்று கூறும்போது, கடவுள் ஒருவருக்கே பிரமாணிக்கமாக இருப்பதை மட்டுமன்றி, அது தீயகாரியங்களில் தங்களின் நாட்டத்தை செலுத்தாதவர்களையும் குறிக்கும். இன்னும் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமெனில் சிலைகளை நோக்குதல் என்பது ஊனியல்புக்குரியவற்றை அதாவது, தீய ஆவிக்குரியவற்றை நோக்குவதைக் குறிக்கும். ஊனியல்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் (சிலைகளை நோக்குகின்றவரகள்) பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் (காண்க. கலா 5: 19-21) ஆகிய தீய ஆவிக்குரியவற்றைச் சார்ந்திருப்பர் என்று கூறுகின்றார் தூய பவுலடியார். எனவே, கடவுளை நம்புவோருக்கு இறைவன் செய்யும் நற்காரியங்களைக் காண்பவர் தானும் அக்கடவுள் மீது ஆழமான நம்பிக்கை கொள்வர் என்று கூறும் தாவீது அவர்கள் சிலைகள் அதாவது, தீயவற்றின்மீது மனத்தைச் செலுத்தாதவர்கள் என்று உரைக்கின்றார்.

பொய்யானவற்றைச் சாராதவர்

மேலும் “அச்சங்கொண்டு ஆண்டவரை நம்புவோர் பொய்யானவற்றைச் சாராதவர்” என்றும்  அழைக்கின்றார் தாவீது. ‘பொய்ச்சான்று சொல்லாதிருப்பாயாக!’ என்பது ஆண்டவர் நமக்களித்த பத்துக்கட்டளைகளில் ஒன்று என்பதை நாம் அறிவோம். பொய்யானவற்றை என்று சொல்லும்போது, பொய்யான காரியங்களையோ, செயல்களையோ மட்டுமன்று, பொய்யானவர்களோடு நட்புறவு கொள்ளாதவர் என்றும் நாம் புரிந்துகொள்ளலாம். ஆக, இவ்வுலகக் காரியங்களுக்குரியவற்றில் அதாவது, சிலைகளை நோக்காதவர்களையும், பொய்யானவற்றைச் சாராதவர்களையும் நற்பேறுபெற்றவர்களாகவும் எடுத்துக்காட்டுகிறார் தாவீது. நற்பேறு பெற்றவர் யார்? – அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்; அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார் (காண்க திபா 1:1-3) என்கின்றார். எனவே, நாமும் ஆண்டவராம் கடவுள்மீது ஆழமான நம்பிக்கைகொண்டு ஊனியல்புக்குரியவற்றில் நம் மனங்களை செலுத்தாதவர்களாக வாழ்வதற்கான அருளை இந்நாளில் இறைவனிடம் இறைஞ்சி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 June 2023, 12:06