விவிலியத் தேடல்:திருப்பாடல் 39-5,பாவம் நம்மை அந்நியராக்குகின்றது
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘பாவத்தின் கனாகணம் உணர்வோம்!’ என்ற தலைப்பில் 39-வது திருப்பாடலில் 10, 11 ஆகிய இரண்டு இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 12, 13 ஆகிய இரு இறைவசனங்கள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவுக்குக் கொணர்வோம். இறைபிரசன்னதில் இப்போது அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். ஆண்டவரே! என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; என்னுடைய மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் கண்ணீரைக் கண்டும் மௌனமாய் இராதேயும்; ஏனெனில், உமது முன்னிலையில் நான் ஓர் அன்னியன்; என் மூதாதையர் போன்று நான் ஒரு நாடோடி! நான் பிரிந்து மறையும் முன்பு சற்றே மகிழ்ச்சி அடையும்படி, உம் கொடிய பார்வையை என்னிடமிருந்து திருப்பிக்கொள்ளும். (வசனம் 12-13). நாம் தியானிக்கும் இன்றைய இறைவார்த்தைகளில், தனது விண்ணப்பத்தைக் கேட்கும்படியும், மன்றாட்டுக்குச் செவிசாய்க்கும்படியும், தான் வடிக்கும் கண்ணீரைக்கண்டு மௌனமாய் இருந்துவிடவேண்டாம் என்றும் வேண்டுதல் செய்யும் தாவீது, தன்னை ஒரு அந்நியன் என்றும் நாடோடி என்றும் எடுத்துரைக்கின்றார்.
நான் ஓர் அந்நியன்
‘உமது முன்னிலையில் நான் ஓர் அந்நியன்’ என்று கூறுகின்றார் தாவீது. ஏன் இவ்வாறு உரைக்கின்றார் என்பது குறித்து சற்று ஆழமாகச் சிந்திப்போம். அந்நியன் என்ற வார்த்தைக்கு அந்நியப்படுதல், அந்நியமாதல் என்று பொருள் கூறலாம். முதலாவதாக, தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் அறிமுகம் இல்லாதவன்; வேற்றாள், வேற்றுகிரகவாசி என்றும் கூறலாம். ‘இது நம்ம குடும்பப் பிரச்சினை; ஏதோ அந்நியன்போல் பேசுகிறாயே’ என்று பல நேரங்களில் நாம் கூறுகின்றோம். இரண்டாவதாக, குலம், மதம், நாடு, மொழி, இனம் முதலியவற்றால் வேறுபட்டவன் என்றும் இச்சொல் அர்த்தம் பெறுகிறது. எடுத்துக்காட்டாக, கோயில் கருவறையினுள் அந்நியர் நுழைய அனுமதி இல்லை என்ற அறிவிப்பை நாம் பார்த்து இருக்கலாம். மூன்றாவதாக, சமூகத்திலிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டவன் அல்லது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாதவன். சமூகத்தின் பார்வையில் அவன் ஒரு அந்நியன் என்ற சொல்லாடல்களை இதற்கு நாம் உதாரணமாகக் கொள்ளலாம்.
தொடக்க நூலில் யாக்கோபின் புதல்வரான யோசேப்பின் வாழ்வு குறித்து நாம் அறிவோம். அவர் தனது சொந்த சகோதரர்களால் வஞ்சிக்கப்பட்டு ஒரு அடிமையாக, அந்நியராக எகிப்துக்குச் சென்ற வணிகர்களாகிய மிதியானியரிடம் விற்கப்பட்டார். அவர்கள் பார்வோனின் அதிகாரிகளுள் ஒருவனும் மெய்க்காப்பாளர் தலைவனுமான போத்திபாரிடம் யோசேப்பை விற்றனர். (காண்க. தொநூ 37:1-36). அங்கே அவர் பல சவால்களைச் சந்தித்து இறுதியில் எகிப்து நாடு முழுவதற்கும் ஆளுநர் ஆன நிலையிலும், அவர் உள்ளத்தளவில் தன்னை ஒரு அந்நியனாகவே கருதிக்கொண்டார் என்பதே உண்மை. இதன் காரணமாகவே, யோசேப்பின் தந்தை யாக்கோபு எகிப்தில் இறந்ததும் அவர் அங்கு அடக்கம் செய்யப்படாமல் கானான் நாட்டிற்குக்கு கொண்டுவரப்பட்டு அங்கே அடக்கம் செய்யப்பட்டார் (காண்க. தொநூ 50:1-14) மேலும், யோசேப்பு தான் இறப்பதற்கு முன்பு, கடவுள் அவர்களை உறுதியாக இங்கிருந்து கானான் தேசத்திற்கு அழைத்துச்செல்வார் என்றும், அப்போது அவர்கள் தனது எலும்புகளை அங்கிருந்து எடுத்துச்செல்ல வேண்டுமெனவும் அவர்களிடம் உறுதிமொழி பெற்றுக்கொண்டார் (காண்க. தொநூ 50:24-26) என்பதையும் காண்கின்றோம். ஆக, இந்த மீட்பின் வரலாற்றை நினைவில் கொண்டவராக, தாவீது அரசர் தனது பாவங்களே இப்படிப்பட்டதொரு அந்நியப்பட்ட நிலைக்குத் தன்னை ஆளாக்கிவிட்டதாகவும், இந்நிலையிலிருந்து தன்னைக் காப்பாற்றுமாறும் கடவுளிடம் மன்றாடுகின்றார்.
நான் ஒரு நாடோடி!
இரண்டாவதாக, “என் மூதாதையர் போன்று நான் ஒரு நாடோடி!” என்கின்றார் தாவீது. எதற்காக ‘நாடோடி’ என்ற வார்தையைத் தாவீது பயன்படுத்துகிறார் என்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். அதற்கு முன்னதாக நாடோடிகள் குறித்த அடிப்படை அர்த்ததைப் பார்த்துவிடுவோம். நாடோடிகள் என்போர் நிலையாக ஓரிடத்தில் தங்கி வாழாமல் தொடர்ந்து இடம் விட்டு இடம் பெயர்ந்து வாழும் மக்கள் குழுவினர். உலகெங்கும் மொத்தம் 3 முதல் 4 கோடி வரையிலான நாடோடிகள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. நாடோடி என்பவர், ஊரு விட்டு ஊரு அல்லது நாடு விட்டு நாடு என அடிக்கடி மாறிச் செல்பவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. மேலும் நாடோடி என்ற வார்த்தைக்குப் ‘பரதேசி’ என்ற அர்த்தம் உள்ளதாகக் கூட தமிழ் விக்சனரி எடுத்துரைக்கிறது.
இஸ்ரேல் மக்களின் வாழ்வில் அவர்கள் பெரும்பாலும் நாடோடிகளாக வாழ்ந்தனர் என்பதுதான் உண்மை. எப்போதெல்லாம் மனிதர் பெரும்பாவத்திற்கு உள்ளாகின்றனரோ அப்போதெல்லாம் அவர்கள் நாடோடிகளாகின்றனர் எனத் திருவிவிலியம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இதனை தொடக்க நூலிலேயே காண்கின்றோம். தன் தம்பி ஆபேலின்மீது காழ்ப்புணர்வு கொண்ட காயின் அவனை வயல்வெளிக்கு அழைத்துச் சென்று கொன்றொழிக்கின்றான். அப்பொழுது ஆண்டவராம் கடவுள் அவனிடத்தில், "உன் கைகள் சிந்திய உன் சகோதரனின் இரத்தத்தைத் தன் வாய்திறந்து குடித்த மண்ணை முன்னிட்டு, நீ சபிக்கப்பட்டிருக்கின்றாய். நீ மண்ணில் பயிரிடும்பொழுது அது இனிமேல் உனக்குப் பலன் தராது. மண்ணுலகில் நீ நாடோடியாக அலைந்து திரிவாய்” என்று உரைக்கின்றார். (காண்க. தொநூ 4:11-12). மேலும் இதன் விளைவு மிகவும் ஆபத்தானது என்பதையும் உணர்கின்றோம். அதனால்தான் இதனைத் தாங்கிக்கொள்ள முடியாத காயின் ஆண்டவரிடம், “எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என்னால் தாங்க முடியாததாக இருக்கின்றது. இன்று நீர் என்னை இம்மண்ணிலிருந்து துரத்தியிருக்கின்றீர்; உமது முன்னிலையினின்று நான் மறைக்கப்பட்டுள்ளேன். மண்ணுலகில் நான் நாடோடியாக அலைந்து திரிய வேண்டியுள்ளது" (வச.13-14) என்று கதறுகிறான். மேலும் ஆண்டவர் ஆபிராமிடம், “நீ உறுதியாகத் தெரிந்து கொள்ள வேண்டியது: உன் வழிமரபினர் வேறொரு நாட்டிற்குப் பிழைக்கச் செல்வர். அங்கே அவர்கள் நானூறு ஆண்டுகள் அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்படுவர்” (காண்க. தொநூ 15:113) என்று முன்னுரைக்கின்றார். பாவம்தான் இச்செயல்களுக்கெல்லாம் அடிப்படைக்காரணம் என்பதை தாவீது நன்கு உணர்ந்திருந்தபடியால்தான், “உமது முன்னிலையில் நான் ஓர் அன்னியன்; என் மூதாதையர் போன்று நான் ஒரு நாடோடி!” என்கின்றார்
மத்தேயு நற்செய்தியில், ‘பாவம் செய்யும் சகோதரர்’ என்ற தலைப்பில் அருமையானதொரு செய்தியை வழங்குகின்றார் இயேசு. “உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் ‘இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்’ என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்” (காண்க. மத் 18:15-17). எனவே, பாவம் ஒரு மனிதனை அந்நியனாக்குகிறது என்பதை நமதாண்டவர் இயேசுவும் திட்டவட்டமாக எடுத்துரைக்கின்றார்.
அவ்வாறே லூக்கா நற்செய்தியில் இயேசு கூறும் காணாமல் போன மகன் உவமையில், “தனக்குரிய பங்கை தந்தையிடமிருந்து பெற்றுக்கொள்ளும் இளைய மகன், சில நாள்களுக்குள் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார்” (காண்க. லூக் 15:13) என்று எடுத்துரைக்கின்றார். இங்கே தொலை நாட்டிற்குப் பயணம் என்பது அந்நிய நாட்டிற்குப் பயணம் என்று பொருள்படுகிறது. அதேவேளையில், அந்நிய நாட்டிற்கு ஒருவன் செல்லும்போதே அவன் அந்நியனாகிவிடுகின்றான் என்பதையும் இதனால் புரிந்துகொள்ள முடிகின்றது. அப்படியெனில், சொந்த நாடு என்பதை கடவுளுடைய பிரசன்னம் நிறைந்துள்ள இடம் என்று உணர்ந்துகொள்ளலாம். இந்தப் பிரசன்னம்தான் நமக்கு மகிழ்ச்சியையும், நிறைவான அன்பையும், நிலைவாழ்வையும் அளிக்கிறது. எனவே, நமது சுயநலத்தால் கடவுளுக்கு எதிராகப் பாவமிழைத்து அவரது பிரசன்னத்தை விட்டு தொலைவில் போகும்போதெல்லாம் நாம் அந்நியர்களாகவும், நாடோடிகளாகவும் மாறிப்போகின்றோம் என்பதை உணர்வோம்ம.
ஒருகுறையுமின்றி, தனக்கு எல்லாவற்றையும் நிறைவாக அளித்திருந்த ஆண்டவராம் கடவுளுக்கு எதிராகத் தான் புரிந்த பாவங்களால் துயருறும் நிலையில்தான் தன்னை ஒரு அந்நியனாகவும், நாடோடியாகவும் கருதி தனது பாவச்செயல்களுக்காக மன்னிப்பு வேண்டுகின்றார் தாவீது அரசர். ஆகவே, நாமும் நமது பாவச் செயல்களால் இறைத்தந்தையை விட்டு அகன்றுச் சென்று அந்நியராகவும் நாடோடிகளாகவும் வாழும் நிலைக்கு ஆளாகிவிடாமல் பார்த்துக்கொள்வோம். அதற்கான அருள்வரங்களுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்