தேடுதல்

தன் பாவங்களுக்காக மனம் வருந்தும் தாவீது அரசர் தன் பாவங்களுக்காக மனம் வருந்தும் தாவீது அரசர்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 39-4, பாவத்தின் கனாகணம் உணர்வோம்!

பாவம் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து மிகவும் கவனமாயிருந்து, அவற்றிலிருந்து நம்மை நாமே காத்துக்கொள்வோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 39-4, பாவத்தின் கனாகணம் உணர்வோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘‘எண்ணம்போல் வாழ்வு!’ என்ற தலைப்பில் 39-வது திருப்பாடலில் 07 முதல் 09 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும்  10, 11 ஆகிய இரண்டு இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம். இப்போது இறையமைதியில் அவ்வார்த்தைகளை பொருளுணர்ந்து வாசிப்போம். “நீர் தந்த வாதையை என்னிடமிருந்து நீக்கிவிடும்; உமது கை அடித்த அடிகளால் நான் அழிவுக்கு ஆளானேன். குற்றத்தின் பொருட்டு நீர் மனிதரைத் தண்டிக்கும்போது, பூச்சி அரிப்பதுபோல், அவர்களுக்கு விருப்பமானவற்றை நீர் அழிக்கின்றீர்; உண்மையில் மானிடர் அனைவரும் நீர்க்குமிழி போன்றவரே!” (வசனம் 10-11). இந்த இரண்டு இறைவசனங்களிலும் நான்கு கருத்துக்களை வெளிப்படுத்துகிறார் தாவீது அரசர். அவற்றைக் குறித்துச் சற்று விரிவாகத் தியானிப்போம்.

01. நீர் தந்த வாதையை என்னிடமிருந்து நீக்கிவிடும்

முதலாவதாக, “ஆண்டவரே, நீர் தந்த வாதையை என்னிடமிருந்து நீக்கிவிடும்” என்கிறார் தாவீது அரசர். இங்கே ‘வாதை’ என்று எதைக் குறிப்பிடுகிறார்? என்று எண்ணும்போது அது அவர் செய்த பாவத்தினால் ஏற்பட்ட உளப்போராட்டத்தையும், அதனால் அவர் அனுபவித்து வரும் துயரங்களையும் குறிப்பதாக நாம் உணர்ந்துகொள்ளலாம். இது இயல்பாக மனிதர் வாழ்வில் நிகழ்வதுதான். ஆனால், இன்றைய நம் உலகில் பலர் அநியாயமும் அக்கிரமும் நிறைந்த பாவச் செயல்களை அடுக்கடுக்காய் அரங்கேற்றிவிட்டு சிறிதும் குற்றயுணர்வே இல்லாமல் வாழும் நிலையைப் பார்க்கின்றோம். அரசியல் கொலைகள், ஆணவக் கொலைகள், மதக் கொலைகள், சாதியக் கொலைகள், திருட்டுக் கொலைகள் என நாம் கூறிக்கொண்டே போகலாம். குறிப்பாக, இன்றைய வளரும் இளம்தலைமுறையிடம் பாவம் குறித்து வருந்தும் செயல் அதிகளவில் காணப்படுவதில்லை என்றே கூறுகின்றனர். ‘பாவமா... அப்படின்னா என்ன? எதையும் பாவம் என்றே நினைக்காதே’ என்கின்ற எண்ணங்களும் இப்போது அவர்களிடத்தில் அதிகம் வளர்ந்து வருவதாகவே உளவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தெய்வபயம் நிறைந்த நேர்மையாளர்களும், நீதிமான்களும் தவறிழைக்கும்போதோ அல்லது கடவுள் விரும்பாத பாவச் செயல்களைப் புரியும்போதோ அவர்கள் உள்ளம் குத்துண்டவர்களாய் தங்கள் பாவங்களுக்காகக் கதறி அழுவர். அந்நிலையில் மனப்போராட்டம், தூக்கமின்மை, கவலைதோய்ந்த முகம் போன்றவற்றை அவர்களிடத்தில் நாம் காண முடியும். தாவீதும் இத்தகையதொரு சூழலுக்குத் தள்ளப்படுவதைப் பார்க்கின்றோம். அதனால்தான், "பெருமூச்சினால் இளைத்துப் போனேன்; ஒவ்வோர் இரவும் கண்ணீரில் என் படுக்கை மிதக்கின்றது. என் கட்டில் அழுகையால் நனைகின்றது. துயரத்தால் என் கண் வீங்கிப்போயிற்று; என் பகைவர் அனைவரின் காரணமாக அது மங்கிப்போயிற்று” (காண்க. திபா 6:6-7) என்றும், "என் துன்பங்களின் எண்ணிக்கையை நீர் அறிவீர்; உமது தோற்பையில் என் கண்ணீரைச் சேர்த்து வைத்துள்ளீர்; இவையெல்லாம் உம் குறிப்பேட்டில் உள்ளன அல்லவா?" (திபா 56:8) என்றும் தான் அனுபவிக்கும் வாதைகள் குறித்து கடவுளிடம் முறையிடுகிறார் தாவீது அரசர்.

02. உமது கை அடித்த அடிகளால் நான் அழிவுக்கு ஆளானேன்

இரண்டாவதாக, “ஆண்டவரே, உமது கை அடித்த அடிகளால் நான் அழிவுக்கு ஆளானேன்” என்கின்றார் தாவீது. இங்கே கடவுள் தாவீதை நேரிடையாக அடித்தார் என்று நாம் பொருள்கொள்ள கூடாது. மாறாக, தான் செய்த பாவத்திற்காக இறைவன் தனக்குக் கொடுத்த துயரங்கள், வேதனைகள், மனஉளைச்சல்கள், உள்ளக் குமுறல்கள் யாவற்றையும் இறைவன் அளித்த அடிகளாகவே கருதுகின்றார் தாவீது அரசர். "நான் பேசாம கடவுள் காட்டிய நேரிய வழியில் தான் போயிட்டு இருந்தேன். என்றைக்கு என் புத்தி பேதலித்து நிலைதடுமாறி பாவத்தில் வீழ்த்தேனோ, அன்றைக்கே நான் முற்றிலும் அழிந்துபோனேன். இது எனக்குக் கடவுள் கொடுத்த சரியான அடி, கடவுளே எனக்கொரு படத்தைக் கற்றுக்கொடுத்துவிட்டார்" என்று பாவத்தால் துயருறும் வேளையில் பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றோம். இதுதான் தாவீதின் வாழ்விலும் நிகழ்கிறது. இதன் காரணமாகவே, “ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு என்னைக் கண்டியாதேயும்; என் மீது கடுஞ்சீற்றங்கொண்டு என்னைத் தண்டியாதேயும்” (காண்க. திபா 6:1) என்கின்றார்.  

03. குற்றத்தின் பொருட்டு மனிதருக்கு விருப்பமானவற்றை நீர் அழிக்கின்றீர்

மூன்றாவதாக, “குற்றத்தின் பொருட்டு நீர் மனிதரைத் தண்டிக்கும்போது, பூச்சி அரிப்பதுபோல், அவர்களுக்கு விருப்பமானவற்றை நீர் அழிக்கின்றீர்” என்கின்றார் தாவீது. நேரிய மனிதர் ஒருவர் புரியும் பாவத்தின் விளைவாக அவரிடமிருந்து அவருக்கு விருப்பமானவற்றை எல்லாம் இறைவன் அகற்றிவிடுவார் அல்லது அழித்துவிடுவார் என்பதை மனத்தில் கொண்டவராய் தாவீது இவ்வாறு கூறுவதாக நாம் உணர்ந்துகொள்ளலாம். தான் உரியாவின் மனைவி பத்சேபாவுடன் புரிந்த பாவத்தின் விளைவாக, அவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தை நோயுற்று இறந்தது. அவ்வாறே, அவர் விரும்பி அன்பு செய்த அவருடைய மகன் அப்சலோம் கொல்லப்பட்டார். இன்னும் அவருக்கு விருப்பமானவற்றையும் கூட அவர் இழந்திருக்கலாம். அதனால்தான் மேற்கண்ட வார்த்தைகள் அவரின் உள்ளத்திலிருந்து வெளிப்படுகின்றன. மேலும், "என் வாழ்நாள்கள் புகையென மறைகின்றன; என் எலும்புகள் தீச்சூழையென எரிகின்றன. என் இதயம் புல்லைப்போலத் தீய்ந்து கருகுகின்றது; என் உணவையும் நான் உண்ண மறந்தேன். என் பெருமூச்சின் பேரொலியால், என் எலும்புகள் சதையோடு ஒட்டிக் கொண்டன. நான் பாலைநிலப் பறவைபோல் ஆனேன்; பாழ் நிலத்தின் ஆந்தைபோல் ஆனேன்" (திபா 102:3-6) என்ற தாவீதின் வார்த்தைகள் இதற்குச் சான்றாக அமைகின்றன

04. உண்மையில் மானிடர் அனைவரும் நீர்க்குமிழி போன்றவரே!

நான்காவதாக, “உண்மையில் மானிடர் அனைவரும் நீர்க்குமிழி போன்றவரே!” என்று கூறி முடிக்கின்றார். இதே வார்த்தையை இத்திருப்பாடலின் 5-வது வசனத்திலும் கூறுகின்றார். அதாவது, “மானிடர் அனைவரும் தம் உச்ச நிலையிலும் நீர்க்குமிழி போன்றவரே!” என்றுரைக்கின்றார். ஆக, இந்த வார்த்தையை திரும்பத் திரும்பக் கூறுவதன் வழியாக, மானிடர் வாழ்வு எந்தளவுக்கு நிலையற்றது என்பதை தான் உணர்ந்தது மட்டுமல்ல, அதை உலகிற்கும் அறிவிக்கின்றார் தாவீது. இதன் காரணமாகவே, மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது; வயல்வெளிப் பூவென அவர்கள் மலர்கின்றார்கள். அதன்மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது; அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது” (திபா 103:15-16) என்கிறார் தாவீது. மேலும் இவ்வுலக வாழ்வு நிரந்தமல்ல என்பதையும் கடவுள் தரும் நிலைவாழ்வே நிரந்தரம் என்பதையும் எடுத்துக்காட்டும் விதமாக, “நாங்கள் காண்பவற்றையல்ல, நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை; காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை (காண்க. 2 கொரி 4:18) என்றும், நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்து போனாலும் கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு. அது மனிதக் கையால் கட்டப்படாதது, நிலையானது என்பது நமக்குத் தெரியும் அல்லவா!” (வசனம் 5:1) என்றும் நிலையற்ற இவ்வுலக வாழ்வு குறித்தும், கடவுள் தரும் நிலை வாழ்வு குறித்தும் புனித பவுலடியாரும் தெளிவுபடுத்துகிறார்.

ஒரு துறவியிடம் இரண்டு பேர் வந்தனர். ஒருவன் வருத்தத்தோடு கேட்டான், ''சாமி, நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன். என் மனம் அதை நினைத்து நினைத்து தினமும் வேதனையடைகின்றது. நான் செய்த பாவத்துக்கு மீட்பு உண்டா?'' அடுத்தவன் துறவியிடம் சொன்னான், “சாமி, நான் அவனைப் போன்று இந்தளவுக்குப் பெரிய பாவம் எதுவும் செய்யவில்லை. சின்னச் சின்னப் பொய்கள், ஏமாற்றுக்கள், துரோகங்கள் இப்படி நிறைய செய்துள்ளேன். என்னைத் தண்டிக்கும் அளவுக்கு இவை எல்லாம் பெரிய பாவங்களா சாமி?” என்று கேட்டான்." துறவி சிரித்துவிட்டு முதல் ஆளிடம்,. ''நீ போய் பெரிய பாறை ஒன்றைத் தூக்கி வா, ''என்றார். இரண்டாமவனிடம்,'  'நீ போய் இந்தக் கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கி வா” என்றார். இருவரும் அவ்வாறே செய்தனர். முதலாமவன், ஒரு பெரிய பாறையைத் தூக்கி வந்தான். இரண்டாமவன், கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கிக் கொண்டு வந்தான். இப்போது ஞானி சொன்னார், ''சரி, இருவரும் கொண்டு வந்தவற்றை சரியாக எந்த இடத்தில் எடுத்தீர்களோ, அங்கேயே திரும்பப் போட்டுவிட்டு வாருங்கள்'' என்றார். முதலாமவன், பாறையை எடுத்துக் கொண்டுபோய் எடுத்த இடத்தில் வைத்து விட்டுத் திரும்பினான். இரண்டாமவன் தயக்கத்துடன், “சாமி, இவ்வளவு கற்களையும் நான் எப்படி சரியாக அவை இருந்த இடத்திலேயே திரும்பவும் வைக்க முடியும்?'' என்று கேட்டான். அதற்குத் துறவி, ''முடியாதல்லவா? அவன் பெரிய தவறு செய்தான். அதற்காக  வருந்தி அழுது மன்னிப்புக் கேட்டு அவன் பரிகாரம் செய்து மீட்படைவதற்கான வழியைத் தேடிவிட்டான். நீ சின்னச் சின்னதாக ஆயிரம் தவறுகள் செய்தும் அவை பாவம் என்று கூட உணராதவன். உன் பாவச் செயல்களால் யாரெல்லாம் பாதிக்கப் பட்டவர்கள் என்பது கூட உனக்கு நினைவிருக்காது. அவனுக்கு மீட்பு என்பது சுலபமாகக் கிடைத்துவிடும். ஆனால், உனக்குத்தான் மீட்பு என்பது மிகக் கடினம்" என்று கூறினார்.

மனிதர் செய்யும் பாவத்தின் தன்மையைப் பொறுத்துதான் அவற்றின் கனாகணமும் வெளிப்படும். எப்படியிருப்பினும் பாவம் பாவம்தான். அவற்றை மறுப்பதற்கில்லை. தாவீது புரிந்த பாவத்தின் கனாகணம் அவரை அதிகப் பாதிப்புக்குள்ளாக்குகிறது. அதனால்தான், “நீர் தந்த வாதையை என்னிடமிருந்து நீக்கிவிடும்; உமது கை அடித்த அடிகளால் நான் அழிவுக்கு ஆளானேன். குற்றத்தின் பொருட்டு நீர் மனிதரைத் தண்டிக்கும்போது, பூச்சி அரிப்பதுபோல், அவர்களுக்கு விருப்பமானவற்றை நீர் அழிக்கின்றீர்; உண்மையில் மானிடர் அனைவரும் நீர்க்குமிழி போன்றவரே!” என்கின்றார். ஆகவே, நாமும் பாவம் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து மிகவும் கவனமாயிருந்து, அவற்றிலிருந்து நம்மை நாமே காத்துக்கொள்வோம். அதற்கான அருள்வரங்களுக்காக இந்நாளில் இறைவனிடம் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 June 2023, 12:14