தடம் தந்த தகைமை – ரூத்தை மணந்த போவாசு
மெரினா ராஜ் – வத்திக்கான்
இஸ்ரயேலரிடையே பண்டைக் காலத்தில் ஒரு வழக்கம் இருந்தது. நிலவிற்பனை அல்லது கொடுக்கல் வாங்கல் நடைபெறும்போது எடுக்கும் முடிவை உறுதிப்படுத்துவதற்காக, ஒருவர் தம் காலணியைக் கழற்றி மற்றவரிடம் கொடுத்துவிடுவார். எடுக்கப்பட்ட முடிவை உறுதிப்படுத்தும் முறை இதுவே. அவ்வாறே அந்த முறை உறவினர் போவாசிடம், “நீரே வாங்கிக்கொள்ளும்” என்று சொன்னபோது, அவர் தம் காலணியைக் கழற்றி அவரிடம் கொடுத்தார். அதன்பின், போவாசு அங்கிருந்த பெரியோரையும் மற்றெல்லாரையும் நோக்கி, “நான் எலிமலேக்கு, கிலியோன், மக்லோன் ஆகியோருக்கு உரிமையான அனைத்தையும் நகோமியிடமிருந்து வாங்கி விட்டேன்; இதற்கு இன்று நீங்களே சாட்சி.
மேலும், மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபியப் பெண் ரூத்தை என் மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன். இறந்தவரின் உரிமைச் சொத்து அவர் பெயரிலேயே தொடர்ந்து இருக்கவும் அப்பெயர் அவருடைய உறவின் முறையிலும் ஊரிலும் நீடித்திருக்கவும் இதைச் செய்கிறேன். இதற்கும் நீங்கள் இன்று சாட்சி” என்றார். அதற்கு நகர வாயிலில் இருந்த பெரியோரும் மற்றெல்லாரும், “ஆம்; நாங்கள் சாட்சிகள். இஸ்ரயேலின் குடும்பம் பெருகச் செய்த ராகேல் லேயாள் இருவரைப் போல உமது இல்லம் புகுந்திடும் இந்தப் பெண்ணும் இருக்கும் வண்ணம் ஆண்டவர் அருள்க! எப்ராத்தில் வளமுடன் நீர் வாழ்க! பெத்லகேமில் புகழுடன் நீர் திகழ்க! ஆண்டவர் இந்தப் பெண் வழியாக அருளும் பிள்ளைகளால் உமது குடும்பம் யூதா தாமார் மகனாம் பெரேட்சு குடும்பம் போன்று விளங்குவதாக! என்று வாழ்த்தினர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்