திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தை 23ம் ஜான் - இறுதிபாகம்.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
நேயர்களே! அண்மைக்காலத் திருத்தந்தையர்களுள் மிகவும் பிரபலமாக விளங்கியதுடன், திருஅவையில் நல்மாற்றங்களுக்கு வழிவகுத்தவருமான திருத்தந்தை 23ஆம் ஜானின் வாழ்க்கைக் குறிப்பின் முதல் பகுதியை கடந்தவாரம் கண்டோம். தற்போது அதன் தொடர்ச்சியான இறுதிப்பகுதியைக் காண்போம்.
திருஅவையின் துவக்கக் காலங்களில் திருத்தந்தையர்கள், திருஅவையின் இவ்வுலகத்தலைவர்கள் என்பதைவிட உரோம் நகரின் ஆயர் என்பதை அதிகமாக வலியுறுத்தி வந்தனர் என்பதை நாம் அறிவோம். இதைத்தான் மீண்டும் வலியுறுத்தினார் நம் திருத்தந்தை 23ஆம் ஜான். 1585ஆம் ஆண்டு பொறுப்பேற்ற திருத்தந்தை 5ஆம் சிக்ஸ்டஸ், கர்தினால்களின் அதிகபட்ச எண்ணிக்கையை 70 என அறிவித்திருந்தார். ஆனால், திருத்தந்தை 23ம் ஜான், தான் கூட்டிய கர்தினால்களின் முதல் அவையிலேயே இச்சட்டத்தை மாற்றி, 23 புதிய கர்தினால்களை நியமித்தார். 1962ஆம் ஆண்டிற்குள் கர்தினால்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்தது. அதுமட்டுமல்ல, கர்தினால்கள் அவையில் வரலாற்றிலேயே முதன்முறையாக, பல நாடுகளின் பிரதிநிதித்துவம் இடம் பெற்றிருந்தது. இவர் பொறுப்பு வகித்த ஐந்து ஆண்டுகளில் 52 புதிய கர்தினால்களை உருவாக்கியுள்ளார். அவர் பதவிக்கு வந்த உடனேயே மூன்று பெரிய திட்டங்களை அறிவித்தார். ஒன்று, உரோம் மறைமாவட்டத்திற்கான ஆயர் பேரவைக்கூட்டம், இரண்டு, திருஅவைச் சட்டங்களை மறு பரிசீலனைச் செய்தல், மூன்று, கிறிஸ்தவ சபைகளின் அவைக்கூட்டம் அல்லது பொதுச்சங்கம்.
நம் அண்மைக்காலத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், திருஅவையின் கடந்த காலத் தவறுகளுக்காக பல நேரங்களில் பொது மன்னிப்பை வேண்டியது நம்மில் பலருக்குத் தெரிந்த ஒன்றுதான். ஆனால் அதற்கு முன்னோடியாக, திருத்தந்தை 23ஆம் ஜான், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் துவக்க உரையிலேயே, திருஅவையின் கடந்த காலத் தவறுகளை ஏற்றுக்கொண்டுள்ளார். இனிமேல் திருஅவை, கருணை எனும் மருந்தை அதிகம் பயன்படுத்துமேயொழிய, தண்டனையை அல்ல என்றார் அவர். திருஅவையின் பிறன்புப் பணிகளுக்கு அதிக முக்கியத்தவம் கொடுத்து வலியுறுத்தினார் திருத்தந்தை 23ஆம் ஜான். திருஅவை அதிகாரிகள் என்பவர்கள் ‘அருங்காட்சியக காப்பாளர்கள்’ அல்ல, மாறாக, வாழ்வெனும் தோட்டத்தை ஆழப் பண்படுத்தி செழுமையாக்குபவர்கள் என்றார். "திருஅவையின் கதவுகளைத் திறந்து விடுங்கள். மாற்றம் என்னும் புதிய காற்று, புதிய ஆவி வீசட்டும்." என்ற அறைகூவலுடன் 1962ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் நாள் திருத்தந்தையாக இருந்த புனித 23 ஆம் ஜான் இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தை ஆரம்பித்தார். அந்த நாள் இந்தப் புனித திருத்தந்தையின் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னர் அதே ஆண்டு புனித பிரான்சிஸ் அசிசியின் திருநாளான அக்டோபர் 4ஆம் தேதி இத்தாலியின் அசிசி மற்றும் லொரெட்டோ நகர்களுக்குச் சென்று இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் வெற்றிக்காகச் செபித்தார். இத்திருத்தந்தை 23ஆம் ஜானின் அழைப்பின் பேரில் கத்தோலிக்கமல்லாத 18 கிறிஸ்தவ சபைகள் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் கலந்து கொண்டன. 1962ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதியே இவருக்கு வயிற்றில் புற்றுநோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டபோதிலும், அதே ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் வழக்கம்போல் திருத்தந்தையின் உரையுடன் துவங்கியது. இவர் பதவிக்காலத்தில் வெளியிடப்பட்ட இவரின் ஒவ்வொரு சுற்றுமடலும், மேய்ப்புப்பணி அக்கறையை வெளிப்படுத்துவதாக மட்டுமல்ல, கிறிஸ்தவ ஒன்றிப்பை வலியுறுத்துவதுமாகவும் இருந்தது. கத்தோலிக்கரல்லாத கிறிஸ்தவர்களை இவர் எப்போதும் “பிரிந்த சகோதரர்கள்” என்றே அழைத்தார். தான் இறப்பதற்கும் இரண்டு மாதங்களுக்கு முன் 1963ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி இவர் வெளியிட்ட "அவனியில் அமைதி" (Pacem in Terris) என்ற திருமடல், உலக அமைதிக்கான அடிப்படை, மனித உரிமைகள் மதிக்கப்படலே என்பதை வலியுறுத்தியது.
அமைதியை அதிகம் நேசித்த இத்திருத்தந்தை கம்யூனிச கிழக்கு ஐரோப்பாவிற்கும் மேற்கு ஐரோப்பாவிற்கும் இடையே ஒப்புரவு இடம் பெறவேண்டும் என்பதற்காக தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டார். சோவியத் பிரதமர் நிக்கிட்டா குருஷ்சேவின் மருமகனை இவர் திருப்பீடத்தில் சந்தித்ததை, இதற்கு ஓர் உதாரணமாகக் காட்டலாம். கியூபாவின் ஏவுகணைப் பிரச்சனை பிரமாண்டமாக தலைதூக்கியபோது, இருதரப்பினரும் பொறுப்புடன் செயல்படுமாறு 1962ஆம் ஆண்டு அக்டோபர் 25ல் வத்திக்கான் வானொலி வழி செய்தி வெளியிட்டார். இந்த திருத்தந்தைபோல், கிறிஸ்தவ ஒன்றிப்புக்காக பாடுபட்ட திருத்தந்தை, வரலாற்றில் அதுவரை இருந்ததில்லை என்று சொல்லலாம். 1960 ஜூன் மாதம் 5ஆம் தேதி, கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான திருப்பீட அவையை உருவாக்கினார். இவ்வாரத்தோடு அது தன் 63ஆம் ஆண்டை நிறைவுச் செய்துள்ளது. 1960 டிசம்பர் 20ஆம் தேதி கான்டர்பரியின் ஆங்கிலிக்கன் பேராயர் Dr. Geoffrey Fisherஐ திருப்பீடத்தில் வரவேற்றார். ஓர் ஆங்கிலிக்கன் முதுபெரும் தலைவர் திருத்தந்தையால் திருப்பீடத்தில் வரவேற்கப்பட்டது அதுவே முதன்முறை. கிறிஸ்தவ ஒன்றிப்பு சபை முதுபெரும் தலைவருக்கு தன் வாழ்த்துக்களை தெரிவிக்க இரு பிரதிநிதிகளை கான்ஸ்டாண்டிநோபிளுக்கும் அனுப்பினார். 1961ல் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் முதலாம் Alexyயுடன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். புதுடெல்லியில் 1961 நவம்பரில் இடம் பெற்ற உலக கிறிஸ்தவர்களின் அவைக்கு தன் சார்பில் 5 பிரதிநிதிகளையும் அனுப்பிவைத்தார் திருத்தந்தை 23ம் ஜான்.
யூதர்களை பெருமதிப்புடன் நடத்தினார் இத்திருத்தந்தை. யூதப்பிரதிநிதிகளை சந்தித்த போதெல்லாம் ‘நானே ஜோசப், உங்கள் சகோதரன்’ என்பார். ஏனெனில் இவரது இயற்பெயர் ஜோசப் ரொங்காலி. யூதர்களை எப்போதும் முத்த சகோதரர்கள் என்றே அழைத்தார். திருஅவைக்காகவும், மனித குலத்திற்காகவும் உழைத்து, செபித்து வாழ்ந்த திருத்தந்தை 23ஆம் ஜான், 1963ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி இறைபதம் சேர்ந்தார். இவரின் மரணம் குறித்து உலகமே அழுதது. பிரிந்த சபை கிறிஸ்தவர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையே மோதல் இடம் பெற்றுவந்த Belfast நகரிலேயே, பிரித்தானியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இவர் மரணத்தறுவாயில் இருந்தபோது, யூதர்கள் ஒன்றுகூடி இவருக்கான ஜெபவழிபாடுகளை நடத்தியதும், மக்கள் இவர்மீது கொண்டிருந்த அன்பிற்கு எடுத்துக்காட்டு. இவரின் உடல் புனித பேதுரு பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது. 2000மாம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி இவர் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் அருளாளர் என அறிவிக்கப்பட்டார். 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று, வரலாற்றில் முதல்முறையாக இரண்டு திருத்தந்தையர்கள் ஒரே நேரத்தில் புனிதர்களாக அறிவிக்கப்படுகின்ற வைபவத்தில் பிரான்சிஸுக்கு முன்பு திருத்தந்தையாக இருந்த பெனெடிக்டும் கலந்துகொண்டார். அதாவது, இரண்டு திருத்தந்தையர்கள் புனிதர்களாக அறிவிக்கப்பட்ட திருப்பலியில் இரு திருத்தந்தையர்கள் பங்கேற்பு. திருத்தந்தை இருபத்திமூன்றாம் ஜானுக்கு புனிதர் பட்டம் அளிக்க இரண்டாவது புதுமை தேவையில்லை என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தீர்மானித்து, சட்டத்திற்கு விதிவிலக்கு கொடுத்ததையும் நாம் இங்கு குறிப்பிடவேண்டும். “தான் திருமுழுக்கின் வழியாக பெற்ற புனிதத் தன்மையை என்றுமே இழந்ததேயில்லை” என்று கூறிய இப்புனிதரின் உடல் வத்திக்கான் அடிநிலக் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்டு, தூய பேதுரு பேராலயத்தில் பொதுமக்களின் பார்வைக்கென வைக்கப்பட்டுள்ளது.
அன்பு நெஞ்சங்களே! உலகால் அன்புசெய்யப்பட்ட திருத்தந்தை 23ஆம் ஜானுக்குப்பின் வந்தவர் இத்தாலியில் மிலானின் கர்தினாலாக இருந்த திருத்தந்தை 6ஆம் பவுல். இவரே, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை தொடர்ந்து வழிநடத்திச் சென்றார். இவர் குறித்து வரும் வாரம் நோக்குவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்