நேர்காணல் – நூற்றாண்டு விழா காணும் தூத்துக்குடி மறைமாவட்டம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
அலைகடலின் ஆற்றலுடன் தன் ஆற்றல் சேர்த்து, கடல் அன்னை தரும் முத்துக்களை ஆழ்கடலில் அமிழ்ந்து, அலைந்து திரிந்து, அற்புதமாய் கூட்டிச்சேர்த்து, அழகான மணிமாலையாய்க் கோர்ப்பது போல, எண்ணற்ற அனுபவங்கள், ஏராளமான செயல்பாடுகள், கணக்கற்ற துறவுக்குழுமங்கள் இணைந்து கோர்க்கப்பட்ட மாலையென நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கின்றது தூத்துக்குடி மறைமாவட்டம். கரையெங்கும் கண்கவர் காட்சி தரும் கடற்சிப்பிகள் போல, கடற்கரை தோறும் கடவுள் அருளை அள்ளித்தரும் ஆலயங்கள். கடற்காற்றை உள்ளடக்கிய வலம்புரி சங்குகள் போல இறைப்புகழை பாடித்தொழும் இறைமக்கள். கல்வி, மருத்துவம், சமூகம், நலவாழ்வு என எண்ணற்ற பணிகளால் ஏற்றம் கொண்டு எழிலுடன் திகழும் தூத்துக்குடி மறைமாவட்டம் தென்இந்தியாவின் தமிழகத்தின் தலைசிறந்த மறைமாவட்டமாகத் திகழ்கின்றது. இறைமக்கள் அடிப்படையில் தமிழகத்தின் மிகப்பெரிய முதல் மறைமாவட்டமாகவும், இந்திய ஆளவில் மூன்றாவது மறைமாவட்டமாகவும், தூத்துக்குடி மறைமாவட்டம் இயங்கிவருகின்றது. ஆயிரம் ஆண்டுகள் கிறிஸ்தவ அடிச்சுவடுகளைக் கொண்ட இம்மறைவாட்டமானது தனி மறைமாவட்டமாக பிரிக்கப்பட்டதன் நூற்றாண்டு விழாவினை இவ்வாண்டு 2023 ஆம் ஆண்டு கொண்டாடி மகிழ்கின்றது. இம்மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழா ஜூன் 11ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை சிறப்பிக்கப்பட்ட நிலையில் இம்மறைமாவட்டம் உருவான வரலாறு அதன் பணிகள் பற்றிய இன்றைய நேர்காணலில் நம்முடன் பகிர்ந்து கொள்பவர் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோணி.
கோட்டாறு மறைமாவட்டத்தில் உள்ள கீழ்மணக்குடி என்னும் ஊரில் 1952ஆம் ஆண்டு பிறந்த மேதகு ஆயர் ஸ்டீபன் அந்தோணி அவர்கள் எளிய மனம் கொண்டு ஏற்றங்கள் பல ஆற்றுபவர். மதுரை புனித அருளானந்தர் கல்லூரியில் மெய்யியல் படிப்பு, திருச்சி புனித பவுல் உயர் குருமடத்தில் இறையியல் படிப்புக்களைப் பயின்ற ஆயர் ஸ்டீபன் அவர்கள், 1979ஆம் ஆண்டு வேலூர் மறைமாவட்டத்திற்காக குருத்துவ அருள்பொழிவுபெற்று முதுகலைப் படிப்பை பெங்களூருவில் உள்ள புனித பேதுரு குருமடத்தில் பயின்றவர். உரோமில் உள்ள உர்பானியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் மறைப்பணிக்காக கரிபீயன் தீவுகளில் 6ஆண்டுகள் பணியாற்றியவர். பங்குத்தந்தை, மறைமாவட்ட முதன்மைகுரு, குருத்துவக் கல்லூரி பேராசிரியர், எனத் தன்னை மெருகுபடுத்திக் கொண்ட ஆயர் ஸ்டீபன் அவர்கள், 2019ஆம் ஆண்டு ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். கனிவும் மனத்தாழ்மையும் என்ற விருதுவாக்கோடு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டு அன்று முதல் இன்று வரை மறைமாவட்டத்தின் வளர்ச்சிக்காக அயராது பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இத்தகைய சிறப்புக்குரிய ஆயர் பெருந்தகை மேதகு ஸ்டீபன் அந்தோணி அவர்களை நூற்றாண்டு விழா காணும் தூத்துக்குடி மறைமாவட்டம் பற்றிய கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
கல்வி, , மருத்துவம், சமூக மேம்பாட்டுப் பணிகளில் தொடா்ந்து சிறப்புடன் ஈடுபட்டு வரும் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா், அருள்தந்தையா்கள், அருள்சகோதரிகள், பொது நிலையினர் ஆகிய அனைவருக்கும் நூற்றாண்டு விழா நல்வாழ்த்துக்கள். கல்வி, ஏழைகள் நல உதவிகள், பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட அரசின் திட்டங்களுக்கு முன்னோடியாக விளங்கும் கத்தோலிக்க திருஅவைகளில் சிறப்புற்று நூற்றாண்டு கொண்டாடி மகிழும் தூத்துக்குடி மறைமாவட்டத்தினருக்கு எம் வத்திக்கான் வானொலியின் வாழ்த்துக்களும் செபங்களும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்