தேடுதல்

காங்கோ ஆயர்பேரவை காங்கோ ஆயர்பேரவை  

பொதுத்தேர்தலில் பொறுப்புடன் வாக்களியுங்கள் : காங்கோ ஆயர்பேரவை

காங்கோ மக்கள் அமைதியையும் நீதியையும் விரும்புகிறார்கள், இதன் காரணமாகவே அவர்கள் தங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்கிறார்கள் : காங்கோ ஜனநாயகக் குடியரசின் ஆயர்கள்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காங்கோ ஜனநாயகக் குடியரசின் எதிர்கால நலனுக்காக வரவிருக்கும் பொதுத் தேர்தலில் நேர்மையான மற்றும் திறமையான வேட்பாளர்களுக்குப் பொறுப்புடன் வாக்களிக்குமாறு மக்களுக்கு அழைப்புவிடுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்

இவ்வாண்டு டிசம்பர் 20-ஆம் தேதியன்று அரசுத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலப் பேரவைகளுக்கானத் தேர்தல் நடைபெறவுள்ள வேளை, இவ்வாறு அறிக்கையொன்றில் வேண்டுகோள் விடுத்துள்ளது அந்நாட்டு ஆயர்பேரவை.

காங்கோ மக்களின் உறுதித்தன்மை, மற்றும் நல்வாழ்வு என்பது, உண்மையிலேயே சுதந்திரமான, எல்லாவற்றையும் உள்ளடக்கிய, வெளிப்படையான மற்றும் அமைதியான தேர்தல்களில்தான் அடங்கியுள்ளது என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளது அவ்வாயர் பேரவை.

மோதல்கள் நிறைந்த காங்கோ தேசத்தில் அமைதியை மீட்டெடுக்க அவ்வரசின் தூதரகக் கொள்கைகள்  அரசியல் மற்றும் இராணுவ முயற்சிகளை ஒப்புக்கொள்ளும் அதேவேளையில், நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்து வரும் பாதுகாப்பின்மை குறித்தும் அவ்வறிக்கையில் ஆயர்கள் மிகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு சவால்கள் மற்றும் ஆயுதக் குழுக்களின் பெருக்கம் தங்களுக்கு மிகுந்த கவலை அளிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஆயர்கள், பாதுகாப்பு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு குறித்த அவர்களின் பரிந்துரைகள் கவனிக்கப்படாமல் போனது மிகவும் வருத்தத்திற்குரிய செயல் என்றும் தங்கள் வேதனையைத் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆகவே, இப்படிப்பட்ட சூழல்களை மனதில் கொண்டவர்களாய் நாட்டின் நலனுக்காக உழைக்கும் திறமை கொண்ட நல்ல தலைவர்களைத் தேர்வு செய்யுமாறு அனைத்து மக்களையும் தாங்கள் கேட்டுக்கொள்வதுடன் மக்கள் மிகவும் விழிப்புடன் இருந்து செயல்படுமாறும் அறிவுறுத்தியுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 June 2023, 14:15