தேடுதல்

ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான புதிய பள்ளி திருப்புவிழா திருப்பலியின் போது ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான புதிய பள்ளி திருப்புவிழா திருப்பலியின் போது  

நேபாளத்தில் பறிக்கப்படும் குழந்தைகளின் கனவுகள்!

நேபாள கார்மெல் அன்னையின் பெயரில் இயங்கும் சமூகப்பணி மையங்கள் அனைத்தும் கல்வி, உடல்நலம், பாதுகாப்பு மற்றும் இளையோர் மேம்பாடு குறித்த திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நேபாளத்திலுள்ள தலத்திருஅவை இன்னும் குழந்தையாக, அதாவது, இன்னும் தொடக்க நிலையில்தான் உள்ளது என்றும், சந்தைகளிலோ அல்லது நகர உணவகங்களிலோ வேலை செய்யும் சின்னஞ்சிறு குழந்தைகளின் கனவுகள் பறிக்கப்பட்டு வருகின்றன என்றும் கூறினார் அருள்பணியாளர் Ajo Thelappilly

நேபாளத்தின் Dhangadhi என்னுமிடத்தில் ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான புதிய பள்ளி ஒன்றின் திருப்புவிழா குறித்து ASIA செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு கூறிய அருள்பணியாளர் Thelappilly அவர்கள், இங்கு வாழும் பெரும்பாலான குழந்தைகள் உணவகங்கள் மற்றும் சந்தைகளில் குழந்தைத் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள் என்றும் கவலை தெரிவித்தார்.

நேபாளத்தின் முதல் உள்ளூர் ஆயராக இருந்து பின்னர் 2015-இல் இறைபதம் அடைந்த இயேசு சபை ஆயர் அந்தோணி ஷர்மாவின் அழைப்பினை ஏற்று, கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி இப்பகுதிக்கு வந்ததாகக் கூறிய அருள்பணியாளர் Thelappilly அவர்கள், தலைநகர் காத்மண்டுவுடன் ஒப்பிடும்போது இவை நேபாளத்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இங்குள்ள மக்கள் முக்கியமாக மகர், செத்ரி மற்றும் தாரு குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் பண்டைய மரபுகள் மற்றும் கலாச்சாரத்திற்காக நன்கு அறியப்பட்டவர்கள் என்றும் விவரித்த அருள்பணியாளர் Thelappilly அவர்கள், விவசாயம் அவர்களுக்கு ஒரு அடிப்படை வாழ்வாதாரத்தை வழங்குகிறது, ஆனால் உள்ளூர் சந்தைகளில் அவர்களின் விளைபொருள்களுக்குச் சரியான விலை நிர்ணயம் இல்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.

25 இலட்சம் மக்கள் வாழும் இந்தப் பகுதியில், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளது என்று சுட்டிக்காட்டிய அருள்பணியாளர் Thelappilly அவர்கள், இங்கு வாழும் மொத்த மக்கள் தொகையில் பாதியளவிற்கு வறுமை நிலையில் வாழ்வதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுவதாகக் கூறினார்.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இமயமலையின் அடிவாரத்தில் உள்ள ஏழ்மையான பகுதிகளில் மறைபரப்பு பணியாற்றிவரும் அருள்பணியாளர் Thelappilly அவர்கள், நேபாளத்தில் செயல்பட்டு வரும்  நேபாள கார்மெல் அன்னை சமூகப் பணிகள் மையத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வருகின்றார். (ASIAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 June 2023, 14:31