தேடுதல்

கொரிய இராணுவ வீரர்கள் கொரிய இராணுவ வீரர்கள்  (AFP or licensors)

கொரிய தீபகற்பத்தின் அமைதி மற்றும் ஒப்புரவிற்காக ஆயர்கள் செபம்

கொரிய நாடுகளுக்கு இடையேயுள்ள எல்லையில் இருக்கும் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த கோவிலில் ஆயர்களும் கொரிய இராணுவ அதிகாரிகளும் இறைவேண்டல்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இரு கொரிய நாடுகளிடையே பதட்ட நிலைகள் தொடர்ந்து இடம்பெற்றுவந்தாலும் அமைதிக்கான பேரார்வத்தை கொரிய மக்கள் இழந்துவிடக்கூடாது என அழைப்புவிடுத்துள்ளனர் கொரிய ஆயர்கள்.

கொரிய போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளதைக் கொண்டாடும் வேளையில் வடகொரிய எல்லைக்கருகே இருக்கும் வரலாற்று சிறப்புவாய்ந்த கோவிலுக்குச் சென்று கொரிய தீபகற்பத்தின் அமைதி மற்றும் ஒப்புரவிற்காக செபித்தபின் இவ்வாறு அழைப்புவிடுத்தனர் ஆயர்கள்.

ஓய்வுபெற்ற 4 ஆயர்கள் உடபட 18 ஆயர்கள் இணைந்து கொரிய நாடுகளின் எல்லையில் உள்ள Paju கோவிலில் இந்த அமைதி மற்றும் ஒப்புரவிற்கான செபவழிபாட்டின் ஒரு பகுதியாக திருப்பலி, திருநற்கருணை ஆராதனை ஆகியவைகளை நிறைவேற்றியதுடன் கொரிய போர் நினைவுகளைத் தாங்கி நிற்கும் கண்காட்சியையும் சென்றுப் பார்வையிட்டனர்.  

இரு நாடுகளுக்கும் இடையேயுள்ள எல்லையில் இருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புவாய்ந்த கோவிலுக்கு ஆயர்களுடன் கத்தோலிக்க ஆயர்களின் தேசிய ஒப்புரவு அவையின் அங்கத்தினர்களும், கொரிய இராணுவ அதிகாரிகளும்  சென்றனர்.

இரு கொரிய நாடுகளிடையே பதட்டநிலைகள் அதிகரித்துவரும் இன்றையச் சூழலில், அதிலும் குறிப்பாக போர் நிறுத்தம் இடம்பெற்றதன் 70ஆம் ஆண்டை சிறப்பிக்க தயாரிப்புக்கள் இடம்பெற்றுவரும் இம்மாதத்தில் அமைதி, மன்னிப்பு மற்றும் ஒப்புரவிற்காக செபிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார் தேசிய ஒப்புரவு அவையின் ஆயர் சைமன் கிம் ஜூ யங். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 June 2023, 15:17