தேடுதல்

போரிடும் இஸ்ரயேலர்கள் போரிடும் இஸ்ரயேலர்கள் 

தடம் தந்த தகைமை - இஸ்ரயேல் மக்கள் போருக்குப் புறப்படல்

பென்யமினுக்குச் சொந்தமான கிபயாவின் ஆள்கள் இஸ்ரயேலுக்கு எதிராகச் செய்த அருவருக்கத்தக்க செயலுக்குப் பழிவாங்க இஸ்ரயேல் மக்கள் ஒன்றுதிரண்டனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

தாண் தொடங்கிப் பெயேர்செபா வரையிலும், கிலயாது நாட்டிலும் இருந்த இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஒரே கூட்டமைப்பாக ஆண்டவர் திருமுன் மிஸ்பாவில் ஒன்று கூடினர். இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களைச் சார்ந்த எல்லா மக்களின் தலைவர்களும் கடவுளின் மக்களது சபையாக வந்து நின்றனர். அவர்கள் வாளேந்திய நான்கு இலட்சம் போர் வீரர்கள். இஸ்ரயேல் மக்கள் மிஸ்பாவுக்குச் சென்றனர் என்பதை பென்யமின் மக்கள் கேள்வியுற்றனர். இஸ்ரயேல் மக்கள், “இந்தக் கொடிய நிகழ்ச்சி எவ்வாறு நடந்தது என்பதைக் கூறுங்கள்” என்று கேட்டனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவனான லேவியர் பதிலளித்துக் கூறியது: “நானும் என் மறுமனைவியும் இரவில் தங்குவதற்குப் பென்யமினுக்குச் சொந்தமான கிபயாவுக்கு வந்தோம். கிபயா ஆள்கள் எனக்கெதிராகப் புறப்பட்டு வந்து இரவில் என்னையும் வீட்டையும் சூழ்ந்துகொண்டு என்னைக் கொல்ல முயற்சி செய்தனர். அவர்கள் என் மறுமனைவியை இழிவுபடுத்தவே, அவள் இறந்து போனாள். என் மறுமனைவியின் சடலத்தை எடுத்து வந்து அதைத் துண்டு துண்டாக வெட்டி இஸ்ரயேலின் உரிமைச் சொத்தான அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பினேன். ஏனெனில், அவர்கள் இஸ்ரயேலுக்கு எதிராக ஒழுக்கக் கேடான அருவருக்கத்தக்க செயலைச் செய்தனர். இதோ! இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் கலந்து பேசி உங்கள் முடிவைத் தெரிவியுங்கள்.”

எல்லா மக்களும் ஒரே மனத்தவராயக் கூறியது: இப்பொழுது நாம் கிபயாவுக்குச் செய்யப்போவது இதுதான்; நம்மில் சீட்டு விழுந்தவர்கள் அதற்கு எதிராகச் செல்வர். இஸ்ரயேலின் எல்லாக் குலங்களிலிருந்தும் நூற்றுக்குப் பத்துப்பேரையும், ஆயிரத்துக்கு நூறுபேரையும், பத்தாயிரத்துக்கு ஆயிரம் பேரையும் தேர்ந்தெடுப்போம். இவர்கள் சென்று பென்யமினுக்குச் சொந்தமான கிபயாவின் ஆள்கள் இஸ்ரயேலுக்கு எதிராகச் செய்த அருவருக்கத்தக்க செயலுக்குப் பழிவாங்கச் செல்பவர்களுக்கு உணவுப் பொருள்களைக் கொண்டு வரட்டும். இஸ்ரயேலின் எல்லா ஆள்களும் ஒன்றிணைந்து நகரை நோக்கிச் சென்றனர்.

இஸ்ரயேலின் குலங்களைச் சார்ந்தவர்கள் பென்யமின் குலம் முழுவதற்கும் ஆளனுப்பி, “இந்தத் தீய செயல் உங்கள் நடுவில் நடை பெற்றது ஏன்? இப்பொழுது கிபயாவில் உள்ள இழிமனிதரை எங்களிடம் ஒப்படையுங்கள். நாங்கள் அவர்களைக் கொன்று இஸ்ரயேல் நடுவிலிருந்து தீயதை அழிப்போம்” என்றனர். தங்கள் சகோதரரான இஸ்ரயேல் மக்கள் சொன்னதைப் பென்யமின் மக்கள் ஏற்கவில்லை. பென்யமின் மக்கள் இஸ்ரயேல் மக்களுடன் போரிடுமாறு தங்கள் நகர்களிலிருந்து புறப்பட்டுக் கிபயாவில் வந்து கூடினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 June 2023, 12:42