தடம் தந்த தகைமை - லேவியருக்கு நடந்த அநீதி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இஸ்ரயேல் மக்களுக்கு அரசன் இல்லாத அந்நாள்களில் லேவியர் ஒருவர் எப்ராயிம் மலைநாட்டின் எல்லைப்புறத்தில் தங்கியிருந்தார். யூதாநாட்டுப் பெத்லகேமைச் சார்ந்த ஒரு பெண்ணை மறு மனைவியாகக் கொண்டிருந்தார். அவள் அவருக்கு எதிராக வேசித்தனம் செய்துவிட்டு அவரிடமிருந்து பிரிந்து யூதாநாட்டுப் பெத்லகேமிலிருந்த தன் தந்தையின் வீட்டுக்குச் சென்றாள். அங்கு நான்கு மாதம் தங்கியிருந்தாள். அவளிடம் நயந்து பேசி, அவளைத் தன்னுடன் மீண்டும் அழைத்து வர அவள் கணவன் அவளை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து அவர் தம்முடன் தம் வேலையாளையும் இரு கழுதைகளையும் கூட்டிக்கொண்டு சென்று அவள் தந்தையின் வீட்டை வந்தடைந்தார்.
அவர் சேணமிட்ட இரு கழுதைகளுடனும் தம் மறு மனைவியுடனும் புறப்பட்டு பென்யமினைச் சார்ந்த கிபயாவை அடைந்தபொழுது கதிரவன் மறைந்தான்.
அங்கு ஒரு வீட்டில் அவர்கள் தங்கியிருந்தபோது, அந்நகரின் இழி மனிதர் அவ்வீட்டைச் சூழ்ந்துகொண்டு கதவைத் தட்டினர். அவ்வீட்டின் உரிமையாளரான முதியவரிடம், “உன் வீட்டிற்கு வந்திருக்கும் மனிதனை வெளியே கொண்டு வா. நாங்கள் அவனுடன் உறவு கொள்ள வேண்டும்” என்றனர். வீட்டின் உரிமையாளர் வெளியே வந்து அவர்களிடம், “வேண்டாம், என் சகோதரர்களே, என் வீட்டிற்கு வந்திருக்கும் இம்மனிதனுக்குத் தீங்கு எதுவும் செய்ய வேண்டாம். இக்கொடிய செயலைச் செய்யாதீர்கள். இதோ! கன்னிப்பெண்ணான என் மகளையும், அவர் மறுமனைவியையும் வெளியே அழைத்து வருகிறேன். அவர்களோடு உறவு கொண்டு உங்கள் விருப்பப்படியே நடந்துகொள்ளுங்கள். ஆனால், இம்மனிதனுக்கு இக்கொடிய செயலைச் செய்யாதீர்கள்” என்றார். அவர்களோ அவர் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்பொழுது அந்த லேவியர் தம் மறுமனைவியை அவர்களுக்காக வெளியே தள்ளிவிட்டார். அவர்கள் அவளோடு உறவு கொண்டு இரவு முழுவதும் வைகறைவரை அவளை இழிவுபடுத்தினர். அவர்கள் வைகறையானதும் அவளைப் போகவிட்டனர். வைகறையில் அப்பெண் வந்து தன் கணவன் இருந்த வீட்டின் கதவருகில் காலைவரை விழுந்துகிடந்தாள். காலையில் அவள் கணவர் எழுந்து, பயணத்தைத் தொடர, வீட்டின் கதவுகளைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். அவர் மறுமனைவியான அப்பெண் வீட்டின் கதவருகில் விழுந்துகிடந்தாள். அவள் கைகள் கதவு நிலையின்மீது இருந்தன. அவர் அவளிடம் எழுந்திரு புறப்படுவோம் என்றார். பதில் இல்லை. எனவே, அவர் அவளைக் கழுதை மீது தூக்கி வைத்து தன் வீட்டை நோக்கி சென்றார். அவர் தம் வீட்டிற்கு வந்ததும் ஒரு கத்தியால் தம் மறுமனைவியின் இறந்த உடலைப் பன்னிரு துண்டுகளாக வெட்டி, அவற்றை இஸ்ரயேலின் எல்லா நிலப்பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார். அதைக் கண்ட அனைவரும், “இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து, புறப்பட்டதிலிருந்து இந்நாள் வரை இது போன்றது நடந்ததில்லை; இது போன்றதைக் கண்டதுமில்லை; இதைப் பற்றி நீங்கள் சிந்தியுங்கள்; கலந்து பேசுங்கள்; உங்கள் முடிவைத் தெரிவியுங்கள்” என்று சொல்லிக் கொண்டனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்