தேடுதல்

சாலமோன் அரசர் முன் அதோனியா சாலமோன் அரசர் முன் அதோனியா  

தடம் தந்த தகைமை – சாலமோன் அரசர் முன் மண்டியிட்ட அதோனியா

அதோனியாவின் விருந்தினர் அனைவரும் அச்சமுற்று எழுந்து மூலைக்கு ஒருவராக ஓட்டம் பிடித்தனர். அதோனியா சாலமோனுக்கு அஞ்சி ஓடி, பலிபீடத்தின் கொம்புகளைப் பற்றிக் கொண்டான்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அதோனியாவும் அவனோடிருந்த அனைத்து விருந்தினரும் உண்டு முடித்த வேளையில், இப்பேரொலி அவர்கள் காதுக்கு எட்டியது. எக்காள ஒலி காதில்விழவே யோவாபு, “நகரில் ஏன் இத்துணை ஆரவாரம்?” என்று வினவினார். அவர் பேசிக் கொண்டிருக்கும்பொழுது குரு அபியத்தாரின் மகன் யோனத்தான் அங்கு வந்தான். அதோனியா “உள்ளே வா; நீ திறமை மிக்கவன்; நல்ல செய்தியே கொண்டு வருவாய்” என்றான். யோனத்தான் அதோனியாவிடம் கூறியது: “அதுதான் இல்லை; நம் தலைவராகிய அரசர் தாவீது சாலமோனை அரசராக்கி விட்டார். குரு சாதோக்கு, இறைவாக்கினர் நாத்தான், யோயாதாவின் மகன் பெனாயா, கிரேத்தியர், பெலேத்தியர் ஆகியோரை அவனோடு அனுப்பி விட்டார். அவர்கள் அவனை அரசரின் கோவேறு கழுதைமேல் அமர்த்தினர். குரு சாதோக்கும் இறைவாக்கினர் நாத்தானும் அவனைக் கீகோனில் அரசனாகத் திருப்பொழிவு செய்துவிட்டனர். பிறகு, அங்கிருந்து அக்களிப்போடு அவனை அழைத்து வந்துள்ளனர். எனவேதான், நகரில் இத்துணை ஆரவாரம்! நீங்கள் கேட்டது அந்த இரைச்சல்தான். சாலமோனும் இப்பொழுது அரச அரியணைமீது அமர்ந்துள்ளான். மேலும், அரசரின் அலுவலர் நம் தலைவராகிய தாவீது அரசரிடம் வந்து, ‘உம் கடவுள் உமது பெயரைவிடச் சாலமோன் பெயரைச் சிறப்புடையதாய் ஆக்குவாராக! உமது அரியணையை விட அவரது அரியணையை மாண்புடையதாய் ஆக்குவாராக!” என்று வாழ்த்தினர். அரசரும் தம் படுக்கையில் வணங்கித் தொழுது, “இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் போற்றி! அவர் இன்று என் அரியணைமீது ஒருவனை அமர்த்தியுள்ளார்! அதை நான் கண்குளிரச் கண்டேன்!” என்றார்.

உடனே அதோனியாவின் விருந்தினர் அனைவரும் அச்சமுற்று எழுந்து மூலைக்கு ஒருவராக ஓட்டம் பிடித்தனர். அதோனியா சாலமோனுக்கு அஞ்சி ஓடி, பலிபீடத்தின் கொம்புகளைப் பற்றிக் கொண்டான். அப்பொழுது சாலமோனுக்கு இவ்வாறு தெரிவிக்கப்பட்டது; “அதோனியா, சாலமோன் அரசருக்கு அஞ்சிப் பலி பீடத்தின் கொம்புகளைப் பற்றிக் கொண்டிருக்கிறான். மேலும் அவன், அரசர் சாலமோன், ‘என் அடியானாகிய உன்னை வாளால் கொல்லமாட்டேன்’ என்று இன்றே ஆணையிட்டுக் கூறட்டும் என்று வேண்டுகிறான்.” சாலமோனும், “அவன் ஒழுங்கான முறையில் நடந்து கொண்டால், அவன் தலைமுடி ஒன்றுகூடத் தரையில் விழாது. ஆனால், அவனிடம் வஞ்சனை எதுவும் காணப்பட்டால் அவன் சாக வேண்டும்” என்று பதிலளித்தார். எனவே, சாலமோன் அரசர் ஆளனுப்பிப் பலிபீடத்திலிருந்து அவனை இழுத்துக்கொண்டு வரச் செய்தார். அவனும் வந்து சாலமோன் அரசர்முன் வீழ்ந்து வணங்கினான். சாலமோன் அவனிடம் “நீ உன் வீட்டுக்குப் போகலாம்” என்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 June 2023, 09:06