தேடுதல்

சாமுவேலை அழைக்கும் இறைவன் சாமுவேலை அழைக்கும் இறைவன்  

தடம் தந்த தகைமை : கடவுள் சாமுவேலுக்குத் தோன்றுதல்!

மூன்றாம் முறையாக ஆண்டவர் “சாமுவேல்” என்று அழைத்தபோது, அவர் “பேசும், உம் அடியான் கேட்கிறேன்” என்று மறு மொழி கூறினான்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அக்காலத்தில் சிறுவன் சாமுவேல் ஏலியின் மேற்பார்வையில் ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தான். அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்தது. காட்சியும் அவ்வளவாக இல்லை. அப்போது ஒரு நாள் ஏலி தம் உறைவிடத்தில் படுத்திருந்தார். கண் பார்வை மங்கிவிட்டதால் அவரால் பார்க்க முடியவில்லை. கடவுளின் விளக்கு இன்னும் அணையவில்லை. கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தான். அப்போது ஆண்டவர், “சாமுவேல்” என்று அழைத்தார். அதற்கு அவன், “இதோ! அடியேன்” என்று சொல்லி, ஏலியிடம் ஓடி, “இதோ! அடியேன் என்னை அழைத்தீர்களா?” என்று கேட்டான். அதற்கு அவர், “நான் அழைக்கவில்லை. திரும்பிச் சென்று படுத்துக்கொள்” என்றார். அவனும் சென்றுபடுத்துக் கொண்டான். ஆண்டவர் மீண்டும் “சாமுவேல்” என்று அழைக்க, அவன் ஏலியிடம் சென்று, “இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா?” என்று கேட்டான். அவரோ, “நான் அழைக்கவில்லை மகனே! சென்று படுத்துக்கொள்” என்றார். சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை. அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

மூன்றாம் முறையாக ஆண்டவர் “சாமுவேல்” என்று அழைத்தார். அவன் எழுந்து ஏலியிடம் சென்று “இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா?” என்று கேட்டான். அப்பொழுது சிறுவனை ஆண்டவர்தாம் அழைத்தார் என்று ஏலி தெரிந்துகொண்டார். பின்பு, ஏலி சாமுவேலை நோக்கி “சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ, ‘ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்’ என்று பதில் சொல்” என்றார். சாமுவேலும் தம் இடத்திற்குச் சென்று படுத்துக் கொண்டான். அப்போது ஆண்டவர் வந்து நின்று, “சாமுவேல், சாமுவேல்” என்று முன்பு போல் அழைத்தார். அதற்கு சாமுவேல், “பேசும், உம் அடியான் கேட்கிறேன்” என்று மறு மொழி கூறினான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 June 2023, 12:02