தேடுதல்

மீட்புப்பணியில் அலுவலர்கள் மீட்புப்பணியில் அலுவலர்கள் 

இரயில் விபத்தின்போது மீட்புப் பணிகளை துவக்கிய மறைமாவட்டம்

பாலசோர் மறைமாவட்ட ஜோதி மருத்துவமனை, இரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால மருத்துவ உதவிகளை உடனடியாக வழங்கியுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஒடிசாவில் கடந்த வாரம் இடம்பெற்ற இரயில் விபத்தின்போது உடனடியாக தன் மீட்புப் பணிகளையும் மருத்துவப் பணிகளையும் துவக்கியதாக அறிவிக்கிறது பாலசோர் மறைமாவட்டம்.

மூன்று இரயில்கள் மோதிக்கொண்ட இந்த விபத்தில் இதுவரை 278 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய இரயில் துறையின் அதிகாரப்பூர்வத் தகவல் தெரிவிக்கின்ற அதேவேளை, விபத்து நடந்த ஒருசில மணி நேரத்திலேயே நடு இரவிலும், விபத்துப் பகுதிக்கு உதவிப்பொருட்களுடன் மீட்புப் பணியாளர்களை அனுப்பியது பாலசோர் மறைமாவட்டம்.

பாலசோர் மறைமாவட்டத்தின் ஜோதி பிறரன்பு மருத்துவமனை, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால அறுவைச் சிகிச்சைகளை நடத்தியதுடன் மருத்துவ உதவிகளையும் உடனடியாக வழங்கியுள்ளது. அதுமட்டுமல்ல, உணவு மற்றும் தண்ணீரையும், அங்கு இரயில் விபத்து நடந்த இடத்தில் பணிபுரிந்தோருள் தேவைப்பட்டோருக்கு வழங்கியுள்ளது.

விபத்துக் குறித்து கேள்விப்பட்டவுடனேயே கத்தோலிக்க ஜோதி மருத்துவமனையின் இயக்குனர் அருள்பணி பீட்டரும், சில சகோதரிகளும் அங்குச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இது தவிர, அம்மறைமாவட்டத்தின் சமூகப்பணி இயக்கமும் தன் பணியாளர்களையும், சுயவிருப்பப் பணியாளர்களையும் உடனடியாக அனுப்பி, காயம்பட்ட மக்களுக்கு உதவிகளை ஆற்றியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வசதிகளை வழங்கியதுடன், அவர்கள் தங்கள் உறவினர்களைத் தொடர்பு கொள்ளவும் உதவியுள்ளது பாலசோர் மறைமாவட்டம்.

இந்த இரயில் விபத்துக் குறித்து தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் செய்திகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியாஸ் அவர்களும் ஏனைய தலத்திருஅவைத் தலைவர்களும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 June 2023, 14:06