தேடுதல்

பெந்தக்கோஸ்து பெருவிழா பெந்தக்கோஸ்து பெருவிழா 

பெந்தக்கோஸ்து பெருவிழா : தூய ஆவியார் அருளும் புது வாழ்வு!

நாமும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாக “இயேசுவே ஆண்டவர்” என்று நமது உண்மைச் செயல்களால் உலகிற்கு உரக்கச் சொல்வோம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. திப 2: 1-11     II.  1 கொரி 12: 3b-7. 12-13     III.  யோவா 20: 19-23)

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடகரை பகுதியைச் சேர்ந்தவர் லியாகத் அலி (வயது 21). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த மார்ச் 15-ஆம் தேதி இரவுப் பணிக்குச் சென்றிருந்தபோது, அவரை கட்டுவிரியன் பாம்பு கடித்துவிட்டது. தொடர்ந்து பொள்ளச்சி, கோவை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவர் மூளைச்சாவடைந்துவிட்டதாக சில தனியார் மருத்துவமனைகளும் கைவிரிக்க, இறுதியாக ஈரோட்டில் பாம்பு கடிக்குச் சிறப்பு சிகிச்சையளிக்கும் ‘மணியன் மெடிக்கல் சென்டர்’ என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டதன் விளைவாக அவர் உயிர் பிழைத்தார். இதுகுறித்து லியாகத் அலியின் தந்தை முகமது கௌஸ், “பாம்பு கடித்த என் மகனை எல்லா மருத்துவமனைகளும் கைவிட்டுவிட்ட நிலையில் கடைசியாக ஈரோட்டில் உள்ள மணியன் மெடிக்கல் சென்டருக்குச் சென்றோம். 25 நாள்கள் தொடர் சிகிச்சை பெற்றோம். படிப்படியாக உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தொடக்கத்தில், மகனின் உடல் சில்லென்று ஆகிவிட்டது. உயிர் பிழைப்பதே கடினம் என்றுதான் சொன்னார்கள். 50-50 என்ற நிலைதான் இருந்தது. மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளிக்க நாங்களும் பிரார்த்தனை செய்தோம். அதன் விளைவாக என் மகன் இப்போது மீண்டு வந்திருக்கிறார். போன உயிர் திரும்பக் கிடைத்துள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

லியாகத்துக்கு சிகிச்சையளித்த மருத்துவர் செந்தில்குமரன் கூறுகையில், ``அடிப்படையில் நான் அவசர, தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர். விஷ முறிவு, பாம்புக் கடிக்காக இலங்கை சென்று பயிற்சி எடுத்து வந்தேன். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையிலேயே அவரது உடல்நிலை மோசமடைந்துவிட்டது. அங்கிருந்து ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றபோது மூளைச்சாவடைந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். மற்றொரு மருத்துவமனையிலும் மூளைச்சாவடைந்துவிட்டதாகவும், உறுப்பு தானம் செய்யச் சொல்லியும் கேட்டுள்ளனர். இதனால், குடும்பத்தினர் நம்பிக்கை இழந்துவிட்டனர். அவர்களின் பக்கத்து ஊர்க்கார் ஒருவர் இங்கு சிகிச்சை பெற்றிருந்தார். அதைக் கேள்விப்பட்டு, ஆனாலும் முழு நம்பிக்கை இல்லாமல் தான் இங்கு வந்தனர். அவர்களிடம் 72 மணி நேரம் அவகாசம் கேட்டோம். சரியாக 50-வது மணி நேரத்தில் விரல்கள் அசைந்தன. 60-வது மணி நேரத்தில் கண் திறந்து, நாங்கள் சொல்வதை எல்லாம் கேட்கத் தொடங்கிவிட்டார். 70-வது மணி நேரத்தில் செயற்கை சுவாசத்தில் இருந்து அவரை விடுவித்தோம். அப்படியே படிப்படியாகப் பேசுவது, நடப்பது என்று இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டார். இப்போது நலமுடன் இருக்கின்றார்” என்றார்.

நம் அன்னையாம் திருஅவை தூயஆவியானவர் பெருவிழாவைச் சிறப்பிக்கின்றது. இன்று திருஅவையின் பிறப்பு விழா என்று சொல்வது மிகவும் பொருத்தமாக அமைகின்றது. நமது உடலுக்கு உயிர் மிகவும் முக்கியமானதாக இருப்பதுபோல், தூய ஆவியானவர் நம் திருஅவைக்கு மிகவும் முக்கியமானவராக இருக்கின்றார். “உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் (காண்க.யோவா 14:16-17) என்றும், நான் உங்களிடம் சொல்வது உண்மையே. நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன். (யோவா 16:7) என்றும் நமதாண்டவர் இயேசு தனது சீடர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் இன்று நிறைவேறுகின்றன.

நம்பிக்கை தரும் தூய ஆவியார்

மகத்தான காரியங்களுக்கு மகத்தான நம்பிக்கைகள்தாம் சிறந்ததொரு வழியாக அமைய முடியும். ஒரு கதவு மூடப்பட்டால் அதைவிடச் சிறந்த வழி எதோ ஒன்று இருக்கின்றது என்பதை எப்போதும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நம்பிக்கையற்ற நிலையில் எல்லாமே முடிவடைந்துவிட்டதாக எண்ணி கதவுகளை மூடிக்கொண்டு அச்சத்தின் பிடியில் சிக்கித்தவித்த சீடர்களுக்குத் தூய ஆவியாரைக் கொடுப்பதன் வழியாக, அவர்கள் பயணிக்க வேண்டிய புதிய பாதையைக் காட்டுகின்றார் இயேசு. இன்றைய நற்செய்தி வாசகம், எவ்வாறு சீடர்கள் அனைவரும் அச்சம் நீங்கி தூய ஆவியாரைப் பெற்றுக்கொண்டனர் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. இப்போது நற்செய்தி வாசகத்திற்கு நமது செவிகளைத் திறப்போம். அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார். இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்.

ஒன்றுபடுத்தும் தூய ஆவியார்

ஒன்றிப்பை வெளிப்படுத்துபவர்தான் தூய ஆவியார். பிளவுகளையும், பிரிவினைகளையும் நீக்கி சாதி, மதம், மொழி, இனம், நாடு,  கலாச்சாரம், பண்பாடு என எல்லாவற்றையும் ஒன்றிணைப்பவர் தூய ஆவியார். “பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும், பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், யூதரும் யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம்மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக்கேட்கிறோமே!” என்று இன்றைய முதல் வாசகம் பதிவுசெய்கிறது. தூய ஆவியாரைப் பெற்றுக்கொண்ட சீடர்கள் அனைவரும் நாடுகள், எல்லைகள், மற்றும் வேறுபாடுகள் கடந்து பணியாற்றினார்கள் என்பது இதன்வழி நமக்குப் புலனாகிறது. இதனைத்தான், உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் எடுத்துரைக்கின்றார் புனித பவுலடியார்.

பொதுநன்மைக்காவே தூய ஆவியாரின் செயல்கள்

'பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது' என்றதொரு கருத்து இன்றைய இரண்டாம் வாசகத்தின் மையத்தில் இழையோடுகிறது. ஆனால், இதனைத்தொடர்ந்து புனித பவுலடியார் என்ன சொல்கிறார் என்பது இங்கே கூறப்படவில்லை. எதற்காக இத்தகையதொரு கருத்தை அவர் கூறுகிறார் என்பதைக் குறித்துச் சிந்திக்க அப்பகுதியை இப்போது வாசிப்போம். தூய ஆவியார் ஒருவருக்கு ஞானம் நிறைந்த சொல்வளத்தை அருளுகிறார். இன்னொருவருக்கோ அதே ஆவியார் அறிவுசெறிந்த சொல்வளத்தை அளிக்கிறார். அதே ஆவியார் வேறொருவருக்கு நம்பிக்கை அருளுகிறார். அந்த ஒரே ஆவியார் மற்றொருவருக்குப் பிணிதீர்க்கும் அருள் கொடையையும் அளிக்கிறார். தூயஆவியார் ஒருவருக்கு வல்ல செயல் செய்யும் ஆற்றலையும் இன்னொருவருக்கு இறைவாக்குரைக்கும் ஆற்றலையும் வேறொருவருக்கு ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றலையும் மற்றொருவருக்குப் பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றலையும் பிறிதொருவருக்கு அப்பேச்சை விளக்கும் ஆற்றலையும் அருளுகிறார். அந்த ஒரே ஆவியாரே இவற்றையெல்லாம் செயல்படுத்துகிறார்; அவரே தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் இவற்றைப் பகிர்ந்தளிக்கிறார் (காண்க. 1 கொரி 12:8-11). ஆக, இவ்வுலகில் மனிதர்கள் எல்லாரும் எல்லாத் திறமைகளையும் கொண்டிருக்க முடியாது. அதேவேளையில், பல்வேறு திறமைகளைக் கொண்டுள்ள பலர் இணைந்து ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவோ அல்லது இலட்சியத்திற்காகவோ உழைக்கும்போது அங்கே அதிசயம் நிகழ்கிறது. எடுத்துக்காட்டாக, பல்வேறு தனிவரங்களைக் கொண்டுள்ள துறவற சபைகள் திருஅவையுடன் இணைந்து பணியாற்றும்போது இறையாட்சி என்ற இயேசுவின் உயரிய நோக்கம் வெற்றிபெறுகிறது. அவ்வாறே, துறவு வாழ்வில் வெவ்வேறு திறமைகளைக் கொண்டவர்கள், ஆன்மிகப்பணி, கல்விப்பணி, சமூகப் பணி, இசைப்பணி, சிறைப்பணி, பல்சமய உரையாடல் பணி என்று பல்வேறு பணிகளை ஆற்றும்போது இவ்வுலகில் இறையாட்சிக் கட்டியெழுப்பப்படுகிறது என்பதை நாம் நன்கு உணர்ந்து கொள்ளலாம். இதனை விடுத்து, குறிப்பிட்டப் பணியை செய்யும் நான்தான் மற்றவர்களை விடப் பெரியவன், எல்லா பணிகளையும் செய்யும் திறமை எனக்கு மட்டும்தான் இருக்கிறது என்ற தலைக்கனம் தலைதூக்கும்போது, அங்கே இறையாட்சி என்ற பொதுநோக்கம் அழிந்துபோய்விடும். இன்றையத் துறவிகளிடமும், பொதுநிலையினரிடமும் இந்த மனப்பான்மை மேலோங்கிக் காணப்படுகிறது. இதனை விளக்கும் விதமாகத்தான், "உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார்" என்கிறார் புனித பவுலடியார். எனவே, இறையாட்சி என்னும் பொதுநோக்கு வெற்றிபெற பல்வேறு திறமைகளைக் கொண்ட நம்மை ஒன்றிணைப்பவராகத் தூய ஆவியார் செயல்படுகிறார்.

தூய ஆவியாரின் பெயரில் பிளவுகள்

தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவரன்றி வேறு எவரும் “இயேசுவே ஆண்டவர்” எனச் சொல்ல முடியாது. இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இன்றைய முதல் வாசகத்தின் தொடக்கத்தில் கூறுகின்றார் புனித பவுலடியார். ஆனால் இன்றைய உலகில் நடப்பது என்ன? ‘தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ என்று கூறுவதுபோல இன்றைய நம் சமூகத்தில், அபிஷேக கூட்டங்கள் அல்லது பரிசுத்த ஆவி கூட்டங்கள் என்று கூறிக்கொண்டு தெருவுக்குத் தெரு அவர் பெயரால் பிளவுகளையும் பிரிவுகளையும் ஏற்படுத்தி வருவதைப் பார்க்கின்றோம். தூய ஆவியானவர் இன்று ஒரு வியாபார பொருளாக மாற்றப்பட்டுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ‘என்னிடத்திலே தூய ஆவி இறங்கிவிட்டார், என்னிடம் அதைக் கூறினார் இதைக் கூறினார்’ என்று பல்வேறு இடங்களில் போலிப்போதகர்கள் பிதற்றி வருவதைப் பார்க்கின்றோம். தூய ஆவியானவர் பெயரால் பிரிவினைகளை ஏற்படுத்துவதே ஒரு பெரும் பாவம் என்பதையும் நாம் கண்டிப்பாக உணரவேண்டும். "மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால், தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெற மாட்டார்" (காண்க. மத் 12:32) என்று இயேசு எச்சரிக்கிறார். மேலும்,  "நீங்கள் இன்னும் உங்கள் ஊனியல்புக்கேற்பவே நடக்கிறீர்கள். ஏனெனில், பொறாமையும், சண்டை சச்சரவும் உங்களிடையே உள்ளன. நீங்கள் ஊனியல்புக்கேற்ப நடந்து மனிதப் போக்கில்தானே வாழ்கிறீர்கள்? ஏனெனில், ஒருவர் “நான் பவுலைச் சார்ந்துள்ளேன்” என்றும் வேறொருவர் “நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்” என்றும் உங்களிடையே சொல்லிக் கொள்ளும்போது நீங்கள் மனிதப்போக்கில்தானே நடக்கிறீர்கள்? (காண்க. 1 கொரி 3:3-4) என்று கொரிந்து நகர் மக்களை சாடுகின்றார் புனித பவுலடியார்.

ஊனியல்பின் செயல்களைக் களைவோம்

ஊனியல்புக்குரிய செயல்களை கொண்டிருந்த சீடர்களைத் தனது தூய ஆவியானவர் வழியாகப் புதுவாழ்வுப் பெறச் செய்தார் உயிர்த்த ஆண்டவர். எனவே, நாமும் அவ்வாறே, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாக “இயேசுவே ஆண்டவர்” என்று நமது உண்மைச் செயல்களால் உலகிற்கு உரக்கச் சொல்வோம். இச்சிறிய இறைவேண்டலுடன் இம்மறையுரையை நிறைவு செய்வோம்.

தூய ஆவியே துணையாக வருவீர், எங்கள் வாழ்வின் பயணத்தில் எங்களுடைய செயல்களில் நாங்கள் உண்மையாய் இருக்க அருள் புரிவீர். கிறித்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு பல்வேறு பிளவுகளுடனும் பிரிவினைகளுடனும் வாழும் எங்களின் உள்ளங்களை ஒன்றுபடுத்தியருளும். பொதுநன்மைக்காகவும், எங்கள் அன்னையாம் திருஅவையின் வளர்ச்சிக்காகவும் நீர் எங்களுக்கு அளித்துள்ள பல்வேறு திறமைகளைப் பயன்படுத்தச் செய்தருளும். திருஅவை என்னும் ஒரே உடலின் உறுப்புகளாக எங்களை ஒன்றிணைந்து வாழச் செய்தருளும். ஆமென்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 May 2023, 11:57