தேடுதல்

சூடானில் புலம்பெர்ந்தோர் சூடானில் புலம்பெர்ந்தோர்  

சூடான் அகதிகளை வரவேற்க தென்சூடான் திருஅவை தயார்

ஒரு மாதமாக சூடானில் இடம்பெற்றுவரும் மோதல்களால் குறைந்தபட்சம் 500 பேர் வரை உயிரிழந்துள்ளனர், தென் சூடானுக்குள் 50 ஆயிரம் பேர் வரை அடைக்கலம் தேடி புகுந்துள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அண்மை நாடான சூடானில் இடம்பெற்றுவரும் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை வரவேற்க தென்சூடான் கத்தோலிக்கர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் தென்சூடான் ஆயர் Matthew Remijio Adam Gbitiku.

பாதுகாப்பை நாடி அடைக்கலம் தேடிவரும் சூடான் அகதிகளை வரவேற்கவேண்டியது ஒவ்வொரு தென்சூடான் குடிமகனின் கடமை என்பதை வலியுறுத்திய ஆயர் அவர்கள், தென்சூடான் நோக்கிய பயணத்தில் சூடான் மக்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்சூடானில் பணியாற்றும் கம்போனி மறைப்பணியாளர் சபையின் போர்த்துக்கல் அருள்சகோதரி Beta Almendra உரைக்கையில், வசதி படைத்தவர்கள் வாகனங்களிலோ, விமானத்தின் வழியாகவோ புகலிடம் தேடி தப்பிச் சென்றுவிடுகின்றனர், ஆனால் ஏழைமக்களோ மாதக்கணக்கில் நடைபயணம் செய்து பாதுகாப்பான இடங்களைத் தேடவேண்டியுள்ளது என்றார்.

அனைத்தையும் விட்டுவிட்டு  பாதுகாப்பைத் தேடி அண்மை நாடுகளுக்குச் செல்லும் சூடான் மக்கள் தங்கள் பயணப்பதையில் தங்களிடம் இருக்கும் சிறுபொருட்களையும் கொள்ளையர்களால் இழக்கின்றனர் என்ற கவலையையும் வெளியிட்டார் அருள்சகோதரி Almendra.

ஒரு மாதமாக இராணுவத்தின் இரு பிரிவுகளிடையே இடம்பெற்றுவரும் மோதல்களால் குறைந்தபட்சம் 500 பேர் வரை உயிரிழந்துள்ளனர், பல ஆயிரக்கணக்கானோர் சொந்த இடங்களை விட்டு வெளியேறி எத்தியோப்பியா, எகிப்து, சாடு மற்றும் தென் சூடானில் அடைக்கலம் தேடியுள்ளனர்.

தென் சூடானுக்குள் 50 ஆயிரம் பேர் வரை சூடானிலிருந்து அடைக்கலம் தேடி புகுந்துள்ளனர்.

இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சூடானும், கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட தென் சூடானும் 2011ஆம் ஆண்டு தனி நாடுகளாக பிரிந்தன.(ACN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 May 2023, 13:27