தேடுதல்

திருத்தந்தை 15ம் பெனடிக்ட். திருத்தந்தை 15ம் பெனடிக்ட்.  

திருத்தந்தையர் வரலாறு – திருத்தந்தை 15ம் பெனடிக்ட்.

திருத்தந்தை 15ம் பெனடிக்ட் கருணை உள்ளம் கொண்டவராகவும், எப்போதும் அணுகும் தன்மை உடையவராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

நேயர்களே! கடந்தவாரம் 20ஆம் நூற்றாண்டின் முதல் திருத்தந்தை 10ஆம் பயஸ் குறித்து கண்டோம். இவருக்குப்பின் வந்தவர் திருத்தந்தை 15ஆம் பெனடிக்ட். 1854ஆம் ஆண்டு பிறந்து தன் 60ஆம் வயதில் 1914ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ந்தேதி திருத்தந்தையாக பதவியேற்ற பாப்பிறை 15ஆம் பெனடிக்டின் ஆட்சிகாலம், முதலாம் உலகப்போர் நிகழ்வுகளால், வரலாற்றில் முக்கியத்துவம் பெற முடியாமல் போய்விட்டது. வரலாற்றின் மிக உன்னத திருத்தந்தையர்களுள் ஒருவராக விளங்கிய இவரின் புகழும் பெறுமையும் திருஅவைக்குள்ளும் திருஅவைக்கு வெளியேயும் உரிய அங்கீகாரத்தை பெறவில்லை என பல வரலாற்று ஆசிரியர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர். Giacomo Paolo Giovanni Battista della Chiesa என்ற பெயருடன் பிறந்த இவர், பார்வைக்கு சிறிது ஊனமுள்ளவராகவேக் காணப்பட்டார். மிகவும் ஒல்லியாக, குள்ளமாக, சிறிது விந்தி விந்தி நடப்பவராக இருந்தவர் திருத்தந்தை 15ம் பெனடிக்ட். கருணை உள்ளம் கொண்டவராகவும், எப்போதும் அணுகும் தன்மை உடையவராகவும் அவர் இருந்தது குறிப்பிடத்தக்கது. 1907ஆம் ஆண்டு திருத்தந்தை 10ஆம் பயஸால் பேராயராக நியமிக்கப்பட்ட இவர், 1914ல் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். 4 மாதங்களில் இவரே திருத்தந்தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மிக அண்மையிலேயே கர்தினாலாக உயர்த்தப்பட்ட ஒருவர், திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டது பலருக்கு  ஆச்சரியம் தரும் ஒன்றாக இருந்தது. ஆனால், முதலாம் உலகப்போர் இடம் பெற்ற அக்காலக்கட்டத்தில், அரசியல் தூதுவராக அனுபவம் பெற்றுள்ள ஒருவர் திருத்தந்தையாவது திருஅவைக்கு நல்லது என எண்ணிய கர்தினால்களே இவரைத் தேர்ந்தெடுத்தனர். இவரும்  தன் பதவியேற்பு விழாவை ஏனைய திருத்தந்தையர்களைப்போல் தூய பேதுரு பேராலயத்தில் நடத்தாமல், சிஸ்டைன் கோவிலில் நடத்தி, அதன் ஆன்மீகத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். முதலாம் உலகப்போர் காலத்தில் முடிசூட்டு விழாவின் வீண் ஆடம்பரங்களை இத்திருத்தந்தை 15ஆம் பெனடிக்ட் களைய விரும்பியதும் இதற்கு காரணம். பதவியேற்ற உடனேயே திருப்பீடத்தின் நீதித்துறையை ஒழுங்குபடுத்தி, அதிலிருந்து பெரும் பணத்தை ஏழைகளின் தேவைகளுக்கு என வழங்கினார். முதலாம் உலகப்போரில் ஈடுபட்ட இரு பகுதிகளையும் கண்டிக்கவோ, ஆதரிக்கவோ மறுத்து, நடுநிலை வகித்த இத்திருத்தந்தையை, போரின் இருதரப்பினரும், அடுத்த பகுதிக்கு அவர் உதவுவதாக குற்றம் சுமத்தினர். போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்தார். போரால் பிரிந்த குடும்பங்கள் இணைய உதவினார். ஷயரோகத்தால் பாதிக்கப்பட்ட  இராணுவ வீரர்களை ஏற்று உதவ வேண்டும் என சுவிட்சர்லாந்து நாட்டை தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்தார்.

போர்க்கைதிகள் குறித்தும் போரில் ஆக்ரமிக்கப்பட்ட பகுதிகள் குறித்தும் ஏழு பரிந்துரைகள் அடங்கிய அமைதி ஒப்பந்தத்தை 1917ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தேதி முன்வைத்தார் திருத்தந்தை 15ஆம் பெனடிகட். ஆனால் இருதரப்பினரும் இதனை ஏற்க மறுத்தனர். இதற்கிடையே முதலாம் உலகப்போரில் இத்தாலி தோல்வி அடைந்ததால் உரோம்நகரை திருப்பீடத்திற்கு வழங்குவதாக ஜெர்மனி அறிவித்தது. இதற்காக, திருத்தந்தை ஜெர்மனிக்கு ஆதரவாக இருக்கிறாரோ என எதிர்தரப்பு சந்தேகம் கொண்டது. ஆனால் திருத்தந்தை 15ம் பெனடிக்டோ  உலக அமைதி என்பதை மட்டுமே தன் நோக்கமாகக்கொண்டு நடுநிலையாளராகவே செயல்பட்டார். அதே நோக்கத்துடன் தான் இரு கர்தினால்களை பாதிக்கப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அப்போஸ்தலிக்க பார்வையாளராகவும், துதுவராகவும் அனுப்பினார். இவர்கள் இருவருமே பின்னாளில் 11ஆம் பயஸ், 12ஆம் பயஸ் என்ற பெயர்களில் திருத்தந்தையானார்கள்.

இத்தாலியில் வத்திக்கானின் இடம் என்ன என்பது குறித்த கருத்துப்பரிமாற்றங்கள் இவர் காலத்தில்தான் துவங்கின. கர்தினால் கஸ்பாரி இத்தாலிய தலைவரைச சந்தித்து இது குறித்து உரையாடினார்.

நற்செய்தி அறிவிப்பு திருப்பேராயத்தின் கீழ் இயங்கிவந்த ‘கீழைரீதிகளுக்கான திருப்பேராயத்தை’ தனி அதிகாரம் உடையதாக 1917ம் ஆண்டு மாற்றியதும் இத்திருத்தந்தைதான். உரோம் நகரில் கீழைரீதி பாப்பிறை நிறுவனத்தை உருவாக்கி அதனை யேசு சபையினரின் நிர்வாகத்தின் கீழ் வழங்கியதும் திருத்தந்தை 15ஆம் பெனடிக்ட்தான். இவர் 1922ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ந்தேதி தொற்றுக்காய்ச்சலுக்கு பலியானார். இவரின் உடல் தூய பேதுரு பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

நேயர்களே! இவருக்குப்பின் வந்த திருத்தந்தை 11ஆம் பத்திநாதர் குறித்து வரும் வாரம் நோக்குவோம் இவருக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஆம். நம் வாiனாலியை துவக்கியவர் இத்திருத்தந்தையே.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 May 2023, 12:12