தேடுதல்

திருத்தந்தை 11ஆம் பயஸ். திருத்தந்தை 11ஆம் பயஸ். 

திருத்தந்தையர் வரலாறு – திருத்தந்தை 11ஆம் பயஸ்.

சமூகத்தொடர்பு சாதனங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த திருத்தந்தை 11ஆம் பயஸ், தன் நண்பர் குலியெல்மோ மார்க்கோனியின் உதவியுடன் வத்திக்கான் வானொலியை நிறுவினார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நேயர்களே! முதலாம் உலகப்போர் காலத்தில் வாழ்ந்து, அமைதிக்காக தொடர்ந்து குரல்கொடுத்து வந்த ஒரு திருத்தந்தை குறித்து, அதாவது திருத்தந்தை 15ம் பெனடிக்ட் குறித்து கடந்த வாரம் கண்டோம். அவரைத் தொடர்ந்து வந்தார் திருத்தந்தை 11ஆம் பயஸ். இவர் நீங்கள் இப்போது செவிமடுத்துக்கொண்டிருக்கும் வத்திக்கான் வானொலியோடு நெருங்கிய தொடர்புடையவர். ஆம், நம் வானொலியைத் துவக்கியவரே இவர்தான். வத்திக்கான் என்ற தனிநாடு உருவாகியதும் இவர்காலத்தில்தான். 1857ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதி Ambrogio Damiano Achille Ratti என்ற இயற்பெயருடன் இத்தாலியில் பிறந்த இத்திருத்தந்தை 1879ல் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். உரோம் நகரின் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் பயின்று மூன்று முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ள இவர், இத்தாலியின் பதுவா குருமடத்தில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 22 ஆண்டுகள் மிலான் அம்புரோசியன் நூலகப்பொறுப்பாளராகவும் சேவையாற்றிய இவரை வத்திக்கான் நூலகத்தின் இயக்குனராக நியமித்தார் பாப்பிறை. 1918ல் போலந்திற்கான திருப்பீடத்தூதராக அனுப்பப்பட்டார்.

பின்னர் 1921 ஜூன் மாதம் கர்தினாலாக உயர்த்தப்பட்டு, மிலான் பேராயராக நியமிக்கப்பட்டார். ஒருமாதம் தியானம்செய்து, பிரான்சின் லூர்து அன்னை திருத்தலத்திற்கு ஆகஸ்டில் சென்று திரும்பி, மிலானில் பொறுப்பேற்ற இவர், ஐந்தேமாதங்களில்  உரோம் நகருக்குச் செல்லவேண்டியதாகியது, திருத்தந்தை 15ஆம் பெனடிக்டின் அடக்கச் சடங்கில் பங்கேற்க. அங்கு கூடிய 53 கர்தினால்கள், கர்தினால் Achille Rattiயை 1922ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி திருத்தந்தையாகத் தேர்வு செய்ய அவரும் 11ஆம் பயஸ் என்ற பெயரை எடுத்துக் கொண்டார். 

நம் திருத்தந்தை 11ஆம் பயஸ் ஒரு செல்வ குடும்பத்தையோ, புகழ்மிக்க குடும்பத்தையோ சேர்ந்தவர் அல்ல. இவர் திருத்தந்தையாக பொறுபேற்றபோது, உலகின் 35 நாடுகள் திருப்பீடத்தின் சுயஆட்சியை அங்கீகரித்திருந்தன. ஆனால் இத்தாலி நாடு, வத்திக்கானை தனிநாடு அந்தஸ்த்துடன் அங்கீகரிக்கவில்லை. அதற்கு மாறாக, இத்தாலிய மக்கள் அனைவரும் திருத்தந்தையை அன்புசெய்து தலைவராக ஏற்றுக்கொண்டிருந்தனர். உரோம் நகரை இத்தாலியிடம் 1870ஆம் ஆண்டு இழந்ததிலிருந்து இடம்பெறாமலிருந்த பாரம்பரிய Urbi et Orbi ஆசீர், இவர் காலத்தில்தான் மீண்டும் தூய பேதுரு பெருங்கோவில் முன்முகப்பிலிருந்து இடம்பெறத் துவங்கியது. அதேவேளை, வத்திக்கானுடன் ஓர் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தி தீர்வு காணவேண்டிய அவசியம் அன்றைய இத்தாலிய ஆட்சியாளருக்கு ஏற்பட்டது.  இவ்வாறு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் வழி வத்திக்கான் என்ற தனிநாடு 1929ல் உருவாக்கப்பட்டது. நவீன உலகின் மிகச்சிறிய சுதந்திர நாடானது  திருத்தந்தையின் கீழான வத்திக்கான். ஆம். 108 ஏக்கர்களே அதன் நிலப்பகுதி. ஆனால் அவரின் தலைமையை ஏற்றுள்ளோரின் எண்ணிக்கையோ ஏறக்குறைய 130 கோடி.

தூய பேதுரு பெருங்கோவிலைச் சுற்றியிருக்கும் இந்நிலப்பகுதி தவிர, இலாத்தரன் பசிலிக்கா, தூய பவுல் பசிலிக்கா, விசுவாசப்பரப்புதல் கல்லூரி, திருத்தந்தையின் காஸ்தல் கண்டோல்போ கோடை விடுமுறை இல்லமும் இதில் இணைக்கப்பட்டன. இந்த வேளையில்தான் உலகின் பல நாடுகள் கொடுங்கோலாட்சியை நோக்கிச் சென்றன. இரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி போன்றவை அதில் முக்கியமானவை. நாத்யிசத்திற்கும் பாசிசத்திற்கும் எதிராக தன் குரலை உயர்த்தி எழுப்ப வேண்டிய நிலையில் திருத்தந்தை இருந்தார். இதற்கிடையில், முசோலினியும் திருஅவைக்கு எதிராக கிளம்பி, பின்னர் சிறிது காலத்தில் அடங்கினார். ஜெர்மனியிலோ, திருஅவை துன்பங்களை அனுபவிக்கத் துவங்கியது. திருஅவை சொத்துக்களை கைப்பற்றிய ஜெர்மன் அரசு, இயேசு சபையினரை நாட்டைவிட்டு வெளியேற்றியது. ஐரோப்பாவில் இப்படி பிரச்சனை நடந்துகொண்டிருக்க, 1924ல் மெக்சிகோ நூற்றுக்கணக்கான குருக்களைக் கைது செய்தது. பல குருக்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாயினர். 5000 அருள்பணியாளர்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என வரலாறு கூறுகிறது. இதனால் ஒரு சமயத்தில், மெக்சிகோவின் ஒரு கோடியே எழுபது இலட்சம் கத்தோலிக்கர்களிடையே 200 குருக்களே இருந்தனர்.

தான் பதவியேற்ற காலத்திலிருந்தே திருஅவையில் சமூகத்தொடர்பு சாதனங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திவந்த திருத்தந்தை 11ஆம் பயஸ், தன் நண்பர் குலியெல்மோ மார்க்கோனியின் உதவியுடன் வத்திக்கான் வானொலியை நிறுவினார். 1931ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் நாள் இவ்வானொலி துவக்கப்பட்டது. ஆம், இத்திருத்தந்தை திருஅவையை வழிநடத்த பொறுப்பேற்ற அதே நினைவுதினத்தில். அந்த வானொலிதான் இப்போது தன் 92ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிவருகிறது. இத்திருத்தந்தை 11ஆம் பயஸ்; 1936ல் 6 சீன ஆயர்களை உரோம் நகரில் திருநிலைப்படுத்தினார். உரோம் நகரில் எத்தியோப்பிய கல்லூரியைத் துவக்கினார். சைனா தலைநகரில் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். ஆப்பிரிக்காவில் பல குருமடங்கள் கட்டப்பட உதவினார். தன் ஆட்சிக்காலத்தில் 52 புதிய கர்தினால்களை உருவாக்கியதுடன், 37 சுற்றுமடல்களையும் எழுதியுள்ளார். கிறிஸ்தவ அகழ்வாராய்வுக்கான பாப்பிறை நிறுவனத்தை 1925ல் உருவாக்கியவரும் இவரே. 1936ல் பாப்பிறை அறிவியல் கழகத்தை உருவாக்கி அதில் அனைத்து நாட்டு அறிவியலாளார்களும் அங்கத்தினர்களாக வழிவகுத்தவரும் திருத்தந்தை 11ஆம் பயஸே. இவற்றிற்கெல்லாம் மேலாக, நாத்ஸியிசத்திற்கு எதிராக ஓங்கி குரல்கொடுத்தவர் இத்திருத்தந்தை.

நம் திருத்தந்தை 11ம் பயஸ், அதாவது நம் வானொலியின் நிறுவனர், 1939ம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் நாள் தன் 81ஆம் வயதில் காலமானார். திருத்தந்தை 11ம் பயஸ் லூர்து அன்னை மீது மிகுந்த பக்தியுடையவர் என்பது நாம் அறிந்ததே. அவர் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளும் அவ்வன்னையின் திருவிழாவை மையப்படுத்தி அமைந்திருப்பதும் ஆச்சரியமே. அவர் திருத்தந்தையாக பொறுப்பேற்றது லூர்து அன்னை திருவிழாவிற்கு மறுநாள். லூர்து அன்னை திருவிழாவிற்கு மறுநாள்தான் வத்திக்கான் வானொலியையும் துவக்கினார். வத்திக்கான் என்ற தனிநாடு இவர் கீழ் உருவாகியது அன்னையின் விழா அன்று. இதையெல்லாம்விட மேலாக இவர் இறந்ததும் அன்னையின் திருவிழாவிற்கு முந்தைய நாள்.

நேயர்களே! திருஅவையில் பல நற்செயல்களை ஆற்றி, துணிச்சலுடன் செயலாற்றிய பதினோராம் பயஸ்க்குப்பின், இரண்டாம் உலகப்போர் காலத்தில் பணியாற்றிய திருத்தந்தை 12ஆம் பயஸ் குறித்து வரும் வாரம் நோக்குவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 May 2023, 11:06