தேடுதல்

மும்பையின் வசை உயர் மறைமாவட்ட பேராயர் பெலிக்ஸ் அந்தோணி மச்சாடோ. மும்பையின் வசை உயர் மறைமாவட்ட பேராயர் பெலிக்ஸ் அந்தோணி மச்சாடோ. 

நாம் அனைவரும் ஒரே மக்கள், ஒரே குடும்பம் - பேராயர் மச்சாடோ

நாம் ஒன்றாக இருப்பதன் வழியாக செயல்களைச் செய்வதற்கான ஊக்கத்தையும் ஆற்றலையும் பெறுகின்றோம் - பேராயர் மச்சாடோ

மெரினா ராஜ் – வத்திக்கான்

உடன்பிறந்த உறவு என்பது பூமியில் உள்ள அனைத்து மக்களுக்கும் உள்ள ஒரு பொதுவான உணர்வு என்றும், இப்பூமியில் வாழும் நாம் அனைவரும் ஒரே மக்கள், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற நோக்கத்துடன் வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் பேராயர் மச்சாடோ.

மே 7 ஞாயிற்றுக்கிழமை முதல் 9 புதன்கிழமை வரை கூட்டுச் செயல்பாடு "ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்" என்ற தலைப்பில் (ஜி-20 Interfaith Forum)  புது டெல்லியில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய போது இவ்வாறு கூறியுள்ளார் CBCI யின் செயலரும் மும்பையின் வசை உயர் மறைமாவட்ட ஆயருமான பேராயர் பெலிக்ஸ் அந்தோணி மச்சாடோ.

பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடும் போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும் என்றும், பிறரைப் பற்றியும் அவர்களின் மத மரபுகள் பற்றியும் நமக்கு வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், சகோதரத்துவ உணர்வில் சந்திக்கும் போது, ஒருவரையொருவர் நம் சகோதர, சகோதரியாக உணர்ந்து, பரஸ்பர புரிதலில் இருந்து வரும் மகிழ்ச்சியைக் கண்டறிய ஆரம்பிக்கிறோம் என்றும் கூறியுள்ளார் பேராயர் மச்சாடோ.

சமூக வாழ்வில் ஒற்றுமையைத் தரும் கொள்கையாக விளங்கும் சகோதரத்துவத்தின் தாக்கங்கள் தனிப்பட்ட மற்றும் ஆன்மிக அளவில் நடைபெறும் என்று கூறியுள்ள பேராயர் மச்சாடோ அவர்கள், இந்த நம்பிக்கையின் வழியாக நாம் எதிர்கொள்ளும் எண்ணற்ற பெரிய பிரச்சனைகள், தனிமை, பாதுகாப்பின்மை, மோதல்கள், அச்சங்கள் ஆகியவை விலகி நம்பிக்கையின் கதிர்களைப் பார்க்க முடியும் என்றும் எடுத்துரைத்தார்.

நாம் ஒன்றாக இருப்பதன் வழியாக செயல்களைச் செய்வதற்கான ஊக்கத்தையும் ஆற்றலையும் பெறுகின்றோம் என்று கூறியுள்ள பேராயர் மச்சாடோ அவர்கள், இருத்தலியல் எதார்த்தமும் பன்முகத்தன்மையும் கொண்ட நமது இந்திய நாட்டைப் போல பன்முகத்தன்மையை உள்ளடக்கிய ஒற்றுமை என்ற கொள்கையாக இக்கூட்டச் செயல்பாடுகள் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நாம் பகிர்ந்து கொள்ளும் விடயங்கள் பலவாக இருந்தாலும், நம்பிக்கைதான் நம்மை ஒன்றிணைக்கின்றது என்று எடுத்துரைத்துள்ள பேராயர் மச்சாடோ அவர்கள், நமது நம்பிக்கைகள் ஒருவரையொருவர் எதிர்ப்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்களாகிய நாம் பூமியின் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கிறோம் என்று சுட்டிக்காட்டியுள்ள பேராயர் மச்சாடோ அவர்கள், நமது மதச் சமூகங்களுக்குள் ஏழைகள் ஒரு முக்கிய இடத்தைப் பெறத் தகுதியானவர்கள் என்பதால், ஏழைகளின் கவலைகளுக்கு நம்மை அர்ப்பணிக்காமல் ஒரு பூமியின் மீதான அக்கறையை நம்மால் வெளிப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.

சுற்றுச்சூழலைப் பற்றிய விவாதங்களில், ஏழைகள் மற்றும் பூமியின் அழுகையைக் கேட்கும் வகையில், சமூக நீதியின் கேள்விகளை ஒருங்கிணைக்கும் சமூக அணுகுமுறையிலிருந்து சூழலியல் அணுகுமுறையை நாம் பிரிக்க முடியாது என்றும், சமூகம், சூழலியல் ஆகியவை சமகால வாழ்க்கையின் பிரிக்கமுடியாத வகையில் பின்னிப்பிணைந்த அம்சங்களாகும் என்றும் வலியுறுத்தியுள்ளார் பேராயர் மச்சாடோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 May 2023, 14:31