தேடுதல்

ஆலயத் திறப்புவிழா வழிபாட்டில் பங்குபெறும் இறைமக்கள் ஆலயத் திறப்புவிழா வழிபாட்டில் பங்குபெறும் இறைமக்கள்  

ஒடிசாவில் அன்னை மரியாவுக்குப் புதிய ஆலயம்!

ஒடிசாவின் சுகதபாடியில் நிகழ்ந்த புதிய ஆலயத் திறப்பு விழாவிலும் அதனைத் தொடர்ந்த வழிபாட்டிலும் 5,000-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்குகொண்டு சிறப்பித்தனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கடந்த காலத்தில் நிகழ்ந்த பயங்கரங்களின் பின்னணியில் கட்டப்பட்ட புனித மரியன்னை ஆலயம் சுகதபாடியின் உள்ளூர் இறைச்சமூகத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியின் ஆதாரமாகச் செயல்படுகிறது என்று கூறினார் கட்டாக்-புவனேஸ்வர் மறைமாவட்டத்தின் முதன்மைகுரு பேரரருள்திரு பிரதோஷ் சந்திரன் நாயக்

இம்மறைமாவட்டத்தில் புனித பாத்திமா அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இப்புதிய ஆலயம் திறக்கப்பட்டதை இந்தியக் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர் என்றும், 2008-ஆம் ஆண்டு ஒடிசாவின் கந்தமால் பகுதியில் ஏற்பட்ட கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலவரத்தின்போது பலர் இங்குதான் பாதுகாப்புத் தேடி வந்தனர் என்றும் கூறினார் பேரரருள்திரு சந்திரன் நாயக்.

அன்னை மரியா, இந்துமத அடிப்படைவாதிகள் மற்றும் துன்புறுத்துபவர்களிடம் இருந்து தங்களைப்  பாதுகாத்ததால் வன்முறையின் உச்சக்கட்டத்தில் தாங்கள் அச்சமின்றி  இருந்ததாக அங்குக் குடியிருக்கும் கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர். மேலும் அன்னை மரியா இந்துமத அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தல்களை விட வலிமையானவர் என்று கூறினார் உள்ளூர் கத்தோலிக்கரான பிஜய் மல்லிக்.

இங்கு இறைவேண்டல் செய்வதன் வழியாக ஆன்மாவிற்கு அமைதியையும், ஒளியையும், ஆறுதலையும் மற்றும் வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்லும் வழியையும் காண்கின்றோம் என்றும், கடவுள் ஒருவரே, ஆனால், அவருடைய வழிகள் பல என்றும், எங்களுக்குள் மதவேறுபாடுகள் இருப்பினும் நாங்கள் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கின்றோம் என்றும் கூறினார் இந்த ஆலயக் கட்டுமானப் பணியில் உதவிய தன்னார்வலரான ஜரனா பிரதான்.

இந்தப் புதிய ஆலயத் திறப்பு விழாவிலும் அதனைத் தொடர்ந்த வழிபாட்டிலும் 5,000-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர் பங்குகொண்டு சிறப்பித்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 May 2023, 12:49