நேர்காணல் - அன்னையின் வணக்க மாத வரலாறு - பகுதி 2
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஆகட்டும் என்ற வார்த்தையினால் ஆதவனாம் இயேசுவை ஈன்றவர் அன்னை மரியா. அன்றாட வாழ்வில் உடனிருந்து நம்மையும் நாம் வாழ்கின்ற அகிலத்தையும் காப்பவர் அவர். தன்னை நோக்கி அடைக்கலம் நாடி வருவோர்க்கு ஆறுதலாகத் திகழ்பவர் அன்னை மரியா, வீரத்தின் விளைநிலமாக தலை சிறந்த தலைவியாக, விண்ணக மண்ணக அரசியாக புகழ்பெற்று விளங்கும் அன்னை மரியாவின் வணக்க மாத வரலாறு பற்றி அறிந்து கொண்டிருக்கும் நாம் அதன் தொடர்ச்சியை இன்றைய நேர்காணலில் காணலாம்.
அன்னையின் வணக்கமாத வரலாறு பற்றிய இரண்டாம் பகுதியில் நம்முடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்பவர் மரியின் ஊழியர் சபையைச் சார்ந்த அருள்பணி சூசை மணி.
அன்னைக்கு சிறப்பு வணக்கம் செலுத்தி செபமாலை செபிப்பதை வலியுறுத்தும் இம்மே மாதத்தில் மட்டுமன்று வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செபமாலை செபிப்பவர்களுக்கு அன்னை மரியா 15 விதமான வாக்குறுதிகளைப் பரிசாக அளிக்கின்றார்.
1. செபமாலை செபிப்பவர்கள் எனது மக்களாக, எனது ஒரே மகன் இயேசுவின் சகோதர சகோதரிகளாயிருப்பர்.
2. செபமாலை செபித்து அதன் வழியாக கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வர்.
3. செபமாலையின் மீது பக்தியுள்ள ஆன்மாக்களை உத்தரிக்கிற நிலையில் வேதனையினின்று மீட்பேன்.
4. செபமாலையை உண்மையுடன் செபிப்பவர் இவ்வுலக வாழ்விலும், இறக்கின்ற வேளையிலும் இறைவனின் ஒளியையும், அவரது திருவருளின் பெருக்கினையும் அடைவர். இறக்கும் வேளையில் விண்ணகத்தில் தூயோர் துய்க்கும் பேரின்பத்திலும் பங்கு பெறுவர்.
5. மறை உண்மைகளை சிந்தித்துப் பக்திப் பற்றுடன் செபமாலை செபிப்பவர் அகால மரணத்திற்கு ஆளாக மாட்டார். இறைவன் அவரைத் தண்டிக்க மாட்டார். அருள் நிலையில் வாழ்ந்து விண்ணக வாழ்விற்குத் தகுதி பெறுவார்.
6. செபமாலை செபிப்பவர் தூய வாழ்விலும், நற்செயல்களிலும் வளர்வர். செபமாலை உலகப் பற்றுதல்களிலிருந்தும், அதன் நிலையற்ற பொருள்களிலிருந்தும் ஆன்மாவை விடுவித்து விண்ணகத்தை நோக்கி அவரை உயர்த்துகிறது.
7. செபமாலை செபிப்போர்க்குச் சிறப்பான பாதுகாப்பையும், மாபெரும் அருள் வரங்களையும் வாக்களிக்கிறார் அன்னை மரியா.
8. செபமாலை நரகத்திற்கு எதிரான கவசம். இது தீமைகளை அழிக்கிறது.
9. செபமாலையின் மீது உண்மையான பக்தி கொண்டிருப்பவர் திருஅவையின் திருவருள்சாதனங்களைப் பெறாமல் சாகமாட்டார்.
10. செபமாலை பக்தியைப் பரப்புகிறவர்கள் தங்கள் தேவைகளில் அன்னை மரியாவிடமிருந்து உதவி பெறுவர்.
11. செபமாலை பக்தியைப் பரப்புகிறவர்களுக்கு அவர்கள் வாழ்நாளிலும், இறக்கும் வேளையிலும் விண்ணக நீதிமன்றம் முழுவதும் அவர்களுக்காக பரிந்து பேச அன்னை மரியா இறைமகனிடமிருந்து அனுமதி பெற்றுள்ளார்.
12. செபமாலையை விடாமல் தொடர்ந்து செபிப்பவர்கள் சில சிறப்பு வரங்களை அன்னை மரியாவிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள்.
13. செபமாலையின் வழியாக தங்களை அன்னை மரியாவிடம் ஒப்படைக்கிறவர்கள் அழிவுறமாட்டார்கள்.
14. செபமாலையின் உண்மை மக்களாய் இருப்பவர்கள் விண்ணகத்தில் மிகுந்த மகிமை அடைவார்கள்.
15. செபமாலை மேல் பக்தி கொண்டிருப்பது விண்ணகம் செல்வதற்கான ஒரு பெரிய உறுதிப்பாடாகும்.
அன்னைக்கு சிறப்பு வணக்கம் செலுத்தும் நாம் செபமாலையைப் பக்தியுள்ள விதத்தில் உருக்கமாக செபிப்போம் அன்னை நமக்கு அளிக்கு வாக்குறுதிகளைப் பரிசாகப் பெறுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்