நேர்காணல் – நலம் தரும் சகாய அன்னை
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஓரிடத்தில் பிறந்து வேறொரு இடத்தில் வளர்ந்து மலர்ந்து மணம் பரப்பும் மலர். வாடிய முகங்களும் வண்ண மலர் கண்டால் மகிழ்ந்து செழிப்பதுண்டு. மலரும் மங்கையரும் ஒன்று என்று ஒப்பிட்டு கவிதைகள் பல புனைவர் கவிஞர். விதையாய் விழுந்து பூவாய் கனியாய், மணமாய், விதையாய் மாறி மீண்டும் விருட்சமாய் தன்னை புதுப்பிக்கும் திறன் மலருக்கு உண்டு. அதேபோல குழந்தையாய் உடன்பிறந்தவளாய், அன்னையாய் தன்னை பல நிலைகளில் வடித்து சிறப்பு பெறுபவள் பெண். பெண்களுக்குள் பேறுபெற்றவராய், புகழ்பேற்று விளங்கும் அன்னை பல்வேறு பெயர்களில் போற்றிப் புகழப்படுகின்றார். அன்னைக்கு சிறப்பு வணக்கம் செலுத்தும் இம்மேமாதத்தில் சதா சகாய அன்னை என்றழைக்கப்படும் அன்னையின் பக்தி உருவான வரலாறு பற்றி இன்றைய நேர்காணலில் நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி பிரான்சிஸ்.
இரக்கத்தின் மாதா சபையை சார்ந்த அருள்பணி பிரான்சிஸ் அவர்கள், தர்மபுரி மறைமாவட்டத்தை சார்ந்தவர். திருஅவை சட்டங்களில் பட்டம் பெற்ற இவர் இந்தியா மற்றும் இத்தாலியில் சிறைப்பணியினையும் மிகச்சிறப்பாக ஆற்றியவர். தற்போது இத்தாலியின் உரோமில் உள்ள சாந்தா மரியா தெல்லே மெர்சேதே என்ற பங்குத்தளத்தில் உதவிப் பங்குத்தந்தையாகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.
திருச்சபை ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு விதமான நெருக்கடிகளையும் சவால்களையும் சந்தித்தது என்பது யாவரும் அறிந்த ஒரு விஷயம். திருத்தந்தை ஏழாம் பத்திநாதர் திருச்சபையின் தலைவராக, திருத்தந்தையாக இருந்த சமயத்தில் திருச்சபை புதுவிதமான பிரச்சனை ஒன்றைச் சந்தித்தது. அது என்னவெனில் மாவீரன் (?) நெப்போலியன் திருத்தந்தை ஏழாம் பத்திநாதரைப் பிடித்து சவானா என்ற இடத்தில் சிறை வைத்தான். 1808 ஆம் ஆண்டிலிருந்து 1814 ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய 6 ஆம் ஆண்டுகள் சிறையில் இருந்த திருத்தந்தை பலவிதமான சித்ரவதைகளை அனுபவித்தார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் 1814 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 17 ஆம் நாள் திருத்தந்தை ஏழாம் பத்திநாதர் விடுதலையாகி உரோமை நகருக்கு வந்தார். அவர் உரோமை நகருக்கு வரும் வழியில் இருந்த அனைத்து அன்னையின் ஆலயங்களுக்கும் சென்று தான் விடுதலையானதற்கு அன்னைக்கு நன்றி செலுத்தினார். மட்டுமல்லாமல் இதன் பொருட்டு செப்டம்பர் 18 ஆம் வியாகுல அன்னையின் விழாவைக் கொண்டாடப் பணித்தார். இதற்கிடையில் திருத்தந்தை அவர்களை சிறைப்பிடித்து வைத்து பலவிதங்களில் அவரை சித்ரவதை செய்த நெப்போலியன், வாட்டர்லூப் என்ற இடத்தில் வீழ்ச்சி அடைத்தான்.
இதைத் தொடர்ந்து 1815 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் நாளில் ‘கிறிஸ்தவர்களின் சகாய அன்னை’ என்று இந்த விழாவை திருத்தந்தை அவர்கள் உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார். திருத்தந்தையைத் தொடர்ந்து தூய தொன் போஸ்கோ கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பக்தி முயற்சி பல இடங்களிலும் பரவுவதற்குக் காரணமாக இருந்தார். அது மட்டுமல்லாமல், அந்த அன்னையின் பேரில் அருட்சகோதரிகளுக்கு என்று ஒரு துறவற சபையையும் ஏற்படுத்தினார். இவ்வாறு கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பக்தி முயற்சி எங்கும் பரவியது. (இணையதள உதவி)
மானுடம் படைத்த இறைவி, பாருலகம் கண்ட புதுமை பூ, ஆற்றலின் பிறப்பிடம், சரித்திரத்தை மாற்றிய புதிய ஏவாள், இறைமகனை ஈன்றெடுத்த இனிமை, வாழ்த்தட்டும் வானுலகம் அன்னையின் புகழ் வியந்து, வளையட்டும் வானவில் அன்னையின் வண்ண எழில் கண்டு, வணங்கட்டும் வானம் அன்னையின் வியத்தகு வல்லமை பார்த்து. போற்றுவோம் நாமும் அன்னையின் பெருமை உணர்ந்து. அன்னையின் பக்தியை அகிலம் முழுதும் பரப்புவோம் அவர்புகழ்பாடி நம் வாழ்வை உயர்த்துவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்