தேடுதல்

பாதிக்கப்பட்டுள்ள மக்கள்  பாதிக்கப்பட்டுள்ள மக்கள்   (AFP or licensors)

மணிப்பூர் இனக்கலவரத்தால் 45,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்

குறைந்தபட்சம் 45,000 மக்கள் இடம்பெயர்ந்து சென்று தற்போது அரசால் நடத்தப்படும் புலம்பெயர்ந்தோர் முகாம்களில் வாழ்கின்றனர் என்று அறிக்கைகள் காட்டுகின்றன : பேராயர் Dominic Lumon.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அச்சம், நிச்சயமற்றத்தன்மை, நம்பிக்கையின்மை மற்றும் விரக்தியுணர்வு இன்னும் நீடிக்கிறது என்று கூறியுள்ளார் இம்பால் உயர் மறைமாவட்டத்தின் பேராயர் Dominic Lumon.

இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏற்பட்ட இனக்கலவரங்களில் ஏறக்குறைய 60 பேர் உயிரிழந்தும், 35,000 பேர் தங்களின் வீடுகளை இழந்துள்ள வேளை, இவ்வாறு கவலை தெரிவித்துள்ள பேராயர் Lumon அவர்கள், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரண்டு சமூகங்களுக்கிடையே வெடித்த இந்த இனக்கலவரமானது மணிப்பூரின் அனைத்து மக்களையும் எந்த சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் பாதித்துள்ளது என்று தனது வேதனையை மேலும் வெளிப்படுத்தியுள்ளார் பேராயர் Lumon.

இக்கலவரத்தில் குறைந்தபட்சம் 45,000 மக்கள் இடம்பெயர்ந்து சென்று தற்போது அரசால் நடத்தப்படும் புலம்பெயர்ந்தோர் முகாம்களில் வாழ்கின்றனர் என்று அறிக்கைகள் காட்டுகின்றன என்று குறிப்பிட்ட பேராயர் Lumon அவர்கள்,  இந்தத் தகவல்கள் தன்னிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில் அமைந்ததாகவும், உண்மையான எண்ணிக்கை  இதைவிட இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இம்பால் உயர்மறைமாவட்டத்தின் முதன்மைகுரு பேரருள்திரு Varghese Velikakam, இந்தியாவின் அனைத்து ஆயர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், உள்ளூர் காவல்துறையினர் தாக்குதல்களைத் தடுக்க தவறிவிட்டனர் என்றும், தாக்குதல் தொடங்கிய பிறகும் கூட பாதிக்கப்படக்கூடிய இடங்கள் ஏன் பாதுகாக்கப்படாமல் விடப்பட்டன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தத் துயரமான தருணத்தில் தலத்திருஅவை மிகவும் கவனமாகவும் விழிப்பாகவும் இருந்து முடிவுகளை எடுக்கவேண்டுமெனவும், நடுநிலையைப் பேணுவது மற்றும் அமைதி மற்றும் ஒற்றுமையை வளர்ப்பது அதன் நோக்கமாக இருக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 May 2023, 12:58