தடம் தந்த தகைமை - மாமியாரிடம் மருமகள் காட்டிய அன்பு
மெரினா ராஜ் - வத்திக்கான்
நகோமி அவர்களிடம், “உங்கள் தாய் வீட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள். இறந்தவர்களுக்கும் எனக்கும் நீங்கள் பரிவு காட்டியதுபோல், ஆண்டவரும் உங்களுக்குப் பரிவு காட்டுவாராக! 9நீங்கள் இருவரும் மீண்டும் மணம் செய்துகொண்டு நலமுடன் இல்வாழ்க்கை நடத்த ஆண்டவர் அருள்புரிவாராக!” என்று சொல்லி அவர்களை அணைத்து முத்தமிட்டார். அவர்களோ கதறி அழுது, “இல்லையம்மா, நாங்கள் உம்மோடு வந்து, உம்முடைய இனத்தவரிடையே இருப்போம் என்றார்கள். அதற்கு நகோமி, “மக்களே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்; என்னோடு வருவதால் உங்களுக்கு என்ன பயன்? நீங்கள் மணந்து கொள்ள மீண்டும் மைந்தரைப் பெற்றுத்தர இனி என்னால் இயலுமா? மக்களே, திரும்பிச் செல்லுங்கள். எனக்கோ வயதாகிவிட்டது. கணவரோடு கூடி வாழும் பருவமும் கடந்துவிட்டது. அவ்வாறன்றி, பிள்ளை பிறக்கும் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு எனச் சொல்லி, இன்றிரவே நான் கணவரோடு கூடி மைந்தரைப் பெற்றெடுத்தாலும் அவர்கள் பெரியவர்களாகும் வரையில் நீங்கள் வேறு யாரையும் மணம் செய்து கொள்ளாமல் அவர்களுக்காகக் காத்திருப்பீர்களா? மக்களே, வேண்டாம். ஆண்டவர் என்னைப் பெருந்துன்பத்தில் ஆழ்த்தியுள்ளார். என்னால் உங்களுக்கு நேர்ந்தவற்றிற்காக நான் மிகவும் வருந்துகிறேன்” என்று சொன்னார்.
அதைக் கேட்டு அவர்கள் மீண்டும் கதறி அழுதார்கள். பிறகு ஓர்பா தம் மாமியாருக்கு முத்தம் கொடுத்துவிட்டுத் திரும்பிச் சென்றார். ஆனால் ரூத்தோ பிரிந்துபோக மறுத்துவிட்டார். நகோமி அவரிடம், “இதோ பார்! உன் ஓரகத்தி தன் இனத்தவரையும் தன் தெய்வங்களையும் நோக்கித் திரும்பிப் போய்விட்டாள். அவளைப் போல் நீயும் திரும்பிப்போ” என்றார். அதற்கு ரூத்து, “உம்மோடு வராமல் உம்மை விட்டுப் பிரிந்து போகும்படி என்னை நீர் வற்புறுத்த வேண்டாம். நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன்; உமது இல்லமே எனது இல்லம்; உம்முடைய இனமே எனது இனம்; உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம். நீர் எங்கே இறப்பீரோ அங்கேயே நானும் இறப்பேன்; அங்கேதான் என் கல்லைறையும் இருக்கும்; சாவிலும் உம்மைவிட்டு நான் பிரியேன்; அப்படிப் பிரிந்தால் ஆண்டவர் என்னைத் தண்டிப்பாராக” என்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்