தடம் தந்த தகைமை – உடன்படிக்கைப் பலகையை உடைத்தெறிந்த மோசே
மெரினா ராஜ் – வத்திக்கான்
மோசே சீனாய் மலையிலிருந்து இறங்கி வந்தார். முன்பின் இருபுறமும் எழுதப்பட்ட உடன்படிக்கைப் பலகைகள் இரண்டும் அவர் கையில் இருந்தன. அப்பலகைகள் கடவுளால் செய்யப்பட்டவை. பலகைகள் மேல் பொறிக்கப்பட்டிருந்த எழுத்தும் கடவுள் எழுதியதே. அந்நேரத்தில் மக்கள் எழுப்பிய கூச்சலைக் கேட்ட யோசுவா மோசேயை நோக்கி, “இது பாளையத்திலிருந்து எழும் போர்முழக்கம்” என்றார். அதற்கு மோசே, “இது வெற்றி முழக்கமோ தோல்விக் குரலோ அன்று. பாட்டொலிதான் எனக்குக் கேட்கிறது” என்றார். பாளையத்தை அவர் நெருங்கிவந்தபோது கன்றுக் குட்டியையும் நடனங்களையும் கண்டார். மோசேக்குச் சினம் மூண்டது. அவர் தம் கையிலிருந்த பலகைகளை மலையடிவாரத்தில் வீசியெறிந்து உடைத்துப் போட்டார். அவர்கள் செய்து வைத்திருந்த கன்றுக்குட்டியை எடுத்து நெருப்பில் சுட்டெரித்து மிருதுவான பொடியாகு மட்டும் அதை இடித்துத் தண்ணீரில் தூவி, இஸ்ரயேல் மக்களைக் குடிக்கச் செய்தார்.
பின்னர் மோசே ஆரோனை நோக்கி, “இம்மக்கள் உமக்கு என்ன செய்தார்கள்? இவர்கள்மேல் பெரும் பாவம் வந்துசேரச் செய்து விட்டீரே!” என்று கேட்டார். அதற்கு ஆரோன், “என் தலைவராகிய நீர் சினம் கொள்ள வேண்டாம். இம்மக்கள் பொல்லாதவர்கள் என்பது உமக்குத் தெரியுமே! அவர்கள் என்னை நோக்கி, ‘எங்களுக்கு வழிகாட்டும் தெய்வங்களைச் செய்துகொடும். எங்களை எகிப்து நாட்டினின்று நடத்தி வந்த அந்த ஆள் மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை’ என்றனர். நானும் அவர்களிடம் ‘பொன் அணிந்திருப்பவர்கள் கழற்றித் தாருங்கள்’ என்றேன். அவர்களும் என்னிடம் தந்தனர். நான் அதனை நெருப்பில்போட, இந்தக் கன்றுக்குட்டி வெளிப்பட்டது” என்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்