தேடுதல்

இஸ்ரயேல் மக்கள் இஸ்ரயேல் மக்கள்   (AFP or licensors)

தடம் தந்த தகைமை – எரி பலியாக்க வாக்குக் கொடுத்தவர்

அர்னோனிலிருந்து யாபோக்குவரை, பாலை நிலத்திலிருந்து யோர்தான்வரை, இருந்த எமோரியரின் நாடு முழுவதையும் இஸ்ரயேலர் உரிமையாக்கிக் கொண்டனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இப்தா கிலயாதின் பெரியோர்களுடன் புறப்பட்டுச் சென்றார். மக்கள் அவரைத் தங்கள் தலைவராகவும் போர்த் தளபதியாகவும் ஏற்றுக்கொண்டனர். இப்தா அம்மோனிய மன்னரிடம் தூதரை அனுப்பி, “எனக்கும் உமக்கும் இடையே என்ன வழக்கு? நீர் ஏன் எனக்கெதிராக வந்து என் நிலத்தில் போரிடுகின்றீர்?” என்று கேட்டார். அம்மோனியரின் மன்னன் இப்தாவின் தூதரிடம், “இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியே வருகையில் அர்னோனிலிருந்து யாபோக்குவரை, யோர்தான் வரையிலும் என் நிலத்தைப் பறித்துக் கொண்டனர். இப்பொழுது அவற்றைச் சமாதானமாகத் திருப்பிக் கொடும்” என்றான். இப்தா தூதரை மீண்டும் அம்மோனிய மன்னனிடம் அனுப்பி அறிவித்தது. “இப்தா கூறுவது இதுவே: இஸ்ரயேலர் மோவாபியரின் நிலத்தையோ, அம்மோனியரின் நிலத்தையோ, பறித்துக்கொள்ளவில்லை. ஏனெனில், அவர்கள் எகிப்திலிருந்து வெளியேறி வருகையில் இஸ்ரயேலர் பாலைநிலத்தில் நடந்து செங்கடலுக்கும் பின்னர் காதேசுக்கும் வந்து தங்கினர். மோவாபின் எல்லைக்குள் அவர்கள் கால்வைக்கவே இல்லை. இஸ்ரயேலர் எஸ்போனில் ஆட்சி செய்த எமோரிய மன்னன் சீகோனிடம் தூதரை அனுப்பினர். இஸ்ரயேலர் அவனிடம், “உம் நாட்டைக் கடந்து எம் இடத்தை அடைய அனுமதி தாரும்” என்று வேண்டினர்.

ஆனால், சீகோன் இஸ்ரயேலரை நம்பாததால் அவர்களைத் தன் எல்லைக்குள் விடாது, தன் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, யாகசிவில் பாளையம் இறங்கி இஸ்ரயேல் மக்களுடன் போர்புரிந்தான். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர், சீகோனையும் அவன் மக்கள் அனைவரையும் இஸ்ரயேலரின் கையில் ஒப்புவித்தார். இஸ்ரயேலர் எமோரியரை வென்று அவர்கள் வாழ்ந்த அந்த நாட்டை உரிமையாக்கிக் கொண்டனர். அர்னோனிலிருந்து யாபோக்குவரை, பாலை நிலத்திலிருந்து யோர்தான்வரை, இருந்த எமோரியரின் நாடு முழுவதையும் இஸ்ரயேலர் உரிமையாக்கிக் கொண்டனர்.

ஆண்டவரின் ஆவி இப்தாவுக்கு அருளப்பட்டது. இப்தா ஆண்டவருக்கு ஒரு நேர்ச்சை செய்தார். “நீர் அம்மோனிய மக்களை என் கையில் ஒப்புவித்தால், அவர்களிடமிருந்து நான் வெற்றியோடு திரும்பும் பொழுது யார் என்னைச் சந்திக்க என் வீட்டு வாயிலிலிருந்து புறப்பட்டு வருகின்றாரோ, அவர் ஆண்டவருக்கு உரியவர். அவரைக் கொண்டு வந்து எரி பலியாக்குவேன்.” இப்தா அம்மோனியருடன் போரிடச் சென்றார். ஆண்டவர் அவர்களை அவர் கையில் ஒப்புவித்தார். இஸ்ரயேல் முன்னிலையில் அம்மோனியர் அடக்கப்பட்டனர்.

இப்தா மிஸ்பாவிலிருந்து தம் வீடு திரும்பினார். இதோ! அவர் மகள் மேளதாளத்துடன் நடனமாடிக் கொண்டு அவரைச் சந்திக்கப் புறப்பட்டு வந்தாள். அவள் அவருடைய ஒரே மகள். அவருக்கு வேறு மகனோ மகளோ இல்லை. அவர் அவளைப் பார்த்தார்; தம் உடைகளைக் கிழித்துக் கொண்டு, “ஐயோ! என் மகளே! நீ எனக்கு மோசம் செய்துவிட்டாயே! நீ என்னைத் துன்பத்திற்கு ஆளாக்கி விட்டாயே! நான் ஆண்டவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டேனே! அதை நான் மாற்ற முடியாதே!” என்றார்.

அவள் அவரிடம், “அப்பா, நீங்கள் ஆண்டவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டீர்களென்றால் உங்கள் வாக்கின்படியே எனக்குச் செய்யுங்கள். ஏனெனில், ஆண்டவர் உங்கள் எதிரிகளான அம்மோனியரை உங்களுக்காகப் பழிவாங்கிவிட்டார்” என்றாள்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 May 2023, 09:14