தேடுதல்

பாகாலை வழிபடும் இஸ்ரயேலர் பாகாலை வழிபடும் இஸ்ரயேலர்  

தடம் தந்த தகைமை – இஸ்ராயேலை கடவுள் கைவிடல்

நீங்கள் என்னைவிட்டு விலகி வேற்றுத் தெய்வங்களை வணங்கினீர்கள். ஆகவே, நான் உங்களை மீண்டும் விடுவிக்கமாட்டேன், என்றார் கடவுள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதை இஸ்ரயேல் மக்கள் மீண்டும் செய்யத் தொடங்கினர். பாகால்களுக்கும், அஸ்தரோத்துகளுக்கும், சிரியாவின் தெய்வங்களுக்கும் சீதோனின் தெய்வங்களுக்கும், மோவாப்பின் தெய்வங்களுக்கும், அம்மோனிய மக்களின் தெய்வங்களுக்கும், பெலிஸ்தியரின் தெய்வங்களுக்கும் ஊழியம் செய்தனர். ஆண்டவரைக் கைவிட்டனர். அவருக்கு ஊழியம் புரியவில்லை. இஸ்ரயேலுக்கு எதிராக ஆண்டவரின் சினம் மூண்டது. அவர் அவர்களைப் பெலிஸ்தியரின் கையிலும் அம்மோனியரின் கையிலும் ஒப்படைத்தார். அவர்கள் அந்த ஆண்டு இஸ்ரயேல் மக்களை ஒடுக்கித் துன்புறுத்தினர். யோர்தானுக்கு அப்பால் கிலயாதில் இருந்த அம்மோனியர் நிலத்தில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்களைப் பதினெட்டு ஆண்டுகள் துன்புறுத்தினர். யூதாவுடனும், பென்யமினுடனும், எப்ராயிம் வீட்டுடனும் போரிட அம்மோனியர் யோர்தானைக் கடந்து வந்தனர். இஸ்ரயேலர் மிகவும் அல்லலுற்றனர்.

இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம், “உமக்கெதிராகப் பாவம் செய்தோம். ஏனெனில், நாங்கள் எங்கள் கடவுளாகிய உம்மைவிட்டு விலகிப் பாகாலுக்கு ஊழியம் புரிந்தோம்” என்று கூறிக் கூக்குரலிட்டனர். ஆண்டவர் இஸ்ரயேல் மக்களிடம், எகிப்தியரிடமிருந்தும் எமோரியரிடமிருந்தும் அம்மோன் மக்களிடமிருந்தும் பெலிஸ்தியரிடமிருந்தும் நான் உங்களை விடுவிக்கவில்லையா? சீதோனியரும், அமலேக்கியரும், மாகோனியரும் உங்களை நசுக்கிய பொழுது நீங்கள் என்னை நோக்கிக் கூக்குரலிட்டீர்கள். நான் உங்களை அவர்கள் கையிலிருந்து விடுவித்தேன். ஆனால், நீங்கள் என்னைவிட்டு விலகி வேற்றுத் தெய்வங்களை வணங்கினீர்கள். ஆகவே, நான் உங்களை மீண்டும் விடுவிக்கமாட்டேன். நீங்கள் தேர்ந்தெடுத்த தெய்வங்களிடமே சென்று கூக்குரலிடுங்கள். அவர்கள் உங்கள் துன்ப வேளையில் உங்களை விடுவிக்கட்டும்” என்றார். இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம்,“ நாங்கள் பாவம் செய்தோம். உம் பார்வையில் நல்லதெனப் பட்டதை எங்களுக்குச் செய்யும். இன்று எங்களை விடுவித்தருளும்” என்று வேண்டினர். அவர்கள் தங்களிடையே இருந்த வேற்றுத் தெய்வங்களை அகற்றி ஆண்டவருக்கு ஊழியம் புரிந்தனர். எனவே, அவர் இஸ்ரயேல் மக்களின் துன்பம் குறித்து வருத்தமுற்றார். அம்மோனியர் ஒன்றுதிரண்டு கிலயாதில் பாளையம் இறங்கினர். இஸ்ரயேல் மக்கள் ஒன்று கூடி மிஸ்பாவில் பாளையம் இறங்கினர். மக்களும் கிலாயத்தின் தலைவர்களும் ஒவ்வொருவரும் தம் நண்பரிடம், “அம்மோனியருக்கு எதிராக யார் போரிடத் தொடங்குகின்றானோ, அவனே கிலாயதுவாழ் மக்கள் அனைவருக்கும் தலைவனாக இருப்பான்” என்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 May 2023, 12:31