தேடுதல்

எருசலேம் மேற்குச் சுவரில் இன்று செபிக்கும் யூதர் எருசலேம் மேற்குச் சுவரில் இன்று செபிக்கும் யூதர் 

தடம் தந்த தகைமை - ஆண்டவர் கிதியோனுக்குத் தந்த பொறுப்பு

பாகாலின் பலிபீடத்தை இடித்தவனைத் தண்டிக்க விரும்பிய மக்களை நோக்கி யோவாசு, “பாகால் கடவுளாக இருந்தால், தன் பலி பீடத்தைத் தகர்த்தவனோடு, அவனே போராடிக் கொள்ளட்டும்” என்றார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அவ்விரவில் ஆண்டவர் கிதியோனிடம், “உன் தந்தைக்குச் சொந்தமான ஓர் இளங்காளையையும் ஏழு வயதுள்ள மற்றொரு காளைளையும் தேர்ந்தெடுத்துக் கொள். உன் தந்தைக்குச் சொந்தமான பாகாலின் பீடத்தை இடித்து எறி; அதை அடுத்துள்ள அசேராக் கம்பத்தை வெட்டி வீழ்த்து! உன் கடவுளாகிய ஆண்டவருக்கு இக்கோட்டையின் உச்சியில் முறையாக ஒரு பலிபீடம் கட்டு. இரண்டாவது காளையைக் கொண்டுவந்து நீ வெட்டிய அசேராக் கம்பத்தை விறகாக்கி எரி பலியாகச் செலுத்து” என்றார். கிதியோன் தம் வேலையாள்களில் பத்துப்பேரைக் கூட்டிக் கொண்டு, தமக்கு ஆண்டவர் இட்ட கட்டளையை நிறைவேற்றினார். அவர் தம் தந்தை வீட்டாருக்கும் நகர மக்களுக்கும் அஞ்சி அதைப் பகலில் செய்யாமல் இரவில் செய்து முடித்தார்.

நகர மக்கள் காலையில் துயிலெழுந்தனர். இதோ! பாகாலின் பலிபீடம் இடித்தெறியப்பட்டிருந்தது. அதை அடுத்திருந்த அசேராக் கம்பம் வெட்டி வீழ்த்தப்பட்டிருந்தது. அங்கே எழுப்பப்பட்ட பலி பீடத்தின்மீது இரண்டாவது காளை எரி பலியாக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வரும் தமக்கு அடுத்தவரிடம், “இதைச் செய்தவர் யார்?” என்று வினவினர். அவர்கள் தேடி விசாரித்து, ‘இதைச் செய்தவர் யோவாசின் மகன் கிதியோன்’ என்றனர். நகர மக்கள் யோவாசிடம், “உன் மகன் கிதியோனை வெளியே கொண்டுவா. அவன் சாக வேண்டும். ஏனெனில், அவன் பாகாலின் பலி பீடத்தைத் தகர்த்தெறிந்தான். அதை அடுத்திருந்த அசேராக் கம்பத்தை வெட்டி வீழ்த்தினான்” என்றனர். யோவாசு தம்மை எதிர்த்து வந்த அனைவரிடமும், “நீங்கள் பாகாலுக்காகப் போராடுகிறீர்களா? அவனைக் காப்பாற்றப் போகிறீர்களா? பாகாலுக்காகப் போராடுபவன் காலைக்குள் கொல்லப்படுவான். பாகால் கடவுளாக இருந்தால், தன் பலி பீடத்தைத் தகர்த்தவனோடு, அவனே போராடிக் கொள்ளட்டும்” என்றார்.

ஆண்டவரின் ஆவி கிதியோனை ஆட்கொண்டது. கிதியோன் கடவுளிடம், “நீர் கூறியபடி இஸ்ரயேலை என்மூலம் விடுவிக்க விரும்பினால், இதோ! நான் ஆட்டுக் கம்பளியைப் போர் அடிக்கும் களத்தில் வைக்கிறேன். கம்பளிமேல் மட்டும் பனி இறங்கி இருந்து, தரைமுழுவதும் காய்ந்திருந்ததேயானால், நீர் கூறியபடி என்மூலம் இஸ்ரயேலை நீர் விடுவிப்பீர் என அறிந்து கொள்வேன்” என்றார். அவ்வாறே நடந்தது. கிதியோன் கடவுளிடத்தில், “எனக்கு எதிராக நீர் சினம் கொள்ளாதீர். மீண்டும் ஒரு முறை நான் பேசுகிறேன். இன்னும் ஒருமுறை மட்டும் நான் கம்பளியால் சோதித்துப் பார்க்கிறேன். கம்பளி மட்டும் உலர்ந்திருக்க வேண்டும். தரைமீதெங்கும் பனி இறங்கி இருக்க வேண்டும்” என்றார். அவ்விரவில் ஆண்டவர் அவ்வாறே செய்தார். கம்பளி மட்டும் உலர்ந்திருக்க, தரை மீதெங்கும் பனி இறங்கி இருந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 May 2023, 14:37